"சம்மட்டி அடி".. சறுக்கும் சீமான் அரசியல்.. 100 நாள் வேலை திட்டத்தை எதிர்த்ததால்.. பெரும் பின்னடைவு?
சீமான் அரசியல் வளர்ச்சியா? சறுக்கலா என்ற விவாதங்கள் நடந்து வருகிறது
சென்னை: திமுக மீதான சீமானின் விமர்சனங்கள் அதிகரித்துள்ளன.. அடுத்தடுத்து தேர்தல்கள் வரும் நிலையில், நாம் தமிழர் கட்சி எத்தகைய பாதையில் அரசியலை நகர்த்தி வருகிறது? சீமானுக்கான செல்வாக்கு இப்போது சரிந்துள்ளதா? பெருகியுள்ளதா? என்ற கேள்வியும் எழுகிறது... ஊரக உள்ளாட்சி தேர்தலில் நாம் தமிழர் கட்சி டெபாசிட்டை இழக்கும் நிலைமைக்கு வந்துள்ளது.
திமுகவை கடந்த 10 வருடமாகவே காட்டமாக விமர்சித்து வருபவர் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்.. ஆனால், இந்த முறை திமுக ஆட்சியை பிடிக்கவும், முதல்வர் ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்தார் சீமான்.
சீமானின் தந்தை மரணமடைந்த நிலையில், ஸ்டாலினும் சீமானுக்கு போன் செய்து, ஆறுதல் தெரிவித்தார்... அத்துடன் செய்தியாளர்களிடம் பேசும்போது, போன் செய்து பேசியதால் நெகிழ்ந்து போனேன், கொரோனா செயல்பாடுகளும் சிறப்பாக உள்ளதாக பாராட்டினார்.

உள்ளாட்சி தேர்தல்
ஒருவேளை சீமான், உள்ளாட்சி தேர்தலில் திமுகவுடன் கூட்டணி வைக்க போகிறாரோ? அதற்கான அச்சாரமா? இது என்றும் கருத்துக்கள் பதிவாகின.. அதற்கேற்றபடி, நாம் தமிழர் கட்சி தரப்பில் இருந்து, யாருமே திமுக ஆட்சி மீது விமர்சனத்தை வைக்காமல் இருந்தனர். வழக்கம்போல் உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டி என்று சீமான் அறிவித்துவிட்டு, பிரச்சாரத்தில் கவனம் செலுத்த தொடங்கியபிறகுதான் ஒவ்வொரு பிரச்சனையாக வெடித்தது..

பரபரப்பு
எத்தனையோ குறைகளை திமுக அரசு மீது சீமான் சொல்லி வந்தாலும், 3 குற்றச்சாட்டுகள் பரபரப்பாக பேசப்பட்டன.. முதல் விஷயமாக, சீமான் ஒரு ட்வீட் பதிவிட்டிருந்தார். அதில், "திமுகதான் எல்லாவற்றையும் தீர்க்கும் மாமருந்து, எல்லா பிரச்னைகளையும் 100 நாட்களில் தீர்த்து விடுவோம் எனுறு வானளவில் அளந்தனர்.. 50 நாட்களை கடந்துவிட்டோம்.. பிரச்னைகளை தீர்ப்பதற்கான எந்தவித அறிகுறிகளும் தென்படவில்லை, மக்களின் பிரச்னைகளை கடிதங்களாய் பெற்ற பெட்டி எங்கே? சாவி தொலைத்துவிட்டதா" என்று கேட்டிருந்தார்.

வேலை நாள் திட்டம்
அடுத்ததாக, 100 நாள் வேலை திட்டத்தை சீண்டி பேட்டி தந்திருந்தார்.. "கிராமப்புறங்களில் செயல்படுத்தப்படும் 100 நாள் வேலை திட்டம் என்பது வெட்டி வேலை.. அதை ஒழிக்க வேண்டும்.. வேளாண்மை செய்வதற்கு ஆட்களே வரவில்லை எனும்போது, வேளாண்மைக்கு என எதற்காக தனி பட்ஜெட்... அதனால் என்ன பயன் வரப்போகிறது? எத்தனை ஏரிகள் குளங்கள் தமிழ் நாட்டில் தூர் வாரப்பட்டுள்ளன? என்று கேள்வி எழுப்பினார்.

விமர்சனங்கள்
சீமானின் இந்த பேச்சு கடும் விமர்சனங்களுக்குள்ளானது.. "மன்னிப்பு கேள் சீமான்" என்ற ஹேஷ்டேக் டிரெண்டானது.. கம்யூனிஸ்ட்டுகளும், காங்கிரசும் கொந்தளித்துவிட்டனர்.. சீமான் இந்த பேட்டி தந்தது முதலே அவருக்கான சறுக்கல்கள் ஆரம்பமாகிவிட்டன.. முந்தைய காலகட்டங்களைவிட, திமுகவுடன் சீமான் நேரடியாகவும், அதிகமாகவும் மோத என்ன காரணம்? என்ன மாதிரியான அரசியலை சீமான் முன்னெடுக்க விரும்புகிறார்? என்ற எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன.

முதல்வர் ஸ்டாலின்
இதற்கு இரு வேறு கருத்துக்களும் சொல்லப்படுகின்றன.. வழக்கமாக, திமுகவை பாஜகதான் அதிகமாக எதிர்க்கும்.. ஆனால், இந்த 2 மாத காலமாகவே, தமிழக பாஜக திமுகவை பெரிய அளவுக்கு எதிர்க்கவில்லை.. கோயிலை திறக்க வேண்டும் என்று மாநில தலைவர் அண்ணாமலை மட்டும் அடையாள ஆர்ப்பாட்டத்தை நடத்தினாரே தவிர, அதுவும் பெரிய அளவுக்கு எடுபடவில்லை. இந்த நேரத்தில், பாஜகவிட காட்டமாக திமுகவை சீமான் விமர்சிப்பது சரிதான் என்கிறது ஒரு தரப்பு.

ஆளும் கட்சி
கட்சிக்குள் உள்ள பிரச்சனைகளை சமாளிக்கவே அதிமுகவுக்கு நேரம் சரியாக இருக்கும்போது, திமுகவை கேள்வி கேட்கவும், விமர்சிக்கவும் சீமானை போன்ற ஒருவர் இருந்தால் மட்டுமே, ஆளும் கட்சியின் செயல்பாடுகள் இருக்கும்.. தன்னை தட்டிக் கேட்க யாருமே இல்லாத துணிச்சல், எந்த ஒரு அரசுக்கும் வந்துவிடக்கூடாது, அதனாலேயே சீமான் திமுகவை விமர்சிக்கிறார்" என்று ஆதரவாக கருத்துக்களை சிலர் சொல்கிறார்கள்.

கரும்பு சின்னம்
மற்றொரு தரப்பிலோ சீமானை சரமாரியாக கண்டிக்கிறார்கள்.. எந்த நேரமும் பாஜகவின் மறைமுக ஆதரவாளர் போலவே சீமானின் பேச்சுக்கள் இருக்கின்றன.. விவசாய கரும்பு சின்னத்தை மட்டும் பெற்றிருந்தால் போதுமா, வேளாண் கொள்கை குறித்து பாஜக அரசை இப்போதுவரை ஏன் விமர்சிக்காமல் இருக்கிறார்? வேலையில்லாமல் இருக்கிற நாட்களின் ஏழைகளின் துயரை துடைக்க கொண்டு வரப்பட்ட திட்டத்தின் அவசியத்தைகூட புரிந்து கொள்ளாமல், அந்த திட்டத்தை எப்படி கொச்சைப்படுத்தலாம்?

பாஜக
இதே சீமான் அம்பானியையும், அதானியையும் கேள்வி கேட்க வேண்டியதுதானே? 100 நாள் திட்டத்தை அடியோடு காலி செய்ய எண்ணுவது ஒரு தலைவனுக்கு அழகில்லை என்பன போன்ற எதிர்ப்புகளும் பெருகிவிட்டன. சீமானின் இந்த போக்கு நிச்சயம், உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் எதிரொலிக்கும் என்றும் அரசியல் நோக்கர்கள் கணித்தார்கள்.. 2019 எம்பி தேர்தலில் 3.35 சதவீத வாக்குகளை பெற்ற நாம் தமிழர் கட்சி, கடந்த சட்டப்பேரவை தேர்தலில் 7 விழுக்காடு அளவுக்கு தன்னை உயர்த்தி கொண்டது.. இந்த வாக்கு சதவீதத்தை மேலும் அதிகரித்து கொள்ள சீமான் எடுத்துள்ள அஸ்திரம்தான் "திமுக அரசு" என்கிறார்கள்.

திமுக
இதற்கு 2 காரணங்கள் சொல்கிறார்கள்.. ஒன்று,. திமுகவை சீண்டினால் மட்டுமே அது வாக்காக மாறும் என்று சீமான் நினைக்கிறார்.. களத்தில் ஸ்டாலின் Vs சீமான் என்ற பிம்பத்தை ஏற்படுத்த முனைகிறார், அதற்காகவே, திமுகவை தேவையில்லாமல் விமர்சித்து குற்றஞ்சாட்டி வருகிறார் என்கிறார்கள்.. மற்றொன்று, விஜயலட்சுமி விவகாரம் விஸ்வரூபமெடுத்துவிட்டது.. ஏற்கனவே விஜயலட்சுமி ஒரு வீடியோ பதிவிட்டு முதல்வர் வரை தனக்கு சீமானிடமிருந்து நியாயம் வேண்டும் என்று கேட்டிருந்தார். மாஜி அமைச்சர் மணிகண்டன் மீதும், சிவசங்கர் பாபா மீதும் விமர்சனம் எடுக்கும் திமுக அரசு, நிச்சயம் தன் மீதும் கவனத்தை திருப்பும் என்பதை சீமானும் உணர்ந்துள்ளார்..

விஜயலட்சுமி
அதற்காகவே திமுகவை முந்தி கொள்வதற்கு குற்றஞ்சாட்டி வருகிறார் என்கிறார்கள்.. அதுமட்டுமல்ல, 100 நாள் வேலை திட்டம் என்பது அதிமுக ஆட்சி காலத்தில் இருந்தே நடைமுறையில் உள்ள போது, திமுக ஆட்சி அமைந்ததும் அதை பற்றி ஏன் விமர்சிக்க வேண்டும்? என்றும் கேள்வி எழுப்புகிறார்கள். ஆக மொத்தம், சீமானின் அரசியல் எத்தகையது என்று இப்போது வரை புரியவில்லை.. சீமான், அதிமுகவின் பிம்பமா? அல்லது பாஜகவின் சாயலா? அல்லது சிங்கிள் சிங்கமா? என்பதெல்லாம் இனி வரும் நாட்களில் அவர் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியையும் பொருத்தே அமையும்..!

வாக்கு சதவீதம்
வழக்கமாக உள்ளாட்சி தேர்தலில் தன் கட்சி பலத்தை நிரூபிப்பார் சீமான்.. கடந்த முறையும் அப்படித்தான் வாக்கு சதவீதத்தை உயர்த்தி 3வது இடத்தை பிடித்தார்.. ஆனால், இந்த முறை இதுவரை இல்லாத தோல்வியை தழுவி கொண்டிருக்கிறது நாம் தமிழர் கட்சி... ஊரக உள்ளாட்சி தேர்தலில் மாவட்ட கவுன்சிலர் மற்றும் ஒன்றிய கவுன்சிலர் ஆகிய 2 பதவிக்கான தேர்தலில் நாம் தமிழர் கட்சி பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது.

கவுன்சிலர்கள்
மாவட்ட கவுன்சிலர்கள் மொத்த இடங்கள் 140-ல் ஒன்றில்கூட நாம் தமிழர் கட்சி இல்லை.. ஒன்றிய கவுன்சிலர்கள் மொத்த இடங்கள் 1381-லும், ஒன்றில்கூட நாம் தமிழர் கட்சி வெற்றி பெறவில்லை. அதைவிட ஆச்சரியம், 10 வருடமாக தேர்தலை சந்தித்து, அரசியல் நடத்தி வரும் சீமானைவிட, விஜய் மக்கள் இயக்கம் சார்பில் போட்டியிட்டவர்கள் வெற்றிவாகை சூடியுள்ளது பெருத்த வியப்பை ஏற்படுத்தி வருகிறது..

பேரிடி
போட்டியிட்ட விஜய் மக்கள் இயக்கத்தினர் 49 பேர் வார்டு உறுப்பினர்கள் பதவிகளை கைப்பற்றியுள்ளனர். விஜய் அரசியலுக்கு வந்துவிடக்கூடாது என்பதில், ஆரம்பத்தில் இருந்தே கவனமாக இருந்து வருகிறார் சீமான்.. இதுகுறித்து ஏற்கனவே 2 முறை செய்தியாளர்கள் பேட்டியின்போதும், விஜய்யை விமர்சித்து ரசிகர்களிடம் கண்டனங்களையும் அதிருப்தியையும் பெற்றுக் கொண்டது நினைவுகூரத்தக்கது.

குற்றச்சாட்டு
எப்போது என்ன தேர்தல் நடந்தாலும், அதன் முடிவுகள் வெளிவந்த உடனேயே, வெற்றி பெற்ற 2 கட்சிகளும் பணத்தை கொடுத்து வாக்குகளை வாங்கிவிட்டனர் என்கிற தொடர் குற்றச்சாட்டை முன்வைத்து வரும் சீமான், இந்த முறையும் அதே குற்றச்சாட்டை முன்வைக்க முடியாது.. அப்படியே திமுக மீது விமர்சனம் வைத்தாலும், அதை தமிழக மக்கள் இனியும் நம்ப தயாராக இல்லை.

அரசியல் வியூகம்
என்னதான், பெண் வேட்பாளர்களுக்கு சம உரிமை வழங்கினாலும், பொதுத் தொகுதியில் ஆதி தமிழருக்கு இடம், இஸ்லாமிய தமிழர்களுக்கு மற்ற எல்லாக் கட்சிகளை காட்டிலும் அதிக வாய்ப்புகள் தந்தாலும், சீமானின் அரசியல் தொடர்ந்து சறுக்கிவிட்டு கொண்டிருக்கிறது.. கடந்த 10 வருடங்களாக தன் கட்சி மீதான எந்தவித எதிர்பார்ப்பையும் தமிழக மக்களிடம் ஏற்படுத்த முடியாத நிலையில், இனியாவது தன்னுடைய அரசியல் வியூகத்தை சீமான் மாற்றி கொள்ள வேண்டும் என்ற நெருக்கடி ஏற்பட்டுள்ளது.. அத்துடன் சீமான் செல்ல வேண்டிய தூரம் இன்னும் நிறைய உள்ளது என்பதையே இன்றைய உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் எடுத்துக்காட்டி உள்ளது.












Click it and Unblock the Notifications