ஐநா வரை வந்த நித்தியானந்தாவின் "கைலாசா.." உண்மையில் எங்கு இருக்கிறது! அங்கு நாம் செட்டிலாக முடியுமா
நித்தியானந்தாவின் கைலாசா நாடு எங்கே இருக்கிறது என்பதை பார்க்கலாம்
சென்னை: சமீபத்தில் கைலாசா பிரதிநிதி ஐநா மாநாட்டில் பெண் ஒருவர் கலந்து கொண்டார். இது பெரும் பேசுபொருளான நிலையில், கைலாசா எங்கு இருக்கிறது. அதன் மக்கள் யார் என்பதை விரிவாகப் பார்க்கலாம்.
கர்நாடகாவில் பிடதியில் ஆசிரமம் நடத்தி வந்த சாமியார் நித்தியானந்தா, பாலியல் வழக்குகளில் சிக்கி வெளிநாட்டிற்குத் தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது. கடந்த சில காலமாகவே நித்தியானந்தா எங்கு இருக்கிறார் என்றே தெரியவில்லை.
இருப்பினும், அவ்வப்போது அவர் திடீர் திடீரென ஆன்மீக வீடியோக்களை மட்டுமே வெளியிட்டு வந்தார். இதற்கிடையே அவர் திடீரென இந்துக்களாகத் தனியாக கைலாசா என்ற நாட்டை உருவாக்கியுள்ளதாக அறிவித்து அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்தார்.

கைலாசா
மேலும், கைலாசா நாட்டிற்குத் தனிக்கொடி, நாணயம், வெளியுறவுத்துறை உள்ளிட்டவற்றை வெளியிட்டு ஷாக் கொடுத்தார். மேலும், அனைவருக்கும் அதிர்ச்சி தரும் வகையில் கைலாசா பிரதிநிதி ஐநா மாநாட்டில் பெண் ஒருவர் கலந்து கொண்டார். யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆஃப் கைலாசாவின் பிரதிநிதியாக அவர் கலந்து கொண்டார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அப்படி பெரும் பேசுபொருளான கைலாசா எங்கு இருக்கிறது. அதன் மக்கள் யார் என்பதைப் பார்க்கலாம். இந்த கற்பனை நாடு எங்கே இருக்கிறது என்று இதுவரை யாருக்கும் தெரியவில்லை.

எங்கே இருக்கிறது
அவரது சீடர்கள் சமூக ஊடகங்களில் கைலாசா நாட்டில் இது நடக்கிறது.. அது நடக்கிறது என்று ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அப்டேட்களை கொடுத்து வருகின்றனர். ஆனால், இவை உண்மையா என்று யாருக்கும் தெரியவில்லை. நித்தியானந்தா ஈக்வடார் அருகே ஒரு தீவை வாங்கியுள்ளதாகவும் அங்கு தான் 'கைலாசா' நாட்டை நிறுவியதாகவும் பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது. இருப்பினும், அதன் படங்கள் இதுவரை வெளியாகவில்லை. இது ஒரு பக்கம் இருக்க, கைலாசா பிரதிநிதிகள் சர்வதேச நாடுகளின் தூதர்கள் என்று கூறி பல படங்களை வெளியிட்டு வருகிறது.

நித்தியானந்தா
நித்தியானந்தாவின் நாடு ஈக்வடார் அருகே உள்ள தீவு ஒன்றில் உள்ளதாகப் பல தகவல்கள் கூறுகின்றன. ஆனால், நித்தியானந்தா தங்கள் நாட்டில் இல்லை என்று ஈக்வடார் அரசு பிபிசியிடம் தெரிவித்திருந்தது. இந்துக்களால் புனிதமாகக் கருதப்படும் திபெத்தில் உள்ள கைலாச மலையின் பெயரை நித்தியானந்தா வைத்துள்ளார். கைலாச நாட்டிற்குத் தனி இணையதளமும் இருக்கிறது. அதில், "கைலாசா என்பது கனடா, அமெரிக்கா மற்றும் பிற நாடுகளைச் சேர்ந்த இந்து ஆதி ஷைவ சிறுபான்மை சமூகத்தின் உறுப்பினர்களால் நிறுவப்பட்டு ஒரு இயக்கமாகும், இது அனைவருக்கும் பாதுகாப்பைத் தர உருவாக்கப்பட்டுள்ளது.

குடியுரிமை
இனம், பாலினம், பிரிவு, ஜாதி அல்லது மதம் ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் இந்துக்கள் நிம்மதியாக வாழவும், தங்கள் ஆன்மீகம், கலை மற்றும் கலாச்சாரத்தை வன்முறையின்றி இங்கு வெளிப்படுத்தவும் முடியும்" என்று கூறப்பட்டுள்ளது. இதனிடையே நேற்றிரவு கைலாசாவின் ட்விட்டர் கணக்கு இ விசா மற்றும் இ குடியுரிமை கோரி விண்ணப்பிக்கலாம் என்று அழைப்பு விடுத்திருந்தது. மேலும், தங்களுக்கென தனியாக அரசியலமைப்பு, பாஸ்போர்ட் மற்றும் சின்னம் இருப்பதாகவும் கைலாசா கூறுகிறது. இது மட்டுமின்றி மேலும் பல துறைகளும் கைலாசாவில் உள்ளது. புலம்பெயர்ந்த இந்துக்களுக்கான இடம் என்றே 'கைலாசா' தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கைலாசா அங்கீகரிக்கப்பட்ட நாடா
நித்தியானந்தாவுக்குச் சிக்கலே இங்கு தான். அவரது சீடர்கள் பல சர்வதேச நிகழ்வுகளில் கலந்து கொண்டு கைலாசா நிஜமாகவே ஒரு நாடு தான் என்ற பிம்பத்தை உருவாக்க சமூக வலைத்தளங்களில் போராடி வருகின்றனர். இருப்பினும். ஐக்கிய நாடுகள் சபை கைலாசாவை இதுவரை தனி நாடாக அங்கீகரிக்கவில்லை. 1933 மான்டிவீடியோ மாநாட்டின்படி, குறிப்பிட்ட பகுதி ஒரு நாடு அங்கீகரிக்கப்பட நிரந்தர மக்கள்தொகை, அரசு, பிற நாடுகளுடன் உறவுகளை வைத்திருக்கும் திறன் தேவை. சர்வதேச மன்றத்தில் அங்கீகாரம் தேவை என்பதாலேயே கைலாசா பிரதிநிதிகளை ஐநாவுக்கு நித்தியானந்தா அனுப்பினார். இருப்பினும், அவர்களின் கருத்து கொள்ளப்படாது என்று ஐநா கூறிவிட்டது.

அங்கீகாரம் இருக்கிறதா
ஐநாவால் அங்கீகரிக்கப்படும் நாட்டால் பல சர்வதேச மன்றங்கள், உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்தை அணுக முடியும். இது தான் கைலாசாவுக்கு இன்னும் கிடைக்கவில்லை. ஒரு பிரதேசம் நாட்டின் அந்தஸ்தைப் பெறவில்லை என்றால், அதை மைக்ரோ நேஷன் (micronation) என்று அழைக்கலாம். சுதந்திர நாடு என்று தங்களை அறிவித்துக் கொண்டாலும் சர்வதேச சமூகம் அல்லது ஐநாவால் அங்கீகரிப்படாத பகுதிதான் மைக்ரோ நேஷன். சர்வதேச அளவில் 80க்கும் மேற்பட்ட மைக்ரோ நேஷன்கள் இருந்தன. 1980களில் அமெரிக்காவின் ஓரிகானில் அப்போது பிரபலமாக இந்திய ஆன்மீக குரு ரஜ்னீஷ் என்பவர் ரஜ்னீஷ்புரம் என்ற மைக்ரோ நேஷனை உருவாக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications