மாப்பிள்ளையை சந்தித்த மந்திரி மஸ்தான்! சித்தரஞ்சன் சாலை டூ நீலாங்கரை! ருசிகர பின்னணி இது தான்!
சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மருமகன் சபரீசனை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றிருக்கிறார் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான்.
அமைச்சராகிய பிறகு முதல் முறையாக வெளிநாடு செல்வதால் இது ஒரு மரியாதை நிமித்தமான சந்திப்பு என செஞ்சி மஸ்தான் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
இதனிடையே இந்தச் சந்திப்பின் போது அமைச்சர் மஸ்தானுக்கு சபரீசன் வாழ்த்து தெரிவித்ததோடு சில ஆலோசனை டிப்ஸ்களையும் வழங்கியதாக கூறுகிறார்கள் உள்விவரம் அறிந்தவர்கள்.
இலங்கை பொருளாதார நெருக்கடி.. தமிழர்கள் நலன் காக்கப்படும்.. அமைச்சர் செஞ்சி மஸ்தான் உறுதி

சிறுபான்மையினர் நலன்
சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் போப் ஆண்டவரை சந்திப்பதற்காக இன்று வாடிகனுக்கு புறப்பட்டுச் சென்றுள்ளார். தமிழக அரசின் பிரதிநிதியாக செல்லும் இவருடன் மற்றொரு அமைச்சரான மனோ தங்கராஜும் உடன் செல்கிறார். அவர் இப்போது லண்டனில் இருப்பதால் அங்கிருந்தவாறு நேரடியாக வாடிகன் சிட்டிக்கு செல்கிறார்.

வெளிநாடு பயணம்
இதனிடையே சென்னையிலிருந்து புறப்படும் அமைச்சர் செஞ்சி மஸ்தான் நேற்றைய தினம் முதலமைச்சர் ஸ்டாலினின் மருமகன் சபரீசன் உட்பட மூத்த அமைச்சர்கள் சிலரை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றிருக்கிறார். அமைச்சராகிய பிறகு முதல்முறையாக வெளிநாடு பயணம் மேற்கொள்வதாலும் அதுவும் உலகம் முழுவதும் வாழும் கிறிஸ்துவ மக்களால் போற்றப்படக் கூடிய போப் ஆண்டவரை நேரில்
சந்தித்து பேசக்கூடிய வாய்ப்பை பெற்றதாலும் அமைச்சர் மஸ்தான் இந்தப்
பயணத்தை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கிறார்.

சபரீசன் வாழ்த்து
இந்தச் சந்திப்பின் போது அமைச்சர் மஸ்தானுக்கு சபரீசன் வாழ்த்து தெரிவித்ததோடு வாடிகன் பயணம் தொடர்பாக சில ஆலோசனைகளையும் வழங்கியதாக கூறுகிறார்கள் உள்விவரம் அறிந்தவர்கள். இதேபோல் மூத்த அமைச்சரும் திமுக பொதுச்செயலாளருமான துரைமுருகன் மற்றும் மூத்த அமைச்சர்கள் எ.வ.வேலு,
எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், மா.சுப்ரமணியன் ஆகியோரை சந்தித்து வாழ்த்து பெற்றார் அமைச்சர் மஸ்தான். இவர்களை தொடர்ந்து கனிமொழி எம்.பி.யையும் நேரில் சந்தித்து பொன்னாடை அணிவித்து வாழ்த்து பெற்றுக்கொண்டார்.

அமைச்சர்கள் பயணம்
திமுக ஆட்சி பொறுப்பேற்றது முதல் இதுவரை அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, மனோ தங்கராஜ், செஞ்சி மஸ்தான் ஆகியோர் வெளிநாடு பயணம் சென்றிருப்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே முதலமைச்சருடன் துபாய் சென்றிருந்த அமைச்சர் தங்கம் தென்னரசு அடுத்ததாக விரைவில் கொரியா பயணம் செல்லவிருப்பதாக தகவல் கசிந்துள்ளது.