"அடுத்த முதல்வர் ஸ்டாலின்தான், கன்பார்ம்".. எடப்பாடியாரை ஓவர்டேக் செய்து.. அதிர வைத்த நக்கீரன் சர்வே
வரும் தேர்தலில் உங்கள் ஓட்டு யாருக்கு என்ற சர்வே எடுக்கப்பட்டுள்ளது
சென்னை: அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நக்கீரன் சர்வே முடிவுகள் வெளியாகியுள்ளன. அதில் பல கேள்விகள் கேட்டு மக்களிடமிருந்து கருத்துக் கணிப்பை வாங்கி வெளியிட்டுள்ளனர்.
தமிழக சட்டசபைத் தேர்தலில் யாருக்கு வாக்களிப்பீங்க என்ற கேள்விக்கு பாதிக்கும் மேற்பட்டோர் திமுகவுக்கு என்று கூறியுள்ளனராம். ஆட்சி மாற்றம் வேண்டும் என்று விரும்புவோர் அதிகம் இருப்பதையே இது உணர்த்துகிறது.
அதேசமயம், கமல்ஹாசன், நாம் தமிழர் கட்சிகளுக்கு கடந்த முறை போலவே இந்த முறையும் ஆதரவு காணப்படுகிறது. குறையவும் இல்லை, கூடவும் இல்லை... ஆனால் நோட்டாவுக்கு வாக்களிப்போம் என்று 2 சதவீதம் பேர் கூறியுள்ளனர்.. இது ரொம்ப முக்கியமானது... கவனிக்கத்தக்கது.

கணிப்பு
கருத்துக் கணிப்பு தொடர்பாக நக்கீரன் இதழில் கூறப்பட்டுள்ளதாவது: தேர்தல் நேரத்தில் வழங்கப்படும் பணம், இலவச அறிவிப்புகள், ஆளுந்தரப்பின் அதிரடி நடவடிக்கைகள் ஆகியவை ஓட்டுகளாக மாறுவது ஜனநாயக விநோதம். அந்த நம்பிக்கையில்தான் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தனது ஆட்சியின் கடைசி சட்டமன்ற கூட்டத்தொடரின் இறுதி நாட்களில் பல அறிவிப்புகளை வெளியிட்டார்.

தமிழகம்
தமிழகத்தில் உள்ள 16 லட்சம் விவசாயிகள் பயன்பெறும் வகையில் அவர்கள் கூட்டுறவு வங்கிகளில் கடனாக பெற்ற 12,000 கோடி மதிப்புள்ள கடன்களைத் தள்ளுபடி என அறிவிப்பு செய்தார். வேகமாக தாக்கிய புயல்கள், அளவுக்கு அதிகமாக கொட்டித் தீர்த்த மழை, வீட்டிற்குள்ளே முடக்கிப் போட்ட கொரோனா என விவசாயிகள் கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கிறார்கள் என்று சொல்லி எடப்பாடி பழனிசாமி, இந்த கடன்களை தள்ளுபடி செய்தார்.

தள்ளுபடிகள்
உண்மையில் இந்த தள்ளுபடிகளை தமிழக மக்கள் எப்படி பார்க்கிறார்கள்? இந்த இலவசங்கள் ஓட்டாக மாறியிருக்கிறதா? என ஒரு பெரிய மக்கள் திரளையே தமிழகம் முழுவதும் குறுக்கும் நெடுக்குமாக சந்தித்து "நக்கீரன்" ஒரு மெகா சர்வேயை நடத்தியது. "நீங்கள் கடந்தமுறை யாருக்கு வாக்களித்தீர்கள்? கடன் தள்ளுபடியால் இந்த முறை உங்களது வாக்குகள் மாறுமா?" என கேள்விகளை மையப்படுத்தினோம்.

கடன்கள்
அதில், தமிழகத்தில் உள்ள 40 சதவீதம் விவசாயிகள் நாங்கள் கடன் பெறவில்லை எனத் தெரிவித்தார்கள். மீதமுள்ள 60 சதவீதம் பேரை இந்தத் தள்ளுபடி அறிவிப்புகள் தொடவில்லை... அவர்களின் பதில் வேறு மாதிரி இருந்தது... மொத்தத்தில் எடப்பாடி பழனிசாமி அரசின் அறிவிப்பு, நடைமுறைக்கு வரும் முன்பே தேர்தல் அறிவிப்பு வந்ததால், அரசின் தள்ளுபடி அறிவிப்பை செயல்படுத்த அதிகாரிகள் தயங்குவதை நாம் தமிழகம் முழுவதும் பார்க்க முடிந்தது.

எடப்பாடி பழனிசாமி
அதே நேரத்தில் எடப்பாடி பழனிசாமியின் கடன் தள்ளுபடி உண்மையானதாக இல்லை. அனைத்து வங்கிகளிலும் வாங்கிய கடன்களை எடப்பாடி பழனிசாமி தள்ளுபடி செய்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்கிற குரலும் அங்கொன்றும், இங்கொன்றுமாக ஒலித்துக்கொண்டிருந்தது. ஆனால் எடப்பாடி பழனிசாமியின் இந்த அறிவிப்புக்கு பலன் இல்லாமல் இல்லை. "ஜெ. மாதிரி எடப்பாடி பழனிசாமி வரமாட்டார்.. ஆனா என் கடன் தொகையை தள்ளுபடி செய்திருக்கிறார். அந்த நன்றிக்காவது இந்தமுறை எனது ஓட்டு மறுபடியும் இரட்டை இலைக்கே'' என்கிறார் மதுரை மேற்கு தொகுதியைச் சேர்ந்த பெண்மணி.

தள்ளுபடி
கடன், தள்ளுபடி என சொந்த விவகாரங்கள் இருந்தாலும் தமிழக மக்கள், தேர்தலை இதையெல்லாம் தாண்டிய விசயமாகத்தான் பார்க்கிறார்கள். "கடந்தமுறை யாருக்கு வாக்களித்தீர்கள்' என நாம் கேட்டபோது... பெரும்பான்மையாக 41 சதவீதம் பேர் அதிமுகவிற்கு வாக்களித்ததாக கூறினார்கள். இரண்டு சதவீதம் குறைவாக 39 சதவீதம் பேர் திமுகவிற்கு வாக்களித்ததாகக் கூறி கடந்த சட்டமன்றத் தேர்தல் முடிவை கண் முன்பே கொண்டுவந்தார்கள்.

இலவசங்கள்
ஆனால், இம்முறை இலவசங்களை மீறி 50 சதவீதம் பேர் திமுகவிற்கும், 38 சதவீதம் பேர் அதிமுகவிற்கும் வாக்களிக்க போவதாக தெரிவிக்கிறார்கள். கமலுக்கும், சீமானுக்கும் தலா 4 சதவீதம் பேரும், டிடிவி. தினகரனுக்கும், நோட்டாவுக்கும் தலா 2 சதவீதம் பேரும் வாக்களிப்பதாகச் சொல்கிறார்கள். கருத்து இல்லை என்ற 13% பேரில் பலருக்கும் உள்ளுக்குள் ஒரு கருத்து ஏற்படும். அது தேர்தல் முடிவுகளை தீர்மானிக்கும் என்று அந்த கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications