கலக்கிய கள்ளக்குறிச்சி.. அதிகபட்ச வாக்குகள் பதிவு! உற்றுநோக்கும் வேட்பாளர்கள்! கள நிலவரம் என்ன
சென்னை: தமிழ்நாட்டில் இந்த லோக்சபா தேர்தலில் கள்ளக்குறிச்சி தொகுதியில் தான் அதிகபட்ச வாக்குகள் பதிவாகி உள்ள நிலையில், அங்கு களத்தில் உள்ள வேட்பாளர்கள் விவரங்களை பார்க்கலாம்.
நமது நாட்டில் மொத்தம் ஏழு கட்டமாக இந்த முறை லோக்சபா தேர்தல் நடைபெறுகிறது. அதை தொடர்ந்து ஜூன் 4ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

அதில் தமிழ்நாட்டில் இருக்கும் 39 தொகுதிகள் உட்பட மொத்தம் 102 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடந்தது. காலை முதலே மக்கள் ஆர்வமாக வந்து வக்களித்தார்கள்.
லோக்சபா தேர்தல்: கடந்த 2009இல் 73.02 சதவிகித வாக்குகள் பதிவான நிலையில், கடந்த 2014இல் 73.74 சதவீதமும், 2019இல் 72.47 சதவீதமும் பதிவாகி இருந்தது. அதேநேரம் இந்த முறை தமிழ்நாட்டில் மாலை 7 மணி வரை 72.09% வாக்குகள் பதிவாகி உள்ளதாக சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். இன்னும் கூட சில தொகுதிகளில் டோக்கன் பெற்றவர்கள் வாக்களித்து வருவதால் இறுதி வாக்குப்பதிவு சதவிகிதம் சற்று அதிகரிக்கலாம் என்றும் சாகு தெரிவித்தார்.
எங்கு அதிகம்: தொகுதி வாரியாக பார்க்கும் போது தமிழ்நாட்டில் அதிகபட்சமாக கள்ளக்குறிச்சியில் 75.67% வாக்குகள் பதிவாகி உள்ளது. தொடர்ந்து தர்மபுரி தொகுதியில் 75.44% வாக்குகள், சிதம்பரம் தொகுதியில் 74.87% வாக்குகள் பதிவாகி இருக்கிறது. இதில் அதிகபட்ச வாக்குகள் பதிவான கள்ளக்குறிச்சி தொகுதி குறித்து நாம் பார்க்கலாம்.
கள்ளக்குறிச்சி: இந்த கள்ளக்குறிச்சி தொகுதியை பொறுத்தவரை அங்கே மொத்தம் 37 பேர் வேட்புமனு தாக்கல் செய்து இருந்தனர். அதில் 21 பேரின் வேட்புமனுக்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்பட்டது. 16 பேரின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டது. யாரும் தங்கள் வேட்புமனுவை வாபஸ் பெறாத நிலையில், 21 பேர் கள்ளக்குறிச்சியில் களத்தில் உள்ளனர்.
கள்ளக்குறிச்சியில் திமுக சார்பில் மலையரசன் களத்தில் இருக்கிறார். அதிமுக சார்பில் ஆர்.குமரகுரு களத்தில் இருக்கும் நிலையில், பாஜக கூட்டணியில் பாமகவில் இருந்து ஆர். தேவதாஸ், நாம் தமிழர் சார்பில் ஜெகதேச பாண்டியன் ஆகியோர் களத்தில் உள்ளனர். மேலும், பகுஜுன் சமாஜ் சார்பில் ஜீவன்ராஜ் போட்டியிடுகிறார். இது தவிர வேறு சிறு கட்சிகள் சுயேச்சைகள் என மொத்தம் 21 வேட்பாளர்கள் இங்கே களத்தில் உள்ளனர்.
கடந்த தேர்தல்: கள்ளக்குறிச்சியில் கடந்த 2019 தேர்தலை பொறுத்தவரை அங்கு திமுக சார்பில் பொன்முடி மகன் கவுதம சிகாமணி போட்டியிட்டார். அதிமுக- பாஜக கூட்டணியில் இருந்து தேமுதிகவில் இருந்து விஜயகாந்த் மைத்துனர் எல்கே சுதேஷ் போட்டியிட்டார். அந்தத் தேர்தலில் 7.2 லட்சம் வாக்குகளை பெற்று 3.99 வாக்கு வித்தியாசத்தில் கவுதம சிகாமணி வெற்றி பெற்றார்.












Click it and Unblock the Notifications