இனி டெல்லி கையில்! திமுகவின் 6 "ஆக்சன்கள்".. ஆளுநர் பதிலுக்கு தரும் "ரியாக்சன்".. ப்பா ஸ்மார்ட் மூவ்
சென்னை: திமுகவின் தொடர் நெருக்கடிகள், அரசியல் அஸ்திரங்களை தொடர்ந்து ஆளுநர் ரவி நீட் விலக்கு மசோதாவை டெல்லிக்கு அனுப்ப போவதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆளுநரின் இந்த முடிவிற்கு பின் வேறு சில காரணங்களும் இருக்கின்றன.
தமிழ்நாட்டில் நீட் தேர்வு விவகாரம் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. நீட் விலக்கு மசோதா மீதான விவாதம் மீண்டும் தமிழ்நாட்டில் உச்சம் தொட்டுள்ளது. நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு பெற வேண்டும் என்று ஆளும் திமுக அரசு முயன்று கொண்டு இருக்கிறது.
இதற்காக ஏற்கனவே தமிழ்நாடு அரசு மசோதா நிறைவேற்றி ஆளுநர் ஆர். என் ரவிக்கு அனுப்பியது.

ஏற்கவில்லை
ஆனால் அரசு அனுப்பிய மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் ஆர். என் ரவி அதை திருப்பி அனுப்பினார். பின்னர் மீண்டும் திமுக சார்பாக இதே மசோதா நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து ஆளுநர் இந்த மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழ்நாடு சட்டசபையில் இரண்டாவது முறையாக நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு சட்ட மசோதாவிற்கு ஆளுநர் ஆர். என் ரவி ஒப்புதல் அளிக்க போவதாக பிபிசி செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு அரசுக்கு விரைவில் ஆளுநர் தரப்பு அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிட உள்ளதாக தகவல்கள் வருகின்றன.

திமுக 6 ஆக்சன்
திமுக ஆளுநர் தரப்பிற்கு எதிராக எடுத்த 6 ஆக்சன்கள்தான் ஆளுநரின் இந்த முடிவிற்கு முக்கிய காரணமாக அமைந்தது.
ஆக்சன் 1- தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்ப பெறக்கோரி, மக்களவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவர திமுக நோட்டீஸ் அனுப்பியது. இது ஏற்கப்படவில்லை என்றாலும் மிக முக்கியமான தீர்மானமாக பார்க்கப்பட்டது.
ஆக்சன் 2 - மாநிலங்களவையில் பேசிய திமுக எம்.பி. வில்சன் ஆளுநர்களின் அதிகாரத்திற்கு எதிராக மசோதா தாக்கல் செய்தார். அதில், மாநில சட்டமன்றங்களால் அனுப்பப்படும் மசோதாக்கள் மீது கவர்னர்கள் முடிவெடுப்பதற்கான காலக்கெடுவை நிர்ணயிக்க வேண்டும். இதற்காக இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 200-வது பிரிவை திருத்த வேண்டும் என்று தனி உறுப்பினர் மசோதாவை தாக்கல் செய்தது.
ஆக்சன் 3 - ஆளுநருக்கு எதிராக பிரதமர் மோடியிடம் டெல்லி பயணத்தின் போது முதல்வர் ஸ்டாலின் முறையிட்டார்.

பலத்த எதிர்ப்பு
ஆக்சன் 4 - ஆளுநரை கடுமையாக எதிர்க்கும் வகையில் அவருக்கு எதிராக திமுகவின் அதிகாரபூர்வ நாளிதழான முரசொலியில் அடுத்தடுத்து பல்வேறு கட்டுரைகள் வெளியிடப்பட்டு அவருக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது.
ஆக்சன் 5 - தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நேற்று ஆளுநர் ரவி ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்து கொடுத்தார். வழக்கமாக கொடுக்கப்படும் இந்த விருந்தில் நேற்று ஆளும் திமுக கலந்து கொள்ளவில்லை. மாறாக பாஜக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் இந்த விருந்தில் கலந்து கொண்டன.
ஆக்சன் 6 - இது போக சமீபத்தில் பட்ஜெட் கூட்டத்தொடரிலேயே நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், மக்களால் தேர்வு செய்யப்பட்ட நாம் நிறைவேற்றிய சட்டங்கள் ஆளுனரிடமோ அல்லது குடியரசுத் தலைவரிடமோ முடங்கி உள்ளது. இன்று வரை 19 நிறைவேற்றப்பட்ட சட்டங்கள் ஆளுநர், குடியரசுத் தலைவர் ஏற்காத காரணத்தால் முடங்கி உள்ளது. இது எப்படி ஜனநாயகம். இது நியாயம் ஆகும் என்று கடுமையாக ஆளுநரை விமர்சனம் செய்து இருந்தார். முதல்வர் ஸ்டாலினும் ஆளுநரை விமர்சித்து கடுமையாக பேசினார்.

ரியாக்சன்
இதற்கு ஆளுநர் கொடுத்த ரியாக்சன் தற்போது மசோதாவிற்கான ஒப்புதல் என்று கூறப்படுகிறது. அதன்படி நீட் விலக்கு சட்ட மசோதாவிற்கு ஆளுநர் ஆர். என் ரவி ஒப்புதல் அளிக்க போவதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் ஆளுநர் தரப்பில் இருந்து அதிகாரபூர்வமாக இந்த அறிவிப்பு வெளியாகவில்லை. தமிழ்நாடு அரசின் எதிர்ப்பு அதிகரித்து வருவதால் பந்தை டெல்லி மைதானத்திற்கு அனுப்பி ஆளுநர் ரவி முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இது ஒருவகையில் ஸ்மார்ட் மூவ்.

வேறு சில காரணம்
ஏனென்றால் ஆளுநர் ஒருவேளை இந்த மசோதாவை குடியரசுத் தலைவருக்கு ஆளுனர் ரவி அனுப்பும் பட்சத்தில் பிரச்சனை டெல்லிக்கு சென்று விடும். அந்த மசோதாவில் குடியரசுத் தலைவர்தான் முடிவு எடுக்க வேண்டும். அதன்படி சட்ட விதி 201 மூலம் இந்த நீட் மசோதாவில் உச்ச பட்ச முடிவு எடுக்கும் அதிகாரம் குடியரசுத் தலைவருக்கு உள்ளது. அவர் இந்த மசோதாவை தேவைப்படும் பட்சத்தில் ஏற்கலாம். அல்லது மசோதாவை மீண்டும் ஆளுநருக்கு திருப்பி அனுப்பலாம்.

மசோதா
ஆளுநருக்கு மசோதாவை திருப்பி அனுப்பி அதில் திருத்தம் செய்யவோ மீண்டும் மசோதாவை நிறைவேற்றும் படியோ கூறலாம். இதையடுத்து மீண்டும் மசோதாவை நிறைவேற்ற வேண்டிய கட்டாயம் தமிழ்நாடு அரசுக்கு ஏற்படும். இதனால் தமிழ்நாடு அரசுக்கும் ஆளுநருக்கும் இடையிலான மோதல் முடிவிற்கு வரும். இறுதி முடிவு குடியரசுத் தலைவர் கைக்கு சென்றுவிடும். நீட் விவகாரத்தில் இதனால் வரும் நாட்களில் முக்கிய திருப்பங்கள் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications