Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எங்கே போனது அரசு நிர்வாகம்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிப்ரவரி மாதம் இறுதிவரை கட்டுக்குள் இருந்த கொரோனா தீநுண்மி பரவலை, நாமாகவே நாசம் செய்து சகித்து கொள்ளமுடியாத இந்த நிலைக்கு கொண்டு வந்து இருக்கிறோம். சொல்லில் அடங்கா துயர் இது. இதுகுறித்து அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் ஆஸ்டின் நகரிலிருந்து நமது வாசகர் மாணிக்கம் விஜயபானு எழுதியுள்ள கட்டுரை.

அலட்சியம். அவமானம்.

இந்த இரண்டு வார்த்தையை, மத்திய அரசை நோக்கி அழுத்தமாக சொல்ல வேண்டிய நேரமிது. இந்தியாவில் தயாரித்த தடுப்பூசியை உலகம் முழுவதும் இலவசமாகவும், விற்பனைக்கும் தாராளமாக விநியோகம் செய்துவிட்டு, உள்நாட்டில் எல்லா மாநிலங்களிலும் தடுப்பூசி பற்றாக்குறையாக இருக்கும் நிலைக்கு மக்களை மத்திய அரசு தள்ளி இருப்பதே நிதர்சனம்.

Where did the state administration go? - manikam Vijayabanu

"ஒரேநாடு, ஒரே வரி" என்று எந்த மாநிலமும் விரும்பாத வாசகத்தை உயர பிடிக்கும் திரு.மோடியின் அரசாங்கம், தடுப்பூசி விலையை மட்டும் அந்தந்த மாநிலங்கள் முடிவு செய்து கொள்ளலாம் என்று சொன்ன போது எங்கே போனது இவர்களின் உரத்த "ஒரே" குரல்?

முதல் அலை முடியும் தருவாயில், இரண்டாம் அலை வரப்போகிறது என்று உலகம் முழுக்க உள்ள மருத்துவ துறை பலத்த எச்சரிக்கை கொடுத்தும், மத்திய, மாநில அரசுகள் அதை அலட்சியமாக கடந்து போனதே கண்கூடான நாம் கண்ட உண்மை. உருமாறிய வைரஸ் உலகம் முழுக்க உருண்டு திரளும் போது, எல்லாம் முடிந்து விட்டது போல நாம் இங்கே இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி, கண்ட திசையெங்கும் கொண்டாடி தீர்த்தது முகத்தில் அறையும் நிஜம்.

அடைத்து பயணித்த பேருந்துகளும், ரயில்களும், பூங்காக்களும், 50% என்ற பெயரில் திறந்துவிட்ட திரை அரங்குகளும், வணிக வளாகங்களும், முகக்கவசமற்ற மக்கள் கூடும் பொது இடங்களும், எந்த வித சமூக விலக்கும் இல்லாத கோயம்பேடு, ரங்கநாதன் தெரு போன்று மக்கள் கூட்டம் கசங்கி பிழியும் நிலையும் உள்ள மாநில நகரங்களும் தான் கடந்த மாதங்களில் நாம் பார்த்தது. அதை அந்தந்த அரசும் எந்த வித நெருடலும் இல்லாமல் அனுமதித்தது. இந்த அலட்சிய போக்கை, உயிர் என்ற பெருத்த விலை கொடுத்து இன்று எதிர் கொள்ளும் நிலைக்கு மத்திய, மாநில அரசுகளே மக்களை தள்ளி இருக்கிறது.

இரண்டாம் அலையின் அதிவேக பரவலுக்கு மக்களின் அலட்சிய போக்கு மட்டுமே காரணம் என்று மத்திய, மாநில அரசுகள் மக்களை மட்டும் குறை கூறும் பார்வையை முழுதாக நம்மால் ஏற்கவே முடியாது. பின் எதற்கு அரசாங்கம் என்ற ஆளுமை? நிர்வாகம்? வரி வசூலிப்பதற்கும், அடுத்த ஆட்சிக்கு துண்டுபோட்டு இடம் பிடிக்க மட்டுமா இவர்கள்?

இதற்கு நடுவே தேர்தல் திருவிழா. முகக்கவசம் இல்லாமல் மூச்சடைக்கும் மக்கள் நெரிசலில் தினப் பொதுக்கூட்டங்கள், பேரணிகள், நெரிசலான இடங்களில் நீண்ட பரப்புரைகள், பல மாநிலங்களிலிருந்து பல லட்சம் மக்கள் குவிந்த "கும்பமேளா" என்று முழுக்க முழுக்க மத்திய அரசு கொரோனாவை மிக அலட்சியமாக, சரியான கோணத்தில் கையாளவில்லை என்பதே எட்டு திக்கும் தெறிக்கும் உண்மை. இதில் மிகப்பெரிய கொடுமை, தேர்தலுக்கும் அதன் வெற்றிக்கும் கொடுக்கப்பட்ட முக்கியத்துவம், மக்களின் உயிர் கொல்லி நோய்க்கு கொடுக்கவில்லை என்பதே.

இதன் பிரதிபலிப்பு, இன்று நாடு முழுக்க மருத்துவமனைகள் நிரம்பி வழிகிறது. மருத்துவமனை நடைபாதைகளிலும், பாதை ஓரங்களிலும் நோயாளிகள் படுத்து, உயிருக்கு போராடும் நிலைதான் எங்கும். ஒரே படுக்கையில் இரு நோயாளிகள் படுத்து உறங்கும் அவலம் நினைத்து பார்க்க முடியவில்லை. மாநிலம் வாரியாக ஆக்சிஜன் சப்ளை சரியாக கிடைக்காமல், மருத்துவமனை சென்றடையாமல், டெல்லியில் ஒரே மருத்துவமனையில் 24 பேர் உயிர் இழந்தார்கள். தினமும் இந்த எண்ணிக்கை கூடிக்கொண்டே செல்கிறது. குஜராத்திலும், டெல்லியிலும், நோயாளிகள் ஆக்சிஜன் தயாரிக்கும் தொழிற்சாலை வாசலிலேயே உறவினர்கள் மூலம் தெருவில் சிகிச்சை எடுக்கும் கொடூர நிலை காண்பது கண்ணில் ரத்தம் வடிய வைக்கிறது. இந்தியாவின் இருதயத்தை கைவைத்து பிசைவது போல் உள்ளது உண்மை நிலவரம்.

Where did the state administration go? - manikam Vijayabanu

தெளிவற்ற, சரியற்ற நிர்வாகம் என்று மத்திய அரசை சொல்ல இனி என்ன வேண்டும்? போதிய அளவு தடுப்பூசி விநியோகம் இல்லை. மருத்துவமனையில் இடம் இல்லை. ரெம்டெசிவிர் மருந்துக்கும் பற்றாக்குறை. ஆக்சிஜன் சப்ளை சரியாய் இல்லை. இருக்கும் மக்கள் தொகைக்கு இரண்டாம் அலை வந்தால் மருத்துவமனையில் இடம் இல்லா நிலை வரும் என்று நன்கு தெரிந்தும் எங்கே போனது உங்கள் போர்கால/அவரசகால திட்டங்கள்? தொலை நோக்கு பார்வை என்பது வெறும் தேர்தல் வாக்குறுதி என்று உரத்து கூறுவது மட்டுமே கேட்கிறது.

கடைசியாய் கிடைத்த நான்கு மாதங்கள் சரியாக திட்டமிட்டு இருந்தால் கூட அந்ததந்த மாநிலங்களில், மாவட்டங்களில், பேரூராட்சிகளில், அரசு மற்றும் தனியார் தொடர்பான மிகப்பெரிய வணிக மைதானங்களையும், கட்டிடங்களையும் போர் கால அடிப்படையில் குறைந்தபட்சம் தேவையான அளவு மருந்து, ஆக்சிஜன், வெண்டிலேட்டர், செவிலியர் போன்ற அடிப்படை தேவைகளை தயார் செய்து, இருப்பு வைத்து, தடுப்பூசிக்கு மட்டும் சரியான வழியில் விநியோகிக்க ஏற்பாடு செய்து நிலைமையை நன்கு கையாண்டு இருக்கலாம். அரசுகள் செய்யவில்லை என்பதற்கு இப்போது இருக்கும் சீர்கெட்ட நிலையே நிலையே சிறந்த உதாரணம்.

மக்கள் தடுப்பூசிக்கும், ஆக்சிஜனுக்கும் தெருவில் அலையும் போது, இதை நிர்வாகம் செய்யும் பிரதமர் திரு. நரேந்திர மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் நமக்கு அதைவிட பிரதானமாக மேற்கு வங்கத்திலும், தமிழ்நாட்டிலும், கேரளத்திலும் தேர்தல் பணி என்று மாநிலம் வாரியாக பிரச்சாரம் சென்றது தான் நாம் வரி கட்டிய பயன். மக்கள் மருத்துவ தேவையை விட, சாரை சாரையாக ஆளும் கட்சி ஆளுமைகள் மாநிலங்கள் வாரியாக பிரச்சார பயணம் போனது மட்டுமே மக்கள் கண்ட நிகழ்வு. நிர்வாகம் செய்ய வேண்டிய முதல்வர்கள் உட்பட. இதைவிட கேவலம் என்ற நிலை இனியில்லை.

இதற்கும் உடனே, எதிர்க்கட்சிகள் மட்டும் தேர்தல் பணி செய்யலாம், எங்களை தூற்றலாம்,பிரச்சாரம் செய்யலாம் என்று நீங்கள் வரித்து கட்டி வந்தால், பதில் மிகச் சிறியது. மக்கள் ஓட்டு போட்டு, வரி கட்டி அவர்களுக்கு வேண்டியதை செய்து முடிக்க பணியில் அமர்த்தியது எதிர் கட்சியை அல்ல. உங்களை.!

குறைந்த பட்சம் அதற்கு மதிப்பு கொடுத்து, தற்போதைய மருத்துவ அவசர தேவைகளை முன்பே நன்கு திட்டமிட்டு நீங்கள் பூர்த்தி செய்து இருந்தால், அல்லது முற்பட்டு இருந்தால் மக்கள் உங்களை உன்னிப்பாக கவனித்து இருப்பார்கள். தற்போது உங்கள் தகுதி என்ன, உங்கள் உள் நிறம் என்ன என்பதை நீங்களாவே தோலுரித்து காட்டி விட்டீர்கள்.

அரசுக்கு பாமரனின் எதிர்பார்ப்பு என்ன?

முதலில், மருத்துவமனைகள் நிரம்பி வழிவதால், போர்க்கால அடிப்படையில் தற்காலிகமாக நோயாளிகள் தங்க ஏற்பாடும், அங்கு முதலுதவிக்கு தேவையான மருந்துகளும், செவிலியர் தேவைகளும், மாநிலம் , மாவட்டம் வாரியாக பூர்த்தி செய்ய வேண்டும். ஆக்சிஜன் பற்றாகுறையை சுகாதார துறை உடனடியாக கையிலெடுத்து, அரசு மூலமோ, தனியார் அல்லது தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலமோ தடையற்று கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். குறைந்தபட்சம், இதை உடனடியாக நிவர்த்தி செய்ய என்ன செய்ய வேண்டுமோ, அல்லது செய்ய முடியுமோ அதை உடனே செய்யுங்கள். அடுத்து, தடுப்பூசி விநியோகம் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். முக்கியமாக, "கொரோனா" இன்னும் ஒழியவில்லை என்பது மக்களின் அடிநெஞ்சில் நன்கு உரைத்திருக்க மத்திய, மாநில அரசு என்னென்ன செய்ய இயலுமோ அதை உடனே செய்யுங்கள்.

முதல்வர், கலெக்டர், தாசில்தார், சுகாதாரதுறை மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் அடுத்த இரண்டு மாதத்திற்கு கொரோனாவை கட்டுப்படுத்துவது மட்டுமே ஒரே குறிக்கோள் என்று, ஊடகம், வலைத்தளம், பத்திரிக்கை, டிவி, ரேடியோ, பொது தொண்டு நிறுவனங்கள் என ஒன்றிணைத்து தினமும் மக்கள் விழிப்புணர்வை இன்னும் அதிகரிக்க என்னென்ன வழிகள் உண்டே உடனே பூர்த்தி செய்யுங்கள்.

தீநுண்மியோடு மக்கள் போராடும்போது அவர்களின் ஒரே எதிர்பார்ப்பு, அரசின் பாதுகாப்பும், தெளிவான வழிகாட்டுதலும் தான். இதை மத்திய அரசும், அதை வழிமொழிந்து மாநில அரசும் அலட்சியமாக கைவிட்டு இப்போது கடைசி நிமிடத்தில் காலம் கடந்து சமூக விலக்கு குறித்து அவசர கட்டளைகளை இடுவது கோபத்தையும், வேதனையையும் ஒன்று சேர உமிழ வைக்கிறது.

அரசுக்கும், மக்களுக்கும் புரிய வேண்டியது ஒன்றே. தற்போதைய நிலையில், கொரோனாவை வீழ்த்தும் ஒரே ஆயுதம் - தடுப்பூசி. இது மக்களுக்கு தடையின்றி கிடைக்க மத்திய அரசு உடனடியாக வழி செய்ய வேண்டும்.

கடிகாரத்தின் முட்கள் இரக்கமின்றி நகருகிறது. இனி நேரமில்லை. தவிப்பது - உயிர்.

யாதும் ஊரே. யாவரும் கேளிர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+