ரூ.1000 மகளிர் உரிமைத்தொகை.. அதிகாரிகள் உங்க வீட்டுக்கே வரப்போறாங்க.. அப்படி வரலன்னா? ஆஹா!
சென்னை: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கான விண்ணப்பங்களை ஆய்வு செய்யும் பணி இன்று முதல் தொடங்க உள்ளது. விண்ணப்பதாரர்கள் சமர்ப்பித்த விவரங்களில் சந்தேகம் இருப்பவர்களின் வீடுகளில் அதிகாரிகள் கள ஆய்வு நடத்த உள்ளனர்.
திமுக ஆட்சிக்கு வந்தால் மாதந்தோறும் குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000 உரிமைத்தொகை வழங்கப்படும் என்று தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டது. ஆனால் இரண்டு ஆண்டுகள் ஆகியும் உரிமைத்தொகை வழங்கப்படாத நிலையில், எதிர்க்கட்சிகள் இது குறித்து கடுமையாக விமர்சித்து வந்தனர். இதையடுத்து அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் 15ஆம் தேதி முதல் இந்த உரிமைத் தொகை வழங்கப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தார்.

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கான விண்ணப்பங்கள் கடந்த ஜூலை மாதம் 20ஆம் தேதி முதல் தமிழ்நாடு முழுவதும் தொடங்கின. விண்ணப்பங்களைப் பதிவு செய்யும் முகாமை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த மாதம் 24ஆம் தேதி தருமபுரி மாவட்டத்தில் தொடங்கி வைத்தார். விண்ணப்ப பதிவு முகாம்கள் 2 கட்டங்களாக நடத்தப்பட்டன.
இந்த இரண்டு முகாம்களிலும் விண்ணப்பிக்கத் தவறியவர்கள் ஆகஸ்ட் 18, 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சிறப்பு முகாம்களில் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்தது. அதன்படி, தமிழ்நாடு முழுவதும் மகளிா் உரிமைத் தொகை திட்ட பதிவுக்கான சிறப்பு முகாம்களும் நிறைவு பெற்றுள்ளது.
இத்திட்டத்தில் பெறப்பட்ட விண்ணப்பங்கள், இதற்கென உருவாக்கப்பட்ட செயலியில் பதிவு செய்யப்பட்டுள்ளன. மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு இதுவரை 1.63 கோடி பெண்கள் விண்ணப்பித்துள்ளனர். மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விண்ணப்பதிவு பணி நிறைவடைந்துள்ள நிலையில், இந்த விவரங்கள் மீது பரிசீலனை நடைபெற்று வருகின்றன.
பரிசீலனைக்கு பின்னர் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டதா? நிராகரிக்கப்பட்டதா? என்பது குறித்த விவரம், கைப்பேசி குறுஞ்செய்தி மூலம் விண்ணப்பதாரர்களுக்கு அனுப்பப்படும். ஆகஸ்ட் இறுதிக்குள் விண்ணப்பங்கள் அனைத்தையும் பரிசீலனை செய்ய அரசு திட்டமிட்டுள்ளது.
இந்தப் பணிகளுக்கென நியமிக்கப்பட்ட அலுவலர்கள், தன்னார்வலர்கள் உள்ளிட்டோர் அடங்கிய குழு, சமர்ப்பிக்கப்பட்ட படிவங்கள் மீது சந்தேகம் இருந்தால் மட்டும் பயனாளிகளின் வீடுகளுக்கு மட்டும் நேரில் சென்று கள ஆய்வில் ஈடுபட உள்ளனர்.
தகுதியானவர்கள் யாரும் விடுபட்டு விடாமல் கவனமுடன் விண்ணப்பங்கள் ஆய்வு செய்யப்படுகின்றன. இந்த திட்டத்தில் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டாலோ நிராகரிக்கப்பட்டாலோ அதுகுறித்த தகவல், பயனாளியின் மொபைல் போன் எண்ணுக்கு தெரியப்படுத்தப்படும்.

விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டால், அது தொடர்பாக பயனாளிகள் மேல்முறையீடு செய்யலாம். அதைத்தொடர்ந்து வருவாய் கோட்டாட்சியர்கள் ஆய்வு நடத்துவார்கள். அந்த நேரத்தில் மட்டுமே வீட்டிற்கு நேரடியாகச் சென்று கள ஆய்வு அதிகாரிகள் மேற்கொள்ள உள்ளனர். அந்தவகையில், விண்ணப்பித்த அனைவரின் வீடுகளிலும் கள ஆய்வு நடைபெறாது.
பயனாளிகள் பட்டியல் இறுதி செய்யப்பட்டு அவர்களின் வங்கிக் கணக்கில் மாதந்தோறும் உதவித்தொகை ரூ.1,000 வழங்க ஏற்பாடுகள் செய்யப்படும். இதற்கான பணிகளை தமிழ்நாடு அரசு தீவிரப்படுத்தியுள்ளது. விண்ணப்பங்கள் அனைத்தையும் பரிசீலனை செய்யும் பணி இம்மாதம் இறுதிக்குள் நிறைவடையும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications