தமிழக சட்டசபை தேர்தல் தேதி எப்போது அறிவிப்பு? வெளியான முக்கிய தகவல்.. ஓட்டுப்போட ரெடியா?
சென்னை: தமிழகத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கு அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன. இந்நிலையில் தான் தமிழக சட்டசபை தேர்தல் தேதி எப்போது அறிவிக்கப்படும்? என்பது பற்றிய முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகம் சட்டசபை தேர்தலுக்கு தயாராகி வருகிறது. கடந்த 2021ம் ஆண்டில் நடந்த சட்டசபை தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. 2021 மே 7 ம்தேதி திமுக தலைவர் முக ஸ்டாலின் முதல்வராக பதவியேற்றார்.

இந்நிலையில் தான் தமிழக சட்டசபையின் 5 ஆண்டு பதவிக்காலம் மே மாதத்தில் நிறைவு பெற உள்ளது. இந்நிலையில் தான் அனைத்து கட்சிகளும் சட்டசபை தேர்தல் பணியை தொடங்கி உள்ளன.
இந்த முறை தமிழகத்தில் நான்கு முனை போட்டி நிலவ உள்ளது. திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, சீமானின் நாம் தமிழர் கட்சி, புதிதாக அரசியலில் வந்துள்ள விஜயின் தமிழக வெற்றிக் கழகம் என 4 முனை போட்டி நிலவ உள்ளது. திமுக கூட்டணியில் தற்போது உள்ள கட்சிகளை தக்கவைக்க முதல்வர் ஸ்டாலின் முயன்று வருகிறார். அதேபோல் அதிமுக கூட்டணியை பலப்படுத்த எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமியும், கூட்டணியில் உள்ள பாஜக தலைவர்களும் முயற்சிக்கின்றனர்.
அதேபோல் விஜயும் தனது தலைமையில் கூட்டணி அமைக்க காய்நகர்த்தி வருகிறார். வழக்கம்போல் சீமான் தனித்து களமிறங்குவதாக அறிவித்துள்ளார். திமுக மற்றும் அதிமுக சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிக்க குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. சீமான் தொடர்ந்து ஒவ்வொரு தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்து வருகிறார். விஜய் கூட்டணிக்காக காத்து நிற்கிறார். இதனால் தமிழக அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.
இந்நிலையில் தான் தமிழக சட்டசபை தேர்தல் தேதி எப்போது அறிவிக்கப்படும்? என்ற கேள்வி எழுந்துள்ளது. தற்போது அதுபற்றி முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. அதாவது பிப்ரவரி மாத தொடக்கத்தில் இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், தேர்தல் ஆணையர்களான சுக்வீர் சிங் சந்து, விவேக் ஜோஷி ஆகியோர் தமிழகம் வருகை தர உள்ளதாக கூறப்படுகிறது. அவர்கள் தமிழக சட்டசபை தேர்தலுக்கான ஆயத்த பணிகள், பாதுகாப்பு பணிகள் குறித்து பல்வேறு துறையினருடன் ஆலோசனை மேற்கொள்ள உள்ளனர்.
அதன்பிறகு தமிழக சட்டசபை தேர்தல் தேதி மார்ச் மாதம் தொடக்கத்தில் அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது. கடந்த 2021 சட்டசபை தேர்தலின்போது தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. அப்போதும் 2021 மார்ச் மாதம் தொடக்கத்தில் தான் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது.
2021 மார்ச் 12ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கியது. மார்ச் 19ம் தேதி வேட்பு மனு தாக்கலுக்கு கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டது. மார்ச் 20ம் தேதி வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை செய்யப்பட்டது. மார்ச் 22 வேட்புமனுக்களை வாபஸ் பெற கடைசி நாளாக அறிவிக்கப்பட்டு இருந்தது.
பிறகு ஏப்ரல் 6ம் தேதி ஒரே கட்டமாக 234 சட்டசபை தொகுதிகளுக்கும் தேர்தல் நடந்தது. பிறகு மே 2ம் தேதி ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. இதில் திமுக வெற்றி பெற்ற நிலையில் 2021 மே 7 ம் தேதி தமிழக முதல்வராக முக ஸ்டாலின் பதவியேற்றார்.
முன்னதாக கடந்த 2021ம் தேதிக்கான சட்டசபை தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் பிப்ரவரி 26ம் தேதி அறிவித்தது. அப்போது தமிழகம் மட்டுமின்றி புதுச்சேரி, மேற்கு வங்கம், அசாம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களுக்கும் சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. ஒரே நாளில் 4 மாநிலங்கள், யூனியன் பிரதேசமான புதுச்சேரிக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது.
அதன்பிறகு 5 சட்டசபை தேர்தல்களிலும் பதிவான ஓட்டுகள் 2021 மே 2ம் தேதி எண்ணி முடிவுகள் அறிவிக்கப்பட்டது. இதனால் அதேபாணியில் இந்த முறையும் 5 இடங்களுக்கும் தேர்தல் தேதி ஒரே நாளில் அறிவிக்கப்பட்டு அதன்பிறகு தனித்தனி தேதிகளில் தேர்தல் நடத்தப்பட வாய்ப்புள்ளது என்பது கவனிக்கத்தக்கது.












Click it and Unblock the Notifications