மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் மறைவு.. அவர் பங்கேற்ற கடைசி நிகழ்வு எது தெரியுமா? பக்தர்கள் சோகம்!
சென்னை: மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் இன்று திடீரென மாரடைப்பால் காலமான நிலையில், அவர் கலந்து கொண்ட கடைசி நிகழ்ச்சி என்ன என்பது குறித்துப் பார்க்கலாம்.
செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூரில் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தை நிறுவி, அதன் குருவாக இருந்தவர் பங்காரு அடிகளார். இவர் ஏழை மக்களுக்கு மிகப் பெரிய நம்பிக்கையாகவே இருந்து வந்துள்ளார்.

மேலும், ஆதிபராசக்தி சித்தர் பீடம் சார்பில் கல்வியை கற்றுத் தரவும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது மருத்துவக் கல்லூரி, பொறியியல் கல்லூரிகள், பள்ளிகள் உள்ளிட்ட பல கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது.
பங்காரு அடிகளார்: இவரது அருள் வாக்கைக் கேட்கவே தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் இருந்தும் பக்தர்கள் வருகை தந்தனர். இவரது அருள் வாக்கு பொது மக்களுக்கு மிகப் பெரிய நம்பிக்கையை ஏற்படுத்துவதாக இருந்தது. மேலும், ஆன்மீகத்திலும் இவர் பல்வேறு புரட்சிகளைச் செய்துள்ளார். குறிப்பாக ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் கருவறையில் பெண்களைப் பூஜை செய்ய அனுமதித்தார். மேலும், மாதவிடாய் நாட்கள் உட்பட அனைத்து நாட்களிலும் பெண்கள் வழிபடலாம் என்ற முறையை அமல்படுத்தினார்.
இப்படி பல்வேறு ஆன்மீகப் புரட்சி செய்தவர் பங்காரு அடிகளார். இருப்பினும், கடந்த ஓராண்டாகவே இவர் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். அவ்வப்போது மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வந்தார். இதற்கிடையே இப்போது அவர் திடீரென காலமானார். மாரடைப்பால் அவரது உயிர் பிரிந்துள்ளது. பங்காரு அடிகளாருக்கு நாளைய தினம் இறுதிச் சடங்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடைசி நிகழ்ச்சி: கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் நவராத்திரி விழாவில் பங்காரு அடிகளார் கலந்து கொண்டிருந்தார். ஒவ்வொரு ஆண்டும் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் நவராத்திரி விழா 11 நாட்கள் வெகு சிறப்பாக நடைபெறும். அதன்படி கடந்த அக். 14ஆம் தேதி ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் நவராத்திரி விழா தொடங்கியது. அப்போது நவராத்திரி அகண்ட தீபத்தைப் பங்காரு அடிகளார் ஏற்றி வைத்தார்.
அன்றைய தினம் அதிகாலை 3 மணியளவில் ஆதிபராசக்தி அம்மனுக்கு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. தொடர்ந்து காலை 11 மணிக்குப் பங்காரு அடிகளாருக்கு ஆதிபராசக்தி சித்தர் பீடத்திற்கு வந்திருந்தார். அவருக்குப் பாத பூஜை செய்து வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது சித்தர் பீடத்தை வலம் வந்த அவர், கருவறையில் இருந்த ஆதிபராசக்தி அம்மனுக்குத் தீபாராதனை காட்டினார். மேலும், நவராத்திரி அகண்ட தீபத்தையும் ஏற்றி வைத்தார்.
இப்படிக் கடந்த வாரம் தான் நவராத்திரி நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தார். இதற்கிடையே வெறும் சில நாட்களில் அவர் எதிர்பாராத விதமாக மாரடைப்பால் காலமாகியுள்ளார். இது பொதுமக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பங்காரு அடிகளாருக்கு பல்வேறு உலக நாடுகளிலும் பக்தர்கள் இருக்கும் நிலையில், இந்த செய்தி அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாகவே இருக்கிறது.












Click it and Unblock the Notifications