"மாட்டிக்கிச்சே".. சின்னம்மா கிட்ட சொல்லியாச்சா? டோட்டல் ப்ளானையும் காலி செய்யும் எடப்பாடி பழனிசாமி?
சென்னை: டெல்டாவை குறி வைத்து எடப்பாடி பழனிசாமியின் வியூகம் ஆரம்பமாகி உள்ளதாம்.. இதையடுத்து, முக்கிய முடிவுகள் சிலவற்றை எடுக்க போகிறாராம் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி.
மூத்த தலைவரும், ஓபிஎஸ் ஆதரவாளருமான வைத்திலிங்கத்தின், மகன் திருமணம் விரைவில் நடக்க போகிறது.. தஞ்சாவூரில் மகனின் கல்யாணத்தை நடத்த போகிறார் வைத்திலிங்கம்,.. இந்த கல்யாணத்தில்,ஓபிஎஸ் + சசிகலா + டிடிவி தினகரன் + ஓபிஎஸ் என 3 பேரையும் ஒன்றாக இணைக்க போகிறாராம்.
ஜூன் 7ம் தேதி மகன் சண்முக பிரபுவுக்கும், யாழினி என்பவருக்கும் திருமணம் நடக்க உள்ள நிலையில், சசிகலா, டிடிவி தினகரன், ஓபிஎஸ், ஆகியோர் இந்த விழாவுக்கு தலைமை தாங்க வேண்டும் என்றும் வைத்திலிங்கம் ஆசைப்படுகிறாராம்... அந்தவகையில், திருமண மேடையில் சசிகலா, ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஆகியோரை ஒன்றாக மேடையேற்றவும் முடிவு செய்துள்ளாராம்..

வைத்தி அழைப்பு: இதற்காக, அரசியல் தலைவர்கள் பலரையும் அழைத்து கொண்டிருக்கிறார் வைத்திலிங்கம்.. அந்தவகையில், நேற்று முன்தினம், அமமுக பொதுச்செயலாளர் தினகரனையும் சந்தித்து திருமண பத்திரிகையை தந்து அழைத்துள்ளார் வைத்தி.. இந்த சந்திப்பு மொத்தம் 30 நிமிடங்கள் நீடித்துள்ளது.. அப்போது, வைத்திலிங்கத்திடம், "காதல் திருமணமா? பெற்றோர்கள் பார்த்து நடத்தும் திருமணமா?" என்றெல்லாம் விசாரித்திருக்கிறார் தினகரன்.
இதனையடுத்து, "சின்னம்மாவுக்கு பத்திரிகை வைத்து விட்டீர்களா? "என்று தினகரன் கேட்டாராம்.. அதற்கு வைத்திலிங்கம், "இன்னும் இல்லை.. இனி தான் வைக்க வேண்டும்" என்று தெரிவித்திருக்கிறார்..
மகன் திருமணம்: தினகரன் சந்திப்பை முடித்துவிட்டு, சசிகலாவை தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார் வைத்தியலிங்கம். அப்போது, வீட்டிற்கு வந்து பத்திரிகை வைக்க நேரம் கேட்டதாக தெரிகிறது.. அநேகமாக இவர்கள் சந்திப்பு ஓரிரு நாளில் நடக்கவிருக்கலாம் என்கிறார்கள்..
ஓபிஎஸ் தலைமையில் தஞ்சையில் நடக்கும் வைத்திலிங்கம் இல்ல திருமணத்திற்கு சசிகலா வரும்பட்சத்தில் சசிகலா ஓபிஎஸ் சந்திப்பு நிச்சயம் நடக்கும் என்கிறார்கள்.. அதுமட்டுமல்ல, தினகரன் + சசிகலா இடையில் இணக்கமான சூழல் சமீபகாலமாக இல்லை என்று சொல்லப்பட்டு வரும் நிலையில், இந்த திருமணத்தில் சுமூக சூழல் ஏற்படும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
க்ளைமேக்ஸ்: ஆக, 3 பேருமே அந்த விழாவில் கலந்து கொள்ளவிருப்பதால், அதிமுக அரசியல், நாடாளுமன்ற தேர்தலை எந்த வகையில் எதிர்கொள்வது, பாஜக உறவு குறித்தெல்லாம் நிறைய விவாதிப்பார்கள் என்றே கணக்கு போடப்படுகிறது..
அதுமட்டுமல்ல, திருமண விழாவில் எடப்பாடிக்கு எதிரான அரசியலை நிச்சயம் பேசுவார்கள், என்றும், 3 பேரும் சேர்ந்து பத்திரிகையாளர்களை சந்திப்பார்கள் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.. ஆக மொத்தம், ஓபிஎஸ்-சசி-தினகரன் சந்திப்பானது, அதிமுக அரசியல் பரபரப்பை ஏற்படுத்தும் என்பதால், எடப்பாடி பழனிசாமி தரப்பில் லேசான கலக்கம் கவ்வி வருவதாக தெரிகிறது.. இவர்கள் 3 பேரும் இணைந்தால் டெல்டா மாவட்டங்கள், குறிப்பாக தென் மாவட்டங்கள் மொத்தமாக இவர்கள் வசம் சென்றுவிடும் என்பதை எடப்பாடி பழனிச்சாமி அறியாமல் இல்லை.
அதனால்தான் தென் மாவட்டங்களில், தன்னுடைய பலத்தை நிரூபிக்க எல்லா முயற்சிகளையும் எடுத்து வருகிறார். இத்தனைக்கும் பலமான கோட்டையான கொங்குவிலும் எடப்பாடிக்கான செல்வாக்கு சரிந்துள்ளது, கடந்த இடைத்தேர்தலில் அம்பலமானது. அப்படியிருந்தும்கூட, டெல்டாவில் தன் மொத்த கவனத்தையும் திருப்பி வருவதாக தெரிகிறது..
3 பேர் சந்திப்பு: ஓபிஎஸ் கூட்டிய திருச்சி மாநாட்டுக்கு பலவழிகளில் முட்டுக்கட்டை போட்டும்கூட, எடப்பாடி தரப்பினரால் மாநாட்டை தடுக்க முடியாத சூழலில், சசிகலா + தினகரனின் ஆதரவானது, ஓபிஎஸ்ஸை மேலும் பலப்படுத்திவிடுமே என்ற கவலையும் சூழ்ந்துள்ளதாம்.
இப்போதைக்கு, மாஜி அமைச்சர் காமராஜர் மட்டும்தான் ஒரே சப்போர்ட்டாக உள்ளார். காமராஜருக்கும் இங்கு செல்வாக்கு இருக்கவே செய்கிறது.. "தாராளமாக" தொகுதியை கவனித்து கொள்பவரும்கூட.. எனினும், தினகரனுக்குரிய மொத்த செல்வாக்கையும், காமராஜரால் மட்டுமே உடைத்துவிடுமா என்பது சந்தேகம்தான்.. மற்றொருபக்கம், ஒரத்தநாடு, மதுக்கூர் பகுதிகள், வைத்திலிங்கத்தின் பிடியில் உள்ளதால், அதிமுக நிர்வாகிகளும், வைத்திலிங்கத்தை மீறி எதுவும் செய்ய முடியாத நிலைமையில் உள்ளார்களாம்..
பெருத்த நம்பிக்கை: அதனால்தான், வைத்திலிங்கத்தை எதிர்த்து, அரசியல் செய்யும் முக்கிய நிர்வாகிகளை ஒரத்தநாடு, மதுக்கூர் பகுதிகளுக்கு நியமிக்க போகிறாராம் எடப்பாடி பழனிசாமி...
மற்றொருபக்கம் இவர்கள் யாரும், சமூக பற்றால், சசிகலா பக்கம் தாவிவிடக்கூடாது என்பதால், இவர்களை கண்காணிக்கவும் டீம் ஒன்றை ரகசியமாக இறக்க போகிறாராம்..
சீக்ரெட் டீம்: அதேபோல, பொதுக்குழுவின் கோர்ட் தீர்ப்பையடுத்து, ஓபிஎஸ் தரப்பில் உள்ள அதிருப்தியாளர்களுக்கும் வலையை வீசியுள்ளார்களாம். இதில் முக்கிய நிர்வாகி ஒருவர், எடப்பாடி பக்கம் தாவ உள்ளதாகவும் சொல்கிறார்கள்.. அவர் விரைவில் எடப்பாடி பழனிசாமி பக்கம் வரப்போகிறாராம்.. அவரை வைத்து, மேலும் சிலருக்கு வலை வீசப்படும் என்கிறார்கள்.. எப்படி பார்த்தாலும், வைத்திலிங்கம் வீட்டு கல்யாணம் முடிந்ததுமே, புது அரசியல் திருப்பம் ஏற்பட போவதாக அதிமுகவில் தகவல்கள் பரபரக்கின்றன.












Click it and Unblock the Notifications