“மாஸ்டர் மைண்ட்” - அடுத்தடுத்து சந்திப்பு! ஓபிஎஸ் நம்பும் “தலை”.. யார் இந்த பண்ருட்டி ராமச்சந்திரன்?
சென்னை: அதிமுகவில் ஒற்றைத் தலைமை பிரச்சனை தொடர்ந்து வரும் சூழலில் ஓ.பன்னீர்செல்வமும், சசிகலாவும் மாறி மாறி பண்ருட்டி ராமச்சந்திரனை சந்தித்து வருகின்றனர்.
அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடர்பாக விவாதிக்க கடந்த ஜூன் மாவட்டச் செயலாளார்கள் கூட்டம் அதிமுக தலைமையகத்தில் கூட்டப்பட்டது. அப்போது ஓபிஎஸ் - இபிஎஸ் தரப்பு ஆதரவாளர்கள் இடையே வெடித்த மோதல் இன்று வரை தொடர்ந்து வருகிறது.
அதன் விளைவாகவே முதல் பொதுக்குழுக் கூட்டம் ரத்து செய்யப்பட்டு ஜூலை 11ம் தேதி இரண்டாவது பொதுக்குழு கூட்டத்தை கூட்டி தன்னை பொதுச்செயலாளராக மகுடம் சூட்டிக்கொண்டார் எடப்பாடி பழனிசாமி.

மாறி மாறி தீர்ப்பு
ஜூன் 11 ஆம் தேதி எடப்பாடி பழனிசாமி தரப்பு நடத்திய பொதுக்குழு கூட்டம் செல்லாது என உயர்நீதிமன்ற தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவால் எடப்பாடி பழனிசாமியின் இடைக்கால பொதுச்செயலாளர் பதவி பறிபோனது. ஆனால், 2 வாரம் முன் எடப்பாடி பழனிசாமி அமர்வு தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற இருவர் அமர்வு தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தது. இதனால் மீண்டும் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளர் ஆகியுள்ளார்.

மேல்முறையீடு
இந்த நிலையில் அடுத்தக்கட்ட நகர்வு குறித்து தீவிர ஆலோசனையில் ஓ.பன்னீர்செல்வம் ஈடுபட்டு இருக்கும் ஓ.பன்னீர்செல்வம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். உயர்நீதிமன்ற தனி நீதிபதி தீர்ப்பால் உற்சாகத்தில் இருந்த ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் தற்போது சோர்வடைந்து இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பண்ருட்டி - ஓபிஎஸ் சந்திப்பு
இதனால் ஒரு பக்கம் சட்டப்போராட்டத்துக்கு மத்தியில் தன்னுடைய ஆதாரவாளர்களை தக்க வைக்க வேண்டும் என்ற நெருக்கடியும் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஏற்பட்டு உள்ளது. இந்த நிலையில் நேற்று ஓ.பன்னீர்செல்வம் அதிமுக மூத்த தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் இல்லத்துக்கு சென்று அவரை சந்தித்து பேசினார். மரியாதை நிமித்தமாக இந்த சந்திப்பு நடத்தியதாக அவர் கூறினார்.

பண்ருட்டி ராமச்சந்திரன் பேட்டி
இந்த நிலையில் பண்ருட்டி ராமச்சந்திரன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "அதிமுகவில் தற்போது தலைமை சரியில்லை. எடப்பாடி பழனிசாமி தலைமையை மக்கள் நிராகரிக்கிறார்கள். அவரிடம் தாய்மை உணர்வு இல்லை. தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகளை வைத்து இயக்கத்தை சீரழிக்கக் கூடாது. முதலில் கட்சியை சரி செய்துவிட்டு, பிறகு மக்கள் ஆதரவை பெற வேண்டும். டிடிவி தினகரன் அதிமுகவுடன் இணக்கம் காட்ட விரும்புகிறார். சசிகலா சட்ட ரீதியாக மீட்க முயல்கிறார். ஓபிஎஸ், சசிகலா நோக்கம் ஒன்றாக உள்ளது." என்றார்.

முதல் சந்திப்பு
இதற்கு முன் 2 பொதுக்குழு கூட்டங்கள் நடைபெறுவதற்கு முன்பாகவே ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுக்கொண்டு இருந்தபோது பண்ருட்டி ராமச்சந்திரனை ஓ.பன்னீர்செல்வம் சந்தித்து ஆலோசனை பெற்றார். அதன் தொடர்ச்சியாகவே அவர் முதல் பொதுக்குழுவுக்கு தடைகோரி வழக்கு தொடர்ந்து வெற்றியும் பெற்றார்.

சசிகலாவுடன் சந்திப்பு
ஓ.பன்னீர்செல்வத்துடன் சசிகலா, தினகரன் தரப்பு ஒன்று சேர வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து சூழலில் கடந்த ஜூலை மாதம் பண்ருட்டி ராமச்சந்திரனை சந்தித்து ஆலோசித்தார் சசிகலா. "என்னுடைய மூத்த அண்ணனை பார்க்க வந்தேன். அரசியல் விசயமாக கலந்து பேசினேன். எல்லோரும் சேர்ந்து ஒன்றாய் இணைந்து பயணிக்க வேண்டும் என்பதே எனது ஆசை." என சசிகலா பேசியுள்ளார்.

யார் இந்த பண்ருட்டியார்?
கடந்த 1934 ஆம் ஆண்டு கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் பிறந்த ராமச்சந்திரன், 5 முறை எம்.எல்.ஏவாகவும் கருணாநிதி, எம்.ஜி.ஆர். ஆட்சிகாலத்தில் 4 முறை அமைச்சராகவும் இருந்தவர். திமுக, அதிமுக, பாமக, தேமுதிக ஆகிய கட்சிகளில் பயணித்தவர். எம்ஜிஆர் அதிமுகவை தொடங்கியபோது உடன் இருந்த முக்கிய தலைவர்களில் இருவரும் ஒருவராக இருக்கிறார்.

நிலைபாடு
2014 ஆம் ஆண்டு மீண்டும் அதிமுகவில் இணைந்த பண்ருட்டி ராமச்சந்திரன், கட்சியின் சட்ட நுணுக்கங்களை நன்கு அறிந்தவர் என்பதால் இவர் அளிக்கும் தகவல்களை வைத்து காய் நகர்த்தலாம் என்பதே ஓ.பி.எஸ். சசிகலா ஆகியோரின் நோக்கமாக இருக்கும். அதே நேரம் எடப்பாடி பழனிசாமி தரப்பில் யாரையும் இவர் சந்திக்காத சூழலில் இவரும் ஓபிஎஸ், சசிகலாவுக்கு ஆதரவாக இருக்கலாம் என்று பேசப்பட்டு வந்த நிலையில் இன்று அவரளித்து பேட்டி இதை உறுதிபடுத்தி இருக்கிறது.












Click it and Unblock the Notifications