பழைய ஓய்வூதிய திட்டம் அமலுக்கு வருமா வராதா? வெளியான முக்கிய தகவல்.. ஸ்டாலின் மாஸ்டர்பிளான்
சென்னை: பல ஆண்டுகளாக, தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை (ஓபிஎஸ்) மீண்டும் கொண்டுவர வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இதற்காக பல்வேறு போராட்டங்களை நடத்தி, மாநில அரசுக்கு பலமுறை கோரிக்கை மனுக்களை அளித்துள்ளனர். இந்த நீண்டகால கோரிக்கைக்கு அரசியல் கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன.
சமீபத்தில், அமைச்சர் ஐ. பெரியசாமி செய்தியாளர்களிடம் பேசுகையில், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கைகளை அரசு கண்டுகொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டுகளை மறுத்தார். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஏற்கனவே பல தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டதாகவும், பழைய ஓய்வூதியத் திட்டம் குறித்து விரைவில் அறிவிப்பு வெளியிடுவார் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

பழைய ஓய்வூதியம் எனப்படும் ஓபிஎஸ் திட்டத்தில் கடைசியாக வாங்கிய சம்பளத்தில் 50% ஓய்வூதியமாக வழங்கப்படும். மேலும் அகவிலைப்படியும் (டிஏ) அவ்வப்போது மாற்றியமைக்கப்படும். இது ஓய்வுக்குப் பிறகு அதிக நிதி நிலைத்தன்மையையும், பாதுகாப்பையும் வழங்கும்.
ஜனவரி 1, 2004 முதல் புதிய ஊழியர்களுக்கு ஓபிஎஸ் திட்டம் நிறுத்தப்பட்டு, சந்தை அடிப்படையிலான பங்களிப்பு திட்டமான தேசிய ஓய்வூதிய முறை (என்பிஎஸ்) அறிமுகப்படுத்தப்பட்டது. அதாவது அந்த பணம் முதலீடு செய்யப்படும் மார்க்கெட் அடிப்படையில் மட்டுமே ஓய்வூதியம் கொடுக்கப்படும். சமீபத்தில் சில மாநிலங்கள் தங்கள் ஊழியர்களுக்கு ஓபிஎஸ் திட்டத்தை மீண்டும் அமல்படுத்தியுள்ளன. எனினும், பெரும்பாலான மாநிலங்களில் 2004-க்கு முன்பு அரசுப் பணியில் சேர்ந்தவர்கள் மட்டுமே இதற்குத் தகுதியானவர்கள்.
சமீபத்தில் வெளியான, அக்டோபர் 1 முதல் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் 15 நாட்கள் வரை ஈட்டிய விடுப்பை பணமாக மாற்றும் வசதி செய்து தரப்படும் என்ற அறிவிப்பு சற்று ஆறுதலை அளித்துள்ளது. இருப்பினும், இந்த நடவடிக்கை பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கான முக்கிய கோரிக்கையுடன் ஒப்பிடும்போது சிறிய சலுகையாகவே பார்க்கப்படுகிறது. 2026 சட்டமன்றத் தேர்தல்கள் நெருங்கி வருவதால், ஸ்டாலின் அரசு விரைவில் அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தி தெரிவிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முடிவாக, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் நீண்டகால கோரிக்கையான பழைய ஓய்வூதியத் திட்டம் குறித்து முதலமைச்சர் விரைவில் அறிவிப்பு வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில், பகுதி நேர ஆசிரியர்களை நிரந்தரமாக்குவது உள்ளிட்ட பிற வாக்குறுதிகளையும் அரசு நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது.
விரைவில் பழைய ஓய்வூதிய திட்டம்
தமிழக அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதியத் திட்டம் குறித்த இந்த வருட இறுதியில் மீண்டும் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அதற்கு முன்பாக அடுத்த சில வாரங்களில் இது தொடர்பான முக்கிய அறிவிப்பு வெளியாகலாம் என்கிறார்கள். இதற்கான ஆலோசனைக் குழுக்கள் தற்போது அமைக்கப்பட்டிருக்கின்றன. அந்த குழுவின் பரிந்துரைகள் அடுத்த சில வாரங்களில் வெளியாகலாம் என்கிறார்கள். அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு, பல்வேறு சலுகைகள் மற்றும் கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு நிறைவேற்றி வருகிறது. இந்நிலையில், பழைய ஓய்வூதியம் தொடர்பான அறிவிப்பும் விரைவில் வெளியாகும் என்று அரசு ஊழியர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர்.
சட்டசபை தேர்தல் நெருங்கி வருவதால், தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பு இந்த அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது. இந்தத் திட்டம் நடைமுறைக்கு வந்தால் அரசுக்கு நிதி இழப்பு ஏற்படும் என்பதால், இழப்புகளைக் குறைக்கும் வகையில் சில மாற்றங்களைச் செய்து அரசு அமல்படுத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
திமுக அரசுக்கு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஆதரவு எப்போதும் அதிகமாக இருக்கும். ஆனால், தற்போதைய ஆட்சியில் முக்கிய கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என்ற அதிருப்தி நிலவுகிறது. இதனால் லோக்சபா தேர்தல் மற்றும் இடைத்தேர்தல்களில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் திமுகவுக்கு எதிராக வாக்களித்ததாக கூறப்படுகிறது. தபால் வாக்குகள் அதிமுக, பாஜகவுக்கு சென்றதே இதற்கு சான்று. எனவே, அரசு ஊழியர்களின் மனதை குளிரச் செய்யும் விதமாக பழைய ஓய்வூதியத் திட்டம் சட்டசபை தேர்தலுக்கு முன்பு கொண்டுவர முதல்வர் ஸ்டாலின் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.












Click it and Unblock the Notifications