45 நாளில் இந்தியாவில் மொத்தம் 30 லட்சம் வாட்ஸ்அப் அக்கவுண்ட் போச்சு.. கிடுக்கிப்பிடி கண்காணிப்பு!
சென்னை: வாட்ஸ்அப் வெளியிட்ட தகவலின்படி, ஜூன் 16 மற்றும் ஜூலை 31 க்கு இடைப்பட்ட 45 நாட்களில் 30 லட்சத்து 27,000 இந்திய வாட்ஸ்அப் கணக்குகள் தடை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய அரசின் புதிய தகவல் தொழில்நுட்ப கொள்கைகள் இந்த ஆண்டு மே 26ம் தேதி முதல் அமலுக்கு வந்தன. இதன்படி, 50 லட்சத்துக்கும் அதிகமான பயனாளர்களை கொண்டிருக்கும் சமூக ஊடகங்கள் அனைத்தும் மாதாந்திர இணக்க அறிக்கையை வெளியிட வேண்டும்.
அந்த அறிக்கையில், தளத்தில் பெறப்பட்ட புகார்கள் மற்றும் புகார்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைக் குறித்து தெரிவிக்கப்பட்டிருக்க வேண்டும்.

கண்காணிக்கும் வாட்ஸ்அப்
வாட்ஸ்அப் தனது சமூக வலைத்தளம் என்ட்-டு-என்ட் என்க்ரிப்ட் செய்யப்பட்டிருப்பதாக தெரிவிப்பதால், அதனால் அதை வேறு நபர்கள் படிக்க முடியாது. ஆனால், பயனர்களின் புகார்கள், செயற்கை நுண்ணறிவு போன்றவற்றின் அடிப்படையில் சந்தேகத்திற்கிடமான வாட்ஸ்அப் கணக்குகள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

30 லட்சம் வாட்ஸ்அப் கணக்குகள்
இதன்படிதான் 30 லட்சத்திற்கும் அதிக வாட்ஸ்அப் கணக்குகள் தடை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தடைச்செய்யப்பட்ட இந்திய கணக்குகளில் 95 சதவிகிதத்திற்கும் அதிகமானவை அங்கீகரிக்கப்படாத தானியங்கி அல்லது மொத்த மெசேஜ் செய்த காரணங்களுக்காக தடைச் செய்யப்பட்டதாக வாட்ஸ்அப் தெரிவித்துள்ளது.

இந்திய பயனர்கள் தகவல்
46 நாட்கள் காலத்தில் இந்திய பயனர்களிடமிருந்து மொத்தம் 594 குறைகள் பெறப்பட்டன, அவற்றில் 316 தடை தொடர்பான முறையீடுகள் என்று அறிக்கை குறிப்பிடுகிறது. அதாவது குறிப்பிட்ட அக்கவுண்ட்டை தடை செய்ய பயனாளர்களே புகார் கொடுத்துள்ளனர். மேலும், பயனர்களின் குறைகளில் 137 கணக்கு சப்போர்ட் தொடர்பானது, மீதமுள்ளவை பாதுகாப்பு மற்றும் தயாரிப்பு சப்போர்ட் தொடர்பானவை.

உலகம் முழுக்க
வாட்ஸ்அப் சமூக வலைத்தளம் மூலமாக நடைபெறும் முறைகேடுகளைக் கட்டுப்படுத்த ஒவ்வொரு மாதமும் சராசரியாக உலகம் முழுவதும் 80 லட்சம் கணக்குகளைத் தடை செய்வதாகவும் வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications