சென்னை வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் எப்போது? வெளியான குட்நியூஸ்
சென்னை: பல ஆண்டுகளாக கிடப்பில் உள்ள சென்னை வேளச்சேரி - பரங்கிமலை இடையேயான பறக்கும் ரயில் திட்டத்தை ஜூலை மாதத்துக்குள் முடிக்க தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது.
சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், ரயில் போக்குவரத்து சேவையை அதிகரிக்கவும் பறக்கும் ரயில் திட்டம் அமைக்க 1985-ம் ஆண்டு எம்ஜிஆர் ஆட்சியில் முடிவு செய்யப்பட்டது. சென்னை கடற்கரை முதல் பரங்கிமலை வரை 3 கட்டங்களாக இத்திட்டத்தை நிறைவேற்ற தீர்மானிக்கப்பட்டது.

வேளச்சேரி
முதல்கட்டமாக கடற்கரை - மயிலாப்பூர் இடையே 9 கி.மீ. தூரத்துக்கு பறக்கும் ரயில் திட்டப் பணி ரூ.266 கோடியில் மேற்கொள்ளப்பட்டு, கடந்த 1997-ல் நிறைவடைந்து, ரயில்கள் இயக்கப்பட்டன. . 2-ம் கட்டமாக மயிலாப்பூர் - வேளச்சேரி இடையேயான பறக்கும் ரயில் திட்டப் பணி ரூ.877.59 கோடியில் கடந்த 2007-ல் முடிக்கப்பட்டு ரயில்கள் இயக்கப்படுகின்றன.இந்த வழித்தடத்தில் தினமும் 150 மின்சார ரயில் சேவைகள் இயக்கப்படுகின்றன.

பிரச்சினை
இதனிடையே, வேளச்சேரி - பரங்கிமலை இடையே 3-ம் கட்ட பணி ரூ.495 கோடியில் கடந்த 2008-ல் தொடங்கப்பட்டது. மொத்தம் உள்ள 5 கி.மீ. தூரத்தில் 4.5 கி.மீ. தூரத்துக்கு 167 தூண்களுடன் ரயில் பாதை அமைக்கப்பட்டது. இந்நிலையில், ஆதம்பாக்கம், தில்லை கங்கா நகர் பகுதியில் நிலம் கையகப்படுத்தும் பிரச்சினையால் பல ஆண்டுகளாக பாதை அமைக்கும் பணி கிடப்பில் போடப்பட்டிருந்தது. இப்பிரச்சினைக்கு 2 ஆண்டுகளுக்கு முன்பு தீர்வு காணப்பட்டது.

முழுவீச்சில் பணி
இதனால், கடந்த சில மாதங்களாக இந்த வழித்தடத்தில் பணிகள் மீண்டும் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. பாலத்தை தாங்கும் தூண்கள் அமைத்து, அதன் மீது கர்டர்கள் (தாங்கு பாலம்) பொருத்தும் பணி நடைபெறுகிறது.

பயணிகள்
சென்னை மாநகரின் முக்கிய ரயில் திட்டம் என்பதால், பயணிகள் மத்தியில் இத்திட்டம் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த வழித்தடத்தில் ரயில்கள் விரைவாக இயக்கப்பட வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதிகாரிகள்
வேளச்சேரி பரங்கிமலை ரயில்வே வழித்தடத்தில் எப்போது ரயில்கள் இயக்கப்படும் என்பது குறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், "வேளச்சேரி - பரங்கிமலை இடையேயான பறக்கும் ரயில் பாதை திட்டத்தில், புழுதிவாக்கம், ஆதம்பாக்கம், வாணுவம்பேட்டை ஆகிய இடங்களில் ரயில் நிலையங்கள் அமைக்கும் பணிகள் முடிந்து, ரயில்கள் இயக்க தயார் நிலையில் உள்ளன.
பல ஆண்டுகளாக பணிகள் முடிக்கப்படாமல் கிடப்பில் இருந்த ஆதம்பாக்கம், தில்லை கங்கா நகர் பகுதிகளில் வரிசையாக பிரம்மாண்டமான தூண்கள் அமைத்து, மேம்பாலம் இணைப்பு பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டி இருக்கிறது.

ரயில் சேவை
தற்போது, பாலத்தில் கர்டர்கள் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. 500 மீட்டர் தொலைவில் 250 மீட்டர் வரை பணிகள் முடிந்துவிட்டது. மொத்தம் 36 கர்டர்களில் 18 கர்டர்கள் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த வழித்தடத்தில் ரயில் நிலையப் பணிகள் அனைத்தும் முடிந்துவிட்டன. மீதமுள்ள பணிகள் வரும் ஜூலைக்குள் முடிக்க இலக்கு நிர்ணயத்துள்ளோம். பின்னர், ரயில்வே பாதுகாப்பு ஆணையரகத்தின் ஒப்புதல் பெற்று, ரயில் சேவை தொடங்கப்படும்" இவ்வாறு ரயில்வே அதிகாரிகள் கூறினர்.












Click it and Unblock the Notifications