தமிழகத்தில் லோக்சபா தேர்தல் தொகுதி பங்கீடு எப்போது? ‛இந்தியா’ கூட்டணியிடம் ஸ்டாலின் கூறியது என்ன?
சென்னை: நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வருகிறது. இந்நிலையில் தான் தமிழகத்தில் ‛இந்தியா' கூட்டணியின் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை எப்போது தொடங்கப்படும் என்பது பற்றிய முக்கிய தகவலை முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ‛இந்தியா' கூட்டணி கட்சி தலைவர்கள் இன்று காணொலி மூலம் நடத்திய ஆலோசனையின்போது அதுபற்றி ஸ்டாலின் கூறியுள்ளார்.
நாடாளுமன்ற தேர்தல் என்பது நெருங்கிவிட்டது. இதற்கான தேர்தல் தேதி என்பது வரும் மார்ச் மாதம் அறிவிக்கப்படலாம் என கூறப்படுகிறது. மேலும் நாடாளுமன்ற தேர்தல் என்பது மே மாதத்தில் நடக்கலாம் என சொல்லப்படுகிறது. தேர்தலுக்கு இன்னும் 4 மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் அதற்கான பணிகளை தொடங்கிவிட்டன.

மத்தியில் மீண்டும் ஆட்சியை பிடிக்க பாஜக தனது என்டிஏ கூட்டணியை பலப்படுத்தி வருகிறது. அதேபோல் பாஜகவை வீழ்த்த கட்சி பாகுபாடுகளை மறந்து காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாதி, ஐக்கிய ஜனதாதளம், ராஷ்ட்ரிய ஜனதாதளம், ஆம்ஆத்மி, தேசியவாத காங்கிரஸ் உள்பட 28 எதிர்க்கட்சிகள் ஒன்றாக இணைந்து ‛இந்தியா' கூட்டணியை உருவாக்கி உள்ளன.
இந்த கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் என்பது பாட்னா, பெங்களூர், மும்பை, டெல்லி என 4 இடங்களில் நடந்து முடிந்துள்ளது. இதையடுத்து இன்று ‛இந்தியா' கூட்டணி கட்சி தலைவர்களின் ஆலோசனை கூட்டம் என்பது காணொலி காட்சி மூலம் நடந்தது. இதில் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான முக ஸ்டாலின், காங்கிரஸ் கட்சியின் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, பீகார் முதல்வர் நிதிஷ் குமார் உள்பட 12 கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இந்த கூட்டத்தில் பங்கேற்கவில்லை. இதையடுத்து கூட்டத்தில் ‛இந்தியா' கூட்டணியின் தலைவராக காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு என்பது விரைவில் வெளியாக உள்ளது. மேலும் இந்த கூட்டத்தில் ‛இந்தியா' கூட்டணியில் உள்ள கட்சிகள் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை தொடங்கி விரைவில் சுமூக தீர்வு காண வேண்டும் என அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
இந்த வேளையில் முதல்வர் ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார். அதாவது தமிழகத்தில் ‛இந்தியா' கூட்டணி கட்சிகளின் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை எப்போது தொடங்கும்? என்பது பற்றி அவர் கூறியுள்ளார். அதாவது தற்போது பொங்கல் பண்டிகை நெருங்கிவிட்டது. பொங்கல் பண்டிகைக்கு பிறகு தமிழகத்தில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கப்படும் என ஸ்டாலின் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதேபோல் பிற மாநிலங்களில் செயல்பட்டு வரும் கட்சிகளின் தலைவர்களும் விரைவில் தொகுதி பங்கீட்டை நிறைவு செய்வதாக கூறியுள்ளனர்.
தமிழகத்தை பொறுத்தமட்டில் தற்போது வரை திமுக கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், மதிமுக, மனிதநேய மக்கள் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி உள்பட சில கட்சிகள் உள்ளன. இவர்களுடன் முதல்வர் ஸ்டாலின் நாடாளுமன்ற தொகுதி பங்கீடு தொடர்பாக பொங்கலுக்கு பிறகு பேச்சுவார்த்தையை தொடங்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications