NEET தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் யார்?.. அரசு பள்ளி மாணவர்கள் எவ்வளவு?.. மாணிக்கம் தாகூர் கேள்வி
சென்னை: இந்தியாவில் NEET-UG தேர்வில் உண்மையாக யார் தேர்ச்சி பெறுகிறார்கள்?. அதில் எத்தனை பேர் அரசுப் பள்ளி மாணவர்கள் என்று நீட் தேர்வு முடிவுகளின் வகை வாரியான, பள்ளி வகை வாரியான பகுப்பாய்வை மத்திய கல்வித் துறை அமைச்சரும், தேர்வு முகமையும் வெளியிட வேண்டும் என்று காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் மே 4 ஆம் தேதி நீட் தேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வானது 557 நகரங்களில் 13 மொழிகளில் நடத்தப்பட்டது. மொத்தமாக 22.7 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்திருந்த நிலையில், சுமார் 22 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் தேர்வை எழுதி இருந்தனர். இதைத்தொடர்ந்து, இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன.

இந்த தேர்வில் 12.36 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டை போல நடப்பாண்டிலும் மாணவிகளே அதிக அளவு தேர்ச்சி பெற்றுள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலம் அதிக தேர்ச்சியுடன் முதலிடத்தில் இருக்கிறது. உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த 1 லட்சத்து 70 ஆயிரத்து 684 மாணவர்கள் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
அதற்கடுத்தபடியாக மகாராஷ்டிரம், ராஜஸ்தான், கர்நாடகம், பீகார், தமிழ்நாடு, கேரளம் உள்ளன. சிபிஎஸ்இ தேர்வு முடிவுகளில் வடமாநிலங்களை விட தென் மாநிலங்களே முன்னணியில் இருந்த நிலையில், நீட் தேர்வு முடிவுகளில் வடஇந்திய மாநிலங்களே முன்னணியில் உள்ளன.
இந்நிலையில், இந்தியாவில் NEET-UG தேர்வில் உண்மையாக யார் தேர்ச்சி பெறுகிறார்கள்?. அதில் எத்தனை பேர் அரசுப் பள்ளி மாணவர்கள் என்று நீட் தேர்வு முடிவுகளின் வகை வாரியான, பள்ளி வகை வாரியான பகுப்பாய்வை மத்திய கல்வித் துறை அமைச்சர், என்டிஏ வெளியிட வேண்டும் என்று காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது: இந்தியாவில் NEET-UG தேர்வில் உண்மையாக தேர்ச்சி பெறுபவர்கள் யார்?. நீட் தேர்வுக்கு இந்தியாவில் 22.7 லட்சம் மாணவர்கள் பதிவு செய்துள்ளனர். இதில், 12.36 லட்சம் பேர் தகுதி பெற்றுள்ளனர். ஆனால், இதில் எத்தனை பேர் அரசுப் பள்ளிகளைச் சேர்ந்தவர்கள்?.
NEET-UG 2025 தேர்வில் முதலிடம் பிடித்தவர்கள் பட்டியலில் டெல்லி, ராஜஸ்தான், பீகார், மகாராஷ்டிரா மற்றும் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த மாணவர்கள் உள்ளனர். இவர்கள் பெரும்பாலும் நகர்ப்புற, தனியார் பள்ளிப் பின்னணியைச் சேர்ந்தவர்கள். ஆனால், அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த எத்தனை மாணவர்கள் அதில் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பது குறித்த தரவுகள் எதுவும் இல்லை.
NEET உண்மையிலேயே ஒரு "தேசிய அளவிலான நுழைவுத் தேர்வு" என்றால், அதில் சமமான அணுகுமுறை என்பது அதன் மையத்தில் இருக்க வேண்டும். மாநில வாரியான அரசுப் பள்ளிகளின் செயல்திறன், நகர்ப்புற மற்றும் கிராமப்புற பள்ளிகளுக்கு இடையேயான பிளவு, பின்தங்கிய மாணவர்களுக்கான ஆதரவு அமைப்புகள் குறித்த வெளிப்படைத் தன்மை நமக்கு தேவை.
அரசுப் பள்ளிகளில் லட்சக்கணக்கான மாணவர்கள் NEET-ஐ விரும்புகிறார்கள். ஆனால் அதற்கான உள்கட்டமைப்பு, பயிற்சி அல்லது வழிகாட்டுதல் இல்லை. இந்த தேர்வு முறை அரசுப் பள்ளி மாணவர்களை வெற்றி பெறச் செய்கிறதா, அல்லது சலுகை பெற்ற சிலரை மட்டும் வடிகட்டுகிறதா என்பதை நாம் கேட்க வேண்டும்.
எனவே, நீட் தேர்வு முடிவுகளின் வகை வாரியான மற்றும் பள்ளி வகை வாரியான பகுப்பாய்வை மத்திய கல்வித் துறை அமைச்சரும், தேர்வு முகமையும் வெளியிட வேண்டும். நமது பொதுக் கல்வி முறை அனைத்து மாணவர்களுக்கு நியாயமாக உள்ளதா என்பதை அறிய இந்தியா தகுதியானது என்று தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications
