பொங்கல் கிப்ட் + ரூ.1000 பணம்.. தமிழக ரேஷன் கடை ஊழியர்கள் கிளப்பிய மேட்டர்.. கோட்டைக்கு கோரிக்கை
சென்னை: பொங்கல் பரிசு தொகுப்பினை தமிழக மக்கள் பெற்றுள்ள நிலையில், தமிழக அரசுக்கு ஒரு முக்கிய கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகிக்கப்பட்டு வருகிறது. இந்த பணியினை ரேஷன் கடை ஊழியர்கள் செய்து வருகிறார்கள்..

ஆனால், ரேஷன் கடை ஊழியர்களுக்கும் சில அடிப்படை தேவைகள் இருந்து வருகின்றன.. இதை வலியுறுத்தி காலவரையற்ற போராட்டத்தையும் தமிழகத்தில் நடத்தி வந்தனர்.
கோரிக்கைகள்: குறிப்பாக, பொது விநியோக திட்டத்துக்கென தனித்துறையை உருவாக்க வேண்டும், அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் சரியான எடையில் பொட்டலமாக வழங்க வேண்டும், தமிழக அரசு, தொழிலாளர்களின் வேலை நேரத்தை 12 மணி நேரமாக உயர்த்துவதை ரத்து செய்ய வேண்டும் என்பது உட்பட 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ரேஷன் கடை ஊழியர்கள் தமிழகம் முழுவதும் பல காலமாகவே, போராட்டத்தை முன்னெடுத்து வந்தனர்..
அத்துடன், அத்தியாவசிய பொருட்கள் அளவு, விலை மற்றும் கூடுதல் தொகையுடன் கூடிய ரசீது வழங்கும் வகையில் புதிய 4ஜி விற்பனை முனையம், 4ஜி சிம்கார்டுகள் வழங்கப்பட வேண்டும், விற்பனை முனையத்தில் 2 முறை விற்பனை பதிவு முறையை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளையும் ஊழியர்கள் வலியுறுத்தி வந்தனர்.
அகவிலைப்படி: இதுநாள்வரையிலும், ரேஷன் கடை ஊழியர்களுக்கு 14 சதவிகிதம் அகவிலைப்படி வழங்கப்பட்டு வந்த நிலையில் அரசு ஊழியர்களைப்போலவே, ரேஷன் கடை ஊழியர்களுக்கும் அகவிலைப்படி உயர்த்தப்பட்டு மொத்தம் 28 சதவிகிதம் அகவிலைப்படி வழங்க தமிழக அரசு நேற்றைய தினம் உத்தரவிட்டுள்ளது.
இதனால் தமிழகத்தில் ரேஷன் கடைகளில் பணியாற்றும் 19,658 விற்பனையாளர்கள், 2,752 கட்டுநர்கள் பயன்பெறுவர் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்த அகவிலைப்படி உயர்வு கடந்த ஜனவரி 1 முதல் முன்தேதியிட்டு கணக்கிட்டு வழங்கப்படும் என்றும் கூடுதலாக அறிவிக்கப்பட்டுள்ளது.. 22,510 பணியாளர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்குவதன் மூலம் அரசுக்கு 73 கோடி ரூபாய் கூடுதல் செலவு ஏற்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
பொங்கல் பரிசு: இந்நிலையில், மீண்டும் ஒரு கோரிக்கையை, ரேஷன் கடை ஊழியர்கள் தமிழக அரசுக்கு விடுத்துள்ளனர்.. ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகம் செய்ததற்காக ஏற்பட்ட கூடுதல் பணிக்காக தினமும் தலா 500 ரூபாய் வீதம், மொத்தம் 5 நாட்களுக்கு, 2,500 ரூபாய் வழங்க வேண்டும் என்பதே அந்த கோரிக்கையாகும்.
இதுகுறித்து, தமிழக அரசு ரேஷன் கடை பணியாளர் சங்க தலைவர் ஜி.ராஜேந்திரன் அறிக்கை ஒன்றையும் விடுத்திருக்கிறார்.. அந்த அறிக்கையில், "பொங்கல் பரிசு வாங்க எந்த தேதி, நேரத்திற்கு வர வேண்டும் என்ற விபரம் அடங்கிய டோக்கனை, கார்டுதாரர் வீடுகளில் வழங்கும் பணியில் இம்மாதம், 7ம் தேதி முதல் ரேஷன் ஊழியர்கள் ஈடுபட்டனர்.
கோரிக்கை: பிறகு, ஊழியர் பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு சிரமங்களுக்கு இடையே கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கினார்கள்.. கரும்பு எடுத்து வர வாகன வாடகை போன்றவற்றை, ஊழியர்கள் தம்முடைய சொந்த செலவில் மேற்கொண்டனர். அதனால், ரேஷன் ஊழியர்களுக்கு தினமும் தலா, 500 ரூபாய் என்று, மொத்தம் ஐந்து நாட்களுக்கு 2,500 ரூபாயை, தமிழக அரசு வழங்க வேண்டும்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications