நாங்கதான் ஃபர்ஸ்ட்டு.. ஆரம்பமே மோதல்.. ஐகோர்ட்டில் காரசாரமாக வாதிட்ட இரு தரப்பு வழக்கறிஞர்கள்!
சென்னை: ஐகோர்ட்டில் இன்று செந்தில் பாலாஜி மனைவி தொடர்ந்த ஆட்கொணர்வு மனு விசாரணை தொடங்கியதுமே, யார் முதலில் வாதங்களை வைப்பது என இரு தரப்புக்கும் இடையே காரசார விவாதம் நடந்தது.
சட்டவிரோதப் பணப் பரிமாற்ற வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி, நெஞ்சு வலி காரணமாக ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர், இதயத்தில் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்வதற்காக செந்தில் பாலாஜியை காவேரி மருத்துவமனைக்கு மாற்றி, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது.

அதன்படி, செந்தில் பாலாஜி காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு, அவருக்கு நேற்று இதயத்தில் பைபாஸ் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்போது சீரான உடல்நிலையும் இருக்கும் செந்தில் பாலாஜி, இன்னும் சில நாட்கள் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருக்கும் செந்தில் பாலாஜி அதன்பிறகு வீடு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே அமைச்சர் செந்தில் பாலாஜி மனைவி மேகலா தொடர்ந்த ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை சென்னை ஐகோர்ட்டில் நீதிபதிகள் நிஷா பானு, பரத சக்கரவர்த்தி அமர்வு முன்பாக கடந்த 15-ஆம் தேதி நடைபெற்றது. அதில் செந்தில் பாலாஜியை காவேரி மருத்துவனைக்கு மாற்ற அனுமதி வழங்கியதோடு, வழக்கை ஜூன் 22ஆம் தேதிக்கு (இன்று) ஒத்திவைத்தனர்.
அதன்படி இந்த ஆட்கொணர்வு மனு மனு, நீதிபதிகள் நிஷா பானு, பரத சக்கரவர்த்தி அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. இன்று வழக்கு விசாரணை தொடங்கியதுமே இரு தரப்பும் காரசாரமாக வாதங்களை எடுத்து வைத்து மோதிக்கொண்டனர்.
யார் முதலில் வாதிடுவது என்பதிலேயே செந்தில் பாலாஜி மனைவி தரப்பும், அமலாக்கத்துறை தரப்பும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். உச்ச நீதிமன்ற உத்தரவுகளின் படி ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்தது என செந்தில் பாலாஜி மனைவி தரப்பு வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ வாதிட்டார்.
ரிமாண்ட் செய்யப்பட்ட பிறகு ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்ததல்ல என அமலாக்கத்துறை தரப்பு வாதிட்டது. மனு விசாரணைக்கு உகந்ததல்ல என அமலாக்கத்துறை தரப்பில் தான் முதலில் வாதம் முன்வைக்க அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.
அதற்கு செந்தில் பாலாஜி மனைவி தரப்பு வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, அடிப்படை உரிமை பாதிக்கப்பட்டுள்ளதால் மனு விசாரணைக்கு உகந்தது என நாங்கள் தான் முதலில் வாதங்களை முன்வைக்க வேண்டும் என வாதிட்டார்.
செல்லுபடியாகக்கூடிய ரிமாண்ட் உத்தரவு இருந்தால் ஆட்கொணர்வு மனு தேவைப்படாது, ஆனால், இங்கே நடந்திருப்பது சட்டவிரோதமான கைது, எனவே, ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்ததுதான் என செந்தில் பாலாஜி தரப்பு வாதிட்டது. இதையடுத்து, வழக்கு விசாரணைக்கு உகந்ததாக இருந்தாலும், அதை ஏற்பது உயர் நீதிமன்றத்தின் அதிகாரம் என நீதிபதிகள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications