“ரிப்பீட்டு”.. எகிறி அடிக்கும் எடப்பாடி! “ஆஃப்”ஆனாரா அண்ணாமலை? “பம்மும்” பாஜக -“தடதடக்கும்” தாமரைகள்
தமிழ்நாடு பாஜக தரப்பில் எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுகவுக்கு எதிராக பேசும் தங்கள் கட்சியினரை கட்டுப்படுத்த பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு இருப்பது தெளிவாக தெரிகிறது.
சென்னை: அதிமுகவினருக்கும் பாஜகவுக்கும் இடையிலான மோதல் உச்சக்கட்டத்துக்கு சென்று இரு தரப்பினரும் ஒருவர் மீது ஒருவர் மாறி மாறி விமர்சனங்களை சுமத்தி வரும் நிலையில், அடுத்தடுத்து இரு கட்சிகளின் நடவடிக்கைகளை உற்று நோக்கினால் எடப்பாடி பழனிசாமிக்கு அண்ணாமலை அடங்கிப்போவதை போல் தெரிவதாக அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மீது தமிழ்நாடு பாஜக ஐடி விங் தலைவராக இருந்த சிடிஆர் நிர்மல் குமார் கடந்த வாரம் பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தி அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். அன்று தொற்றிக்கொண்ட அரசியல் பரபரப்பு இன்னும் ஓயவில்லை.
பாஜகவிலிருந்து நிர்மல் குமார் விலகியவுடன் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அதிமுகவில் இணைந்து கொண்டார். பாஜகவை ஐடி விங் மாநில செயலாளராக திலிப் கண்ணனும் அவரை தொடர்ந்து கட்சியிலிருந்து வெளியேறினார்.

பாஜக டூ அதிமுக
அண்ணாமலை மீது புதிய குற்றச்சாட்டுகளை சுமத்தி கட்சியை விட்டு விலகிய திலிப் கண்ணன் உள்ளிட்ட பாஜகவினர் நிர்மல் குமார் முன்னிலையில் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அதிமுகவில் இணைந்தனர். எடப்பாடி பழனிசாமியின் இந்த செயல்தான் தமிழ்நாடு பாஜகவை கோபமடைய செய்து உள்ளது.

தொடங்கி வைத்த அமர் பிரசாத்
இந்த கோபத்தை அண்ணாமலைக்கு மிகவும் நெருக்கமான பாஜக மாநில விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு தலைவரான அமர்பிரசாத் ரெட்டி முதலில் வெளிப்படத்தவே இன்று வரை இரு கட்சிகளுக்கு மத்தியிலான மோதல்கள், புகைப்பட எரிப்புகளும், பரபரப்பு குற்றச்சாடுகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.

அதிமுக இப்படி செய்திருக்க கூடாது
அமர் பிரசாத் ரெட்டி ட்விட்டரில் இதுகுறித்து வெளியிட்ட பதிவில், “அதிமுக கூட்டணியில் இருக்கும்போது இப்படி செய்திருக்க கூடாது. பாஜகவில் இருந்து விலகுபவர்களை அதிமுக அரவணைக்க கூடாது. தமிழ்நாட்டின் வருங்காலம் பாஜகதான். அண்ணாமலை தலைமையில் பாஜக தமிழ்நாட்டில் ஆட்சியமைக்கும்.” என்று குறிப்பிட்டு இருந்தார்.

காட்சி கொடுங்கள் ஐயா
மற்றொரு பதிவில் “கட்சிக்கே பிரச்னை என்றதும், 'காட்சி கொடுங்கள் ஐயா' என்று ஓடோடி வந்தவர்களெல்லாம் இன்று, அகில உலக தலைவர்களாக காட்டிக் கொள்ள விழைகின்றனர். உதவி செய்தவர்களை துச்சமாக மதிப்பதுதான் அவர்களுக்குத் தெரிந்த அரசியல் என்றால், அந்த அரசியல் எங்களுக்கு ஒரு நாளும் வேண்டாம்!” என்று தெரிவித்தார்.

அதிமுகவினர் விமர்சனம்
இது குறித்து தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை அளித்த பேட்டியில், தன்னை அவர் தன்னை ஜெயலலிதாவுடன் ஒப்பிட்டதாக கூறி அதிமுக முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜு, கடம்பூர் ராஜு உள்ளிட்டோர் அவரை கடுமையாக விமர்சித்தனர். அதிமுகவில் கேபி முனுசாமி, பாஜகவில் கரு நாகராஜன் உள்ளிட்ட தலைவர்கள் இதை நிறுத்த முயன்றாலும் அது தொடர்ந்துகொண்டே இருக்கிறது.

உருவ படங்கள் எரிப்பு
கடந்த சில நாட்களுக்கு முன் தூத்துக்குடியில் எடப்பாடி பழனிசாமியின் உருவ படத்தை எரித்து பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை கண்டித்து அரியலூர் மாவட்டத்தில் அதிமுகவினர் அண்ணாமலையின் உருவபடத்தை எரித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் இரு கட்சியினர் இடையே மோதல் வெடித்தது.

அடங்காத எடப்பாடி.. அடக்கும் பாஜக?
நிலைமை இப்படி இருக்க எடப்பாடி பழனிசாமி தரப்பினர் பெரிதாக எந்த முயற்சியும் மேற்கொண்டதைபோல் தெரியவில்லை. ஆனால், தமிழ்நாடு பாஜக தரப்பில் எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுகவுக்கு எதிராக பேசும் தங்கள் கட்சியினரை கட்டுப்படுத்த பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு இருப்பது தெளிவாக தெரிகிறது.

மைக்கை பிடுங்கிய கரு நாகராஜன்
அண்மையில் சென்னையில் நடைபெற்ற பாஜக ஆர்ப்பாட்டத்தில் சென்னை மத்திய மாவட்ட பாஜக தலைவர் விஜய் ஆனந்த், எடப்பாடி பழனிசாமியை விமர்சிக்க முற்பட்டபோது அருகில் பாஜக மாநில துணைத் தலைவர் கரு.நாகராஜன் கோபமாக மைக்கை பிடுங்கியது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் அதிகளவில் பகிரப்பட்டது.

பாஜக நிர்வாகி தற்காலிக நீக்கம்
இந்த நிலையில் தற்போது எடப்பாடி பழனிசாமி படத்தை எரித்த தூத்துக்குடி வடக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் இளைஞர் அணி மாவட்ட தலைவர் தினேஷ் ரொடி தற்காலிகமாக கட்சியில் இருந்து நீக்கப்பட்டு இருக்கிறார். கட்சியின் கொள்கை, குறிக்கோள்களுக்கு முரணாக செயல்பட்டதாலும் கட்சியின் நிலைப்பாட்டை மீறி தன்னிச்சையாக செயல்படுவதாலும் கூறி அவர் மீது நடவடிக்கை பாய்ந்து இருக்கிறது.

எகிறும் அதிமுக முன்னாள் அமைச்சர்கள்
அதே நேரம் அதிமுக முன்னாள் அமைச்சர்களோ தொடர்ந்து பாஜகவை விமர்சித்து வருகிறார்கள். வழக்கம்போல் முன்னாள் அமைச்சரும் மூத்த நிர்வாகியுமான பொன்னையன் பேட்டிகளில் பாஜகவை விமர்சித்து வருகிறார். முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜுவும் பொதுக்கூட்டம் ஒன்றில் அண்ணாமலையை ஒருமையில் பேசியதாக சர்ச்சை எழுந்தது.

மோடியுடன் தம்பிதுரை சந்திப்பு
முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனும் ஈரோடு கிழக்கு தேர்தலில் பாஜக கூட்டணியால் சிறுபான்மையினர் வாக்குகள் அதிமுகவுக்கு கிடைக்கவில்லை என்று தெரிவித்து மோதலுக்கு எண்ணெய் ஊற்றினார். அதே நேரம் அதிமுக மூத்த தலைவரும் மக்களவை முன்னாள் துணை சபாநாயகருமான தம்பிதுரை பிரதமர் மோடியை சந்தித்து பேசி உள்ளார்.












Click it and Unblock the Notifications