அரிசி விலை எப்போது குறையும்? ஏற்றுமதி தடை விலக்கப்படுவது எப்போது? முழு தகவல்
சென்னை: அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் வசிக்கும் நமது சகோதர சகோதரிகள் அரிசி கடைகளில் முந்தி அடித்து மூட்டைகளை ஏற்றி செல்லும் வீடியோக்களை பார்த்து அதிர்ச்சி அடைந்திருப்பீர்கள். பாசுமதி தவிர்த்த பிற வெள்ளை அரிசி ஏற்றுமதிக்கு இந்திய அரசு விதித்த தடை, உலக அளவில் அரிசி தட்டுப்பாடு காரணமாக ஏற்பட்ட தாக்கம்தான் அந்த காட்சி.
அத்தனை பேர் மனதிலும் இப்போது இருக்கக் கூடிய கேள்வி, அரிசி ஏற்றுமதிக்கு இந்தியா எப்போது தடையை விலக்கிக் கொள்ளும்.. அரிசி விலை இந்தியாவில் எப்போது குறையும் என்பதுதான். இந்த இரண்டு கேள்விகளுக்கும் ஒன்றுக்கொன்று தொடர்பு இருக்கிறது என்பதுதான் கவனிக்கப்பட வேண்டிய அம்சம்.
இந்தியாவும், அரிசியும்.. இந்தியாவும் உலக நாடுகளின் அரிசி வணிகமும், குறித்த அடிப்படை தகவல்களை தெரிந்து கொண்டால் இந்த விஷயத்தில் மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க முடியும். அத்தனை சந்தேகங்களுக்கும் விளக்கமளிக்கும் வகையிலான தகவல்களை திரட்டினோம். இதோ அரிசி மார்க்கெட் குறித்த ஒரு பார்வை..

அரிசி தாயகம்: உலகத்திலேயே அதிகப்படியான அரிசியை உற்பத்தி செய்யும் நாடு இந்தியா. 130 மில்லியன் டன் அரிசி உற்பத்தி செய்யும் இந்தியா அதில் சுமார் 20 மில்லியன் அளவுக்கு ஏற்றுமதி செய்கிறது. உலக அரிசி வர்த்தகத்தில் இந்தியாவின் பங்களிப்பு 40 சதவீதத்துக்கு மேல் உள்ளது.
இந்திய அரிசிக்கு டிமாண்ட்: கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இந்தியா தனது அரிசி ஏற்றுமதிக்கு 20 சதவீதம் அதிகமாக வரிவிதித்த போதிலும் கூட அரிசி விற்பனையில் பெரிதாக எந்த சரிவும் ஏற்படவில்லை. வரி மூலமாக இந்திய அரசுக்கு சுமார் ஒரு பில்லியன் டாலர் வருமானம் கிடைத்திருக்கலாம் என்றும் கணிக்கப்படுகிறது. இப்படியாக சர்வதேச சந்தையில் கோலோச்சி வரும் இந்தியா, பாசுமதி தகர்த்த பிறவகை வெள்ளை அரிசி ஏற்றுமதிக்கு சமீபத்தில் தடை விதித்ததால் பல நாடுகளிலும் அதன் தாக்கம் எதிரொலிக்கிறது.

பிற நாடுகள்: வியட்நாம், தாய்லாந்து, பாகிஸ்தான், அமெரிக்கா போன்ற நாடுகள் உலக சந்தையில் தங்கள் அரிசியை விற்பனை செய்த போதிலும்கூட, இந்தியா அளவுக்கு அவர்களால் அதிகமாக சப்ளை செய்ய முடியவில்லை. எனவே உலகமே இந்திய அரிசி ஏற்றுமதி தடையால் பெரிதும் பாதிக்கப்பட்டு இருக்கிறது. கொரோனா நோய் தொற்று காலகட்டத்திலும் சரி, உக்ரைன் போர் சந்தர்ப்பத்திலும் சரி, இந்தியாவின் அரிசி பல நாடுகளின் பசியை போக்கியிருந்தது. எப்போதுமே நாம் குறை வைத்தது கிடையாது.
அரிசி விலை எப்போது குறையும்: எனவே இந்த நிலை எப்போது மாறும், அரிசி ஏற்றுமதி தடையால் இந்தியாவில் அரிசி விலை உயர்ந்ததை குறைக்க முடியுமா என்பது குறித்து அரிசி ஏற்றுமதியாளர் சங்க தலைவர் மற்றும் காக்கிநாடாவைச் சேர்ந்த பட்டாபி அக்ரோ மேலாண் இயக்குநருமான பிவி கிருஷ்ணா ராவ் கூறியதாவது: எப்போதுமே ஜூன், ஜூலை போன்ற மாதங்களில் அரிசி விலை உயர்வது வழக்கம். ஏனென்றால் அப்போது அறுவடை காலம் கிடையாது. ஆனால் அக்டோபர் மாதத்துக்கு பிறகு அரிசி விலை குறைய பிரகாசமான வாய்ப்பு இருக்கிறது.
அரிசி உற்பத்தி அதிகம்: கடந்த ஆண்டுடன் ஒப்பீடு செய்தால் இந்த ஆண்டு 15 முதல் 20 சதவீதம் அளவுக்கு இந்தியாவில் அரிசி உற்பத்தி அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கிறோம். இந்த ஆண்டு பருவமழை இந்தியா முழுமைக்கும் சீராக பெய்து இருக்கிறது. இதன் காரணமாக அரிசி அதிக அளவில் பயிரிடப்பட்டு இருக்கிறது. உத்தர பிரதேசம், பீகார் போன்ற மாநிலங்களிலும் சிறப்பான மழை அளவு பதிவாகியுள்ளது. எனவே அரிசி விலை உயர்வு தொடர்பாக மக்கள் அச்சப்பட தேவையில்லை என்றார் அவர். இந்த தொழிலில் ஈடுபட்டுள்ள முதலீட்டாளர்களுக்கு கஷ்டம் என்ற போதிலும் இந்திய மக்களின் நலனுக்காக அதை பொறுத்துக் கொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications