கண்மூடித்தனமாக எதிர்க்காதீங்க! ஒரே நாடு ஒரே தேர்தல் எப்போது நடைமுறைக்கு வரும்? நிர்மலா சீதாரமன்
டெல்லி: ஒரே நாடு ஒரே தேர்தல் வரும் 2034 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு பின்னர் நடைமுறைக்கு வரும் என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். சென்னையில் தனியார் கல்லூரி நிகழ்ச்சியில் பேசிய அவர் இவ்வாறு கூறினார்.
நமது நாட்டில் நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டப்பேரவைகளுக்கு ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்படுகிறது. ஒவ்வொரு சட்டமன்றத்தின் பதவிக்காலம் காலாவதி ஆகும் காலத்திற்கு ஏற்ப தேர்தல் நடைபெறுகிறது. அதேபோல, நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் முடியும் போது தேர்தல் நடத்தப்படுகிறது. மாநில சட்டப்பேரவைகளின் பதவிக்காலம் ஒரே மாதிரியாக முடிவு பெறுவது இல்லை.

இதனால், அடிக்கடி தேர்தல் நடைபெறுவதால் மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்த முடியவில்லை எனக் கூறிய மத்தியில் ஆளும் பாஜக அரசு நாடு முழுவதும் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை செயல்படுத்த முனைப்பு காட்டி வருகிறது. ஆனால் இது நடைமுறையில் சாத்தியமற்றது. நாட்டின் கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது என்று எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
ஒரே நாடு ஒரே தேர்தல் நடத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்ய முன்னாள் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இந்த குழு அளித்த பரிந்துரைகளுக்கும் மத்திய கேபினட் ஒப்புதல் அளித்துள்ளது. விரைவில் இதற்கான மசோதா தயாரிக்கப்பட்டு ஒரே நாடு ஒரே தேர்தலை அமல்படுத்துவதில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.
இந்த நிலையில், ஒரே நாடு ஒரே தேர்தல் எப்போது அமலுக்கு வர வாய்ப்புள்ளது என்பது பற்றி மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியுள்ளர். சென்னையில் உள்ள தனியார் பல்கலைக்கழக விழாவில் பேசிய நிர்மலா சீதாராமன் ஒரே நாடு ஒரே தேர்தல் வரும் 2034 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக நடைமுறைக்கு வரும் என்று தெரிவித்தார். இது தொடர்பாக நிர்மலா சீதாராமன் கூறியதாவது:-
ஒரே நாடு ஒரே தேர்தலால் நாட்டிற்கு நன்மை தான். நாட்டின் வளர்ச்சி தடைபடாமல் இருக்கும். வளர்ச்சி ஏற்படும். ஒரே நாடு ஒரே தேர்தலை கண்மூடித்தனமாக எதிர்க்க வேண்டாம். நாட்டின் வளர்ச்சி, நலன்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். ஒரே நாடு ஒரே தேர்தலுக்கான நடைமுறையை வரும் 2029 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு பின்னர் ஜனாதிபதி மேற்கொள்வார்.
இதனை தொடர்ந்து தேர்தல் ஆணையத்திற்கும் அதிகாரம் வழங்கப்படும். இதனை தான் உயர்மட்டக் குழுவும் கூறியுள்ளது. தொடர்ந்து செயலாக்கம் செய்யப்பட்டு நடைமுறைக்கு வரும். இதற்கு எப்படியும் 2034 ஆம் ஆண்டு வரை காலம் எடுக்கும். ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து பொய்யுரைகளை பரப்புபவர்களுக்கு இதை எடுத்துச் சொல்லுங்கள். இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications