பிற மாநிலங்களை ஒப்பிடும் போது.. தமிழ்நாடு மிகவும் பாதுகாப்பானது.. பாராட்டி பேசிய ஆளுநர் ஆர்.என். ரவி
சென்னை: பிற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில், தமிழ்நாடு மிகவும் பாதுகாப்பான மாநிலம் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி பேசினார்.
தமிழக அரசுக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் பல்வேறு கருத்து மோதல் வெடித்து வருகிறது. தமிழக அரசு குறித்தும் திமுகவின் கொள்கைகள் ஆகியவற்றையும் அவ்வப்போது மறைமுகமாக விமர்சித்து ஆளுநர் ஆர்.என். ரவி பேசி வருவது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. ஆளுநரின் கருத்துகளுக்கு திமுகவும் கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தி வருகிறது.

இது ஒருபக்கம் என்றால் தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பப்படும் சட்ட மசோதக்களை ஆளுநர் கிடப்பில் போடுவதாகவும் மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசின் செயல்பாட்டுக்கு முட்டுக்கட்டை போடும் வகையில் ஆளுநரின் செயல்பாடு இருப்பதாகவும் தமிழக அரசு குற்றம் சாட்டி வருகிறது. இந்த மோதலின் உச்சமாக ஆளுநருக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்துள்ளது.
பழங்குடியினர் இளைஞர் விழா: இந்த வழக்கின் விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. வழக்கு விசாரணைக்கு வந்த பிறகு சில மசோதக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்தார். அதேபோல், சில மசோதக்களை திருப்பி அனுப்பினார். இதையடுத்து, தமிழக சட்டமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தை கூட்டி ஆளுநர் திருப்பி அனுப்பிய மசோதாக்களை தமிழக அரசு மீண்டும் நிறைவேற்றி அனுப்பியுள்ளது.
இவ்வாறாக ஆளுநருக்கும் தமிழக அரசுக்கும் இடையே தொடர்ந்து கருத்து மோதல்களும் வேறுபாடுகளும் நீடித்து வருகின்றன. இந்த நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, பிற மாநிலங்களோடு ஒப்பிடுகையில் தமிழகம் மிகவும் பாதுகாப்பானது என்று தெரிவித்துள்ளார். நேரு யுவ கேந்திரா சார்பில் 15-வது தேசிய பழங்குடியினர் இளைஞர் விழா சென்னை அடையார் இந்திரா நகரில் உள்ள அரசு இளையோர் விடுதியில் தொடங்கியது.
பாதுகாப்பான மாநிலம்: இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியதாவது:- இந்தியாவில் பத்து கோடிக்கும் மேல் பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். பழங்குடியினர் சமூகத்தின் மேம்பாட்டுக்காக மத்திய அரசு பல்லாயிரம் கோடி ரூபாயை ஒதுக்கி இருக்கிறது. தமிழ் மொழி மிகவும் பழமையானது. இந்த விழாவில் ஜார்க்கண்ட், ஒடிசா, மகராஷ்டிரா ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களை சேர்ந்த பழங்குடியின இளைஞர்கள் பங்கேற்றுள்ளனர்.
ஒருவாரம் இந்த விழா நடைபெறுகிறது. எனவே, பிற மாநிலத்தை சேர்ந்த இளைஞர்கள் இங்கிருந்து போகும் போது குறைந்ததது 12 தமிழ் வாக்கியங்களை கற்றுக்கொள்ளுங்கள்.. பிற மாநிலங்களை ஒப்பிடுகையில், தமிழ்நாடு மிகவும் பாதுகாப்பான மாநிலமாக உள்ளது. இவ்வாறு ஆளுநர் ஆர் என் ரவி பேசினார்.












Click it and Unblock the Notifications