‛1973ல் எம்ஜிஆர் கூறிய வார்த்தை’.. தொடர்ந்து பின்பற்றும் சைதை துரைசாமி! மகன் நினைவேந்தலில் உருக்கம்
சென்னை: 1973ல் எம்ஜிஆர் கூறிய வார்த்தையை தொடர்ந்து பின்பற்றி வருவதாகவும், தனது தற்போதைய நிலைக்கு அவர் கூறிய கட்டளை தான் காரணம் என சைதை துரைசாமி தனது மகன் வெற்றியின் நினைவேந்தல் நிகழ்ச்சியில் கூறி கலங்க வைத்தார்.
சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயர் சைதை துரைசாமி. அதிமுகவை சேர்ந்தவர். இவர் மனிதநேயம் என்ற மையத்தின் மூலம் ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட பல்வேறு அரசு துறை பணிகளுக்கு தயாராகும் மாணவ-மாணவிகளுக்கு பயிற்சி வழங்கி வருகிறார்.

இவரது மகன் வெற்றி துரைசாமி. திரைப்பட இயக்குனரான இவர் புதிய படப்பிடிப்பு தளத்தை பார்க்க இமாச்சல பிரதேசம் சென்றபோது விபத்தில் சிக்கி பலியானார்.
கடந்த 4ம் தேதி இமாச்சல பிரதேச மாநிலத்தில் வெற்றி துரைசாமி பயணித்த கார் சட்லஜ் நதியில் விழுந்து விபத்துக்குள்ளானது. கார் டிரைவர் பலியான நிலையில் வெற்றி துரைசாமியின் உதவியாளர் கோபிநாத் மீட்கப்பட்டார். ஆனால் வெற்றி துரைசாமி மாயமானார். சட்லஜ் ஆற்றில் உடல் தேடப்பட்டது. 8 நாட்களுக்குப் பிறகு வெற்றி துரைசாமியின் உடல் கிடைத்தது. விபத்து நடந்த இடத்தில் இருந்து, 2 கிலோ மீட்டர் தொலைவில் வெற்றியின் உடல் மீட்கப்பட்டது.
இதையடுத்து அவரது உடல் தனிவிமானத்தில் சென்னை கொண்டு வரப்பட்டு தகனம் செய்யப்பட்டது. இந்நிலையில் தான் வெற்றி துரைசாமியின் நினைவேந்தல் நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடந்தது. இதில் வெற்றியின் படத்துக்கு சைதை துரைசாமி மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். அதன்பிறகு சைதை துரைசாமி நிகழ்ச்சியில் உருக்கமாக பேசினார். இந்த வேளையில் 1973ல் எம்ஜிஆர் தன்னிடம் கூறிய விஷயத்தை சைதை துரைசாமி பகிர்ந்து கொண்டார். இதுபற்றி சைதை துரைசாமி கூறியதாவது:
புரட்சி தலைவர் எம்ஜிஆர் 1973ம் ஆண்டு எனக்கு அறிவுரை கூறினார். பொதுவாழ்க்கை ஆனாலும், தனிவாழ்க்கை ஆனாலும் சேவையை பிரதானப்படுத்தி அமைத்து கொள் என்றார். இது அறிவுரை அல்ல. ஆனால் அறிவுரை அல்லது ஆலோசனையாக எடுத்து கொள் என்றார். அப்போது இது அறிவுரையும் இல்லை. ஆலோசனையும் இல்லை. இது அரச கட்டளை. இதனை வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து கடைப்பிடிப்பேன் என்றேன். அதை நோக்கிய பயணத்தை மேற்கொள்வேன் என்று கூறினேன்.
என்னுடைய வாழ்க்கை என்பது சக மனிதர்களுக்காக அர்ப்பணிக்க வேண்டும் என்று வாழ்ந்து கொண்டிருக்கிறேன். ஆனால் இந்த வாழ்க்கை சோதனை மிக்கது, துன்பமிக்கது என்று தெரிந்திருந்தும் பின்பற்றுகிறேன் என்றால் விதி வலியது என்பதை இறைவன் உணர்த்தி இருக்கிறான். இறையருள் இந்த குடும்பத்துக்கு இருக்கிறது என்றால் என் மகன் எனக்கு திரும்ப கிடைத்தது தான். அவன் உடல் கிடைக்காமல் போயிருந்தால் வாழ்க்கை துக்கத்தில், சோகத்தில் என்ன நடந்து இருக்கும் என்றே தெரியாது. இறையருளால் உடல் கிடைத்தது.
உணர்ச்சிவசப்படக்கூடாது என என்னை கட்டுப்படுத்தி இந்த நாட்களை கடந்து சென்று கொண்டிருக்கிறேன். ‛வாழ்ந்தவர் கோடி, மறைந்தவர் கோடி மக்களின் மனதில் நிற்பது யார்?' என்ற வினாவை கேட்டு அதற்கு விடையாக வாழ்ந்து கொண்டிருக்கும் புரட்சி தலைவரின் அறிவரைப்படி ‛ஓடிஓடி உழைக்கணும்.. ஊருக்கெல்லாம் கொடுக்கணும்' எனும் பாதையில் பயணித்து சமூக மாற்றத்துக்காக இந்த வாழ்க்கையை அர்ப்பணிக்கிறேன் என்று மட்டும் இந்த நினைவேந்தலில் கூறிக்கொள்கிறேன்'' என்றார்.
முன்னதாக, ‛‛அடுத்து என்ன செய்ய வேண்டும்? என்ற சிந்தனையின் அடிப்படையில் இந்த சமூகத்துக்காக, சக மனிதனுக்காக இந்த மனிதநேயத்தை விரிவாக்கம் செய்து ஆயிரக்கணக்கான மாணவர்களை உருவாக்கி அவர்கள் எல்லாம் அப்பா என சொல்ல வேண்டும் என்ற உந்து சக்தியுடன் நான் தயாராகி வருகிறேன்'' என உருக்கமாக கூறினார்.












Click it and Unblock the Notifications