"சுகேஷ்".. டெல்லியில் வெடிக்க காத்திருக்கும் "சரவெடி".. அமித் ஷா இறக்கிய பிளான் B! எடப்பாடிக்கு செக்
சென்னை: அதிமுகவில் யாராவது பாஜகவிற்கு எதிராக காய் நகர்த்தினால், அமித் ஷா பிளான் பி ஒன்றை களமிறக்குவார் என்று டெல்லி பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 2-3 நாட்களாக தமிழ்நாடு அரசியல் வட்டாரத்தில் தீவிரமாக இருக்கும் பேச்சு என்றால் அது அதிமுக கூட்டணி தொடர்பான விவாதங்கள்தான். அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி பாஜக மீது அப்செட்டில் இருப்பதாகவும், இதனால் பாஜக கூட்டணியில் இருந்து வெளியேற அதிமுக திட்டமிட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகிக்கொண்டு இருக்கின்றன.
இரண்டு காரணங்களுக்காக காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைக்கும் திட்டத்தில் எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.

காரணம் 1
அதன்படி முதல் விஷயம் அதிமுகவின் வாக்குவங்கியை மீட்பது. அதிமுகவிற்கு சிறுபான்மையினர் வாக்குகள் வெகுவாக சரிந்துவிட்டது. அதேபோல் அடிப்படை அதிமுக வாக்காளர்கள் வங்கியும் அந்த கட்சிக்கு சரிந்து உள்ளது. இதனால் எப்படியாவது அதிமுகவின் வாக்கு வங்கியை மீட்க வேண்டும் என்று எடப்பாடி முடிவு செய்து இருக்கிறாராம் . பாஜகவுடன் இருந்தால் வாக்கு வங்கியை மீட்க முடியாது என்பதால் காங்கிரசுடன் கூட்டணி வைக்கும் யோசனையில் இருக்கிறாராம் எடப்பாடி. காங்கிரஸ் இதற்கு ஓப்புக்கொள்ளும் பட்சத்தில் கூட்டணிக்கான முயற்சிகளில் எடப்பாடி இறங்க வாய்ப்பு உள்ளது என்கிறார்கள்.

காரணம் 2
இரண்டாவதாக பாஜக மேலிடம் தன்னை அவமதித்துவிட்டதாக எடப்பாடி நினைக்கிறாராம்.மதுரை விமான நிலையத்திற்கு தன்னை மட்டும் அழைக்காமல் ஓ பன்னீர்செல்வத்தையும் சேர்த்து அழைத்ததை எடப்பாடி விரும்பவில்லையாம். ஓ பன்னீர்செல்வத்துடன் என்னை சமமாக நடத்தியதை ஏற்றுக்கொள்ள முடியாது. என்னை அவமதித்துவிட்டனர் என்று எடப்பாடி பழனிசாமி நினைக்கிறாராம். இதனால் பாஜகவிற்கு பயம் காட்டும் விதமாக காங்கிரசுடன் இணையும் யோசனையில் எடப்பாடி இருக்கிறாராம்.

பாஜக
ஆனால் இதை எல்லாம் பார்த்து பாஜக பயப்படவில்லை என்கிறார்கள் டெல்லி அரசியல் வட்டாரத்தினர். பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக எளிதில் வெளியேற முடியாது. அதிமுக நிறைய வழக்குகளில் சிக்கி இருக்கிறது. அதனால் எளிதாக பாஜகவை கழற்றிவிட முடியாது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி அமையாமல் போனது சின்ன விஷயம். ஆனால் அது லோக்சபா 2024 தேர்தலில் நடக்காது. அமித் ஷா அதற்கு அனுமதிக்கா மாட்டார் என்கிறார்கள் டெல்லி வட்டாரத்தினர்.

சின்னம்
ஓ பன்னீர்செல்வம் - எடப்பாடி இணைந்து செயல்பட வேண்டும் என்று பாஜக நினைக்கிறது. ஆனால் ஓ பன்னீர்செல்வத்துடன் இணைய மறுத்து, பாஜக கூட்டணியை துறக்கும் முடிவை எடப்பாடி எடுத்தால் , பாஜக அதை எதிர்க்க வேறு அஸ்திரங்களை பயன்படுத்தும் என்கிறார்கள் டெல்லி வட்டாரத்தினர். அதாவது எடப்பாடியை அடக்கம் விதமாக இரட்டை இலை சின்னத்தையே முடக்கும் முயற்சிகளை கூட பாஜக டெல்லியில் செய்யும். ஓபிஎஸ் - இபிஎஸ் மோதலை வைத்து சின்னத்தை முடக்க அழுத்தம் கொடுக்கும்.

கூட்டணி
ஓபிஎஸ் - இபிஎஸ் ஒன்றாக இருக்க வேண்டும், அவர்கள் எங்களுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்பதே பாஜகவின் நிலைப்பாடு. இதை எடப்பாடி மீற நினைத்தால் அமித் ஷா இந்த சின்னத்தை முடக்கும் அஸ்திரத்தை எடுப்பார். அதோடு இரட்டை இலை சின்ன வழக்கில் லஞ்சம் கொடுத்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட சுகேஷ் சந்திரா இப்போது பாஜக ஆதரவாளர் போல பேசி வருகிறார். ஆம் ஆத்மிக்கு எதிராக கடுமையாக புகார்களை வைக்கிறார்.

வழக்கு
இரட்டை இலை லஞ்ச வழக்கு இன்னும் முடியவில்லை. இதில் டிடிவி தினகரன் விடுவிக்கப்பட்டாலும் வழக்கு இன்னும் நிலுவையில்தான் இருக்கிறது. இதையும் கூட டெல்லி அதிமுகவிற்கு எதிராக பயன்படுத்தலாம். அதாவது இரட்டை இலை சின்னத்தை பெறுவதில் முறைகேடு நடந்தது என்று கூறி மொத்தமாக சின்னத்தையே தேர்தல் நேரத்தில் முடக்கும் வேலையை கூட தேர்தல் ஆணையம் வழியாக டெல்லி செய்யும் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். மொத்தத்தில் பாஜகவிடம் இருந்து அதிமுக வெளியேற முடியாது.. அப்படியே முயன்றால் விளைவுகள் மோசமாக இருக்கும் என்கிறார்கள் !












Click it and Unblock the Notifications