"நேர்மைக்கு கிடைத்த பரிசு.." 30 ஆண்டுகளில் 55ஆவது டிரான்ஸ்பர்.. யார் இந்த அசோக் கெம்கா ஐஏஎஸ்
சென்னை: ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த மூத்த ஐஏஎஸ் அதிகாரியான அசோக் கெம்கா தனது 30 ஆண்டு பணிக்காலத்தில் 55ஆவது முறையாக டிரான்ஸ்பர் செய்யப்பட்டுள்ளார்.
நமது நாட்டில் அரசு ஊழியர்கள் எதாவது தவறு செய்தால்.. அவர்களை முதலில் டிரான்ஸ்பர் செய்வார்கள்.. தவறு செய்யும் எந்தவொரு அரசு ஊழியர்களுக்கும் நமது நாட்டில் தரப்படும் முதல் தண்டனை டிரான்ஸ்பர் தான்.
தவறு செய்தால் மட்டுமில்லை.. நேர்மையாக இருந்தாலும் கூட அதிகாரிகளுக்கு டிரான்ஸ்பர் நிச்சயம்.. நேர்மையாக இருக்கும் பல அதிகாரிகள் தொடர்ந்து தூக்கியடிக்கப்படுவார்கள். இதுவே அவர்களின் நேர்மைக்குக் கிடைக்கும் பரிசு..

30 வருட பணிக்காலம்
நமது நாட்டின் அரசு அதிகாரிகள் ஓய்வு பெறுவதற்குள் அதிகபட்சம் ஓரிரு முறை டிரான்ஸ்பர் செய்யப்படுவார்கள்.. ஆனால், ஒரு அதிகாரி 30 ஆண்டுகளில் 55 முறை டிரான்ஸ்பர் செய்யப்பட்டுள்ளார். கிட்டதட்ட ஆண்டுக்கு இரண்டு முறை டிரான்ஸ்பர் செய்யப்பட்டுள்ளார். இது இவரது நேர்மைக்குக் கிடைக்கும் பரிசாகவே உள்ளது. இவர் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த மூத்த ஐஏஎஸ் அதிகாரி அசோக் கெம்கா ஆவர். ஹரியானாவில் இப்போது பாஜக ஆட்சி நடந்து வருகிறது. அதேநேரம் பாஜக ஆட்சியில் மட்டுமின்றி காங்கிரஸ் உட்பட முந்தைய அரசுகள் இருந்த போதும் இவர் டிரான்ஸ்பர் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

55ஆவது முறை
நேற்று திங்கள்கிழமை ஹரியானா அரசு மூத்த ஐஏஎஸ் அதிகாரியான அசோக் கெம்காவை இடமாற்றம் செய்து உத்தரவிட்டது. அவரது 30 ஆண்டு பணிக் காலத்தில்.. அவர் டிரான்ஸ்பர் செய்வது 55வது முறையாகும்.. அவருடன் மேலும் சில அதிகாரிகளும் இடமாற்றம் செய்யப்பட்டிருந்தனர். அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளராக இருந்த அசோக் கெம்கா, இப்போது ஆவணக் காப்பகத் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் எதற்காக டிரான்ஸ்பர் செய்யப்படுகிறார் என்பது குறித்து எந்தவொரு தகவும் அதில் இடம்பெறவில்லை.

வேலை இல்லை
இவர் சமீபத்தில்தான் ஹரியானா தலைமைச் செயலாளர் சர்வேஷ் கௌஷலுக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். அதில் தனது அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை உயர்கல்வித் துறையுடன் இணைக்கப்பட்ட பிறகு தனக்கு போதுமான வேலை இல்லை என்று கூறியிருந்தார். அவர் கடிதம் எழுதி சில நாட்களில் இந்த டிரான்ஸ்பர் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்த கடிதத்தில் தனது துறையில் அதிகபட்சம் வாரத்திற்கு 2 அல்லது 3 மணி நேரம் மட்டுமே வேலை இருப்பதாக கூறியிருந்தார்.

4ஆவது முறை
மேலும், கூடுதல் தலைமைச் செயலாளர் பதவியில் இருப்போருக்கு வாரத்திற்குக் குறைந்தது 40 மணிநேரம் வேலை இருக்கும் பணியை ஒதுக்க வேண்டும் என பரிந்துரை உள்ளதாகவும் அதற்குக் குறைவாக வேலை இருந்தால் மற்ற துறைகளுக்கு அனுப்பலாம் என்றும் கடிதத்தில் கூறியிருந்தார். அதன் பின்னரே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அசோக் கெம்கா இப்போது காப்பகத் துறைக்கு மாற்றப்பட்டுள்ளார். பாஜக ஆட்சியில் அசோக் கெம்கா காப்பக துறைக்கு மாற்றப்படுவது இது நான்காவது முறையாகும்.

காப்பக துறை
1991 பேட்ச் ஐஏஎஸ் அதிகாரியான இவர், முன்னதாக காப்பகத் துறையின் தலைமை இயக்குநராகவும் பின்னர் முதன்மைச் செயலாளராகவும் பணியாற்றினார். ஹரியானாவில் 2013இல் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோதுதான் அசோக் கெம்கா முதன்முதலில் இத்துறைக்கு மாற்றப்பட்டார். கடந்த 2021 அக். மாதம் அவர் வேறு துறைக்கு மாற்றப்பட்டார். கடந்தாண்டு பிப்ரவரி மாதம் அவர் கூடுதல் தலைமைச் செயலாளராகப் பதவி உயர்வு பெற்றார். இந்நிலையில் மீண்டும் அவர் காப்பக துறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

சோனியா காந்தி
ஐஏஎஸ் அதிகாரி அசோக் கெம்கா பணிக்காலம் தொடர்ச்சியாகப் பல சர்ச்சைகளைக் கொண்ட ஒன்றாகவே இருக்கிறது. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வத்ராவுடன் (பிரியங்கா காந்தி கணவன்) தொடர்புடைய குருகிராம் நில விவகாரத்தைக் கடந்த 2012இல இவர் ரத்து செய்த போது அது நாடு முழுக்க பேசுபொருளானது. இந்தச் சம்பவம் நடந்த சில மாதங்களில் தான் அவர் முதலில் காப்பக துறைக்கு மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

நேர்மை
இதுபோல நடக்கும் இடமாற்றங்கள் காரணமாகத் தனது கேரியர் பன்தங்கிவிட்டதாக அவர் சில மாதங்களுக்கு முன்பு ட்விட்டரில் வெளிப்படையாகவே ஏமாற்றத்தை வெளிப்படுத்தியிருந்தார். அவர் கடந்த அக்டோபரில் தனது ட்விட்டர் பக்கத்தில், "எனது பேட்ச்மேட்கள் மத்திய அரசுத் துறைகளில் செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.. அவர்களுக்கு வாழ்த்துகள்!" என்று பதிட்டார். மேலும், இது மகிழ்வதற்கான ஒரு சந்தர்ப்பம் என்றாலும், தான் பின்தங்கியிருப்பது அவநம்பிக்கையைக் கொண்டு வருவதாகவும் நேரான மரங்கள் எப்போதும் முதலில் வெட்டப்படும்" என்றும் பதிவிட்டிருந்தார்.












Click it and Unblock the Notifications