வெள்ளை அறிக்கைன்னு வாயை விட்ட விஜய்.. இதோ வந்துட்டாரு காடேஸ்வரா.. இந்து முன்னணி கேட்டதை பாருங்க
சென்னை: தமிழகத்தின் நிதிநிலை மற்றும் கோவில் நிர்வாகத்தில் நடந்ததாகக் கூறப்படும் முறைகேடுகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடக் கோரி எழுந்துள்ள கோரிக்கைகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.. கடந்த திமுக ஆட்சி காலத்தில் அறநிலையத்துறையில் நடந்த குளறுபடிகளை வெளிச்சத்திற்கு கொண்டு வர வேண்டும் என இந்து முன்னணி வலியுறுத்தியுள்ளது.. புதிய அரசு தாக்கல் செய்யப்போகும் இந்த அறிக்கை நிர்வாக வெளிப்படைத்தன்மைக்கான முக்கிய தொடக்கமாக பார்க்கப்படுகிறது..!!
ஒரு குறிப்பிட்ட விவகாரத்தைப் பற்றி முழுமையாக ஆய்வு செய்து, அதன் உண்மைத் தன்மையை விளக்கி அரசாங்கம் வெளியிடும் அதிகாரப்பூர்வ ஆவணமே 'வெள்ளை அறிக்கை' (White Paper) என்று அழைக்கப்படுகிறது.

வெள்ளை அறிக்கை கேட்கிறார் காடேஸ்வரா
பிரிட்டிஷ் நாடாளுமன்ற நடைமுறையிலிருந்து இந்தியா பின்பற்றி வரும் இந்த முறையானது, பெரும்பாலும் ஒரு நாட்டின் அல்லது மாநிலத்தின் நிதி நெருக்கடி மற்றும் முக்கியப் பிரச்சினைகளை மக்களுக்கும் பிற கட்சிகளுக்கும் தெளிவுபடுத்த பயன்படுத்தப்படுகிறது.
சமீபத்தில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் அறிவித்துள்ள வெள்ளை அறிக்கையானது 'நிதி அடிப்படையிலானது' என்று அறியப்படுவதால், அதில் தமிழகத்தின் தற்போதைய கடன் சுமை, வருமான வாய்ப்புகள் மற்றும் நிதி மேலாண்மை குறித்த தரவுகள் இடம்பெற வாய்ப்புள்ளது. ஏற்கனவே கடந்த 2021-ம் ஆண்டு திமுக அரசு பொறுப்பேற்ற போது, அப்போதைய நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தமிழகத்தின் நிதி நிலை குறித்த விரிவான வெள்ளை அறிக்கையை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்து முன்னணி அதிரடி
தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்றபோது, தன்னுடைய உரையில் இந்த வெள்ளை அறிக்கை பற்றின தகவலை வெளியிட்டிருந்தார்.. "ரூ.10 லட்சம் கோடிக்கும் மேல் கடன் வாங்கி வைத்திருக்கிறார்கள். கஜானாவைத் துடைத்து வைத்துவிட்டுச் சென்றிருக்கிறார்கள். தூக்க முடியாத சுமையை ஏற்றி வைத்துவிட்டுச் சென்றிருக்கிறார்கள். இந்த நிலையில்தான் இந்த அரசு நம் கைகளுக்கு வந்திருக்கிறது.
எது எந்த நிலையில் இருக்கிறது என்பதைப் பார்த்துவிட்டு ஒரு வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும் என விரும்புகிறேன்" என்று கூறியிருந்தார்.
தமிழகத்தின் நிதிநிலை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்போவதாக முதல்வர் விஜய் அறிவித்துள்ள நிலையில், வெறும் நிதி நிலையை மட்டும் பார்க்காமல் கடந்த திமுக ஆட்சியில் அனைத்து துறைகளிலும் நடந்த முறைகேடுகள் குறித்து விரிவான வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும் என இந்து முன்னணி வலியுறுத்தியுள்ளது..
குடமுழுக்கு - விசாரணை தேவை
இது தொடர்பாக அந்த அமைப்பின் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த திமுக ஆட்சி காலத்தில் சுமார் 3,000 கோவில்களில் மிகவும் அவசர கதியில் குடமுழுக்கு நடத்தப்பட்டதாக பகிரங்கமாகவே குற்றம் சாட்டியுள்ளார்.. இந்த பணிகளுக்காக பல லட்சம் கோடி ரூபாய் நிதி திரட்டப்பட்டதில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாகவும், இது குறித்து புதிய அரசு உரிய விசாரணை நடத்தி உண்மையை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்..
குறிப்பாக இந்து சமய அறநிலையத்துறையின் கடந்த கால செயல்பாடுகள் குறித்து முழுமையான வெள்ளை அறிக்கை தாக்கல் செய்யப்பட வேண்டும் என்பதே பக்தர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. திமுக ஆட்சியின் போது கோவில் நிலங்கள் மற்றும் வீடுகளை முறைகேடாக தனியாருக்கும் அரசு துறைகளுக்கும் தாரை வார்த்த சம்பவங்கள் அரங்கேறியுள்ளன.
அறநிலையத்துறை அதிகாரிகள் முறைகேடு?
இதற்கு சில அரசு அதிகாரிகள் உடந்தையாக செயல்பட்டது தொடர்பாக ஏற்கனவே வழக்குகள் பதிவாகியுள்ளதை சுட்டிக்காட்டியுள்ள காடேஸ்வரா சுப்ரமணியம், இந்த விவகாரத்தில் வெளிப்படைத்தன்மை அவசியம் என குறிப்பிட்டுள்ளார்.. புதிய அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில், வரும் காலங்களில் அறநிலையத்துறை அதிகாரிகள் எவ்வித முறைகேடுகளுக்கும் இடம் தராமல் நேர்மையாக இறைவனுக்கு பணி செய்யும் சூழலை முதல்வர் விஜய் உருவாக்கி தர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்..
தமிழகத்தின் கடன் சுமை மற்றும் நிதி வருவாய் ஆதாரங்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், எதிர்க்கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் கடந்த கால நிர்வாக குறைபாடுகளையும் அதில் சேர்க்க வேண்டும் என அழுத்தம் கொடுத்து வருகின்றன.
வெளிச்சத்துக்கு வரும் குளறுபடிகள்
முக்கியமாக, ஆன்மீக ரீதியிலான சொத்துக்கள் மற்றும் கோவில் நிர்வாகத்தில் நடந்த குளறுபடிகளை வெளிச்சத்திற்கு கொண்டு வருவதன் மூலமே நிர்வாகத்தை சீரமைக்க முடியும் என இந்து முன்னணி கருதுகிறது.. இதனால் முதல்வர் விஜய் வெளியிடப்போகும் அந்த வெள்ளை அறிக்கையில் எந்தெந்த துறைகளின் ரகசியங்கள் மற்றும் முறைகேடுகள் அம்பலமாகும் என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் இப்போதே தொற்றிக்கொண்டுள்ளது.
மக்களின் வரிப்பணம் மற்றும் கோவில் சொத்துக்கள் எவ்வாறு கையாளப்பட்டன என்பதை விளக்கும் வகையில் இந்த அறிக்கை அமைய வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது..!!












Click it and Unblock the Notifications