கம்ப்யூட்டர் கண்ணப்பன்! ஜெயலலிதா பாராட்டியவர்.. கருணாநிதியை அசர வைத்தவர்.. யார் இந்த ராஜகண்ணப்பன்?
சென்னை: பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு, கூடுதலாக உயர்கல்வித்துறை வழங்கப்பட்டுள்ளது. ஜெயலலிதாவின் அமைச்சரவையில் முப்பெரும் துறைகளுக்கு அமைச்சராக இருந்த ராஜகண்ணப்பனுக்கு தற்போதைய திமுக ஆட்சியில் முக்கிய இடம் கிடைத்துள்ளது.
எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகராக இருந்து, எம்.ஜி.ஆர் கட்சி தொடங்கியதும் அரசியலுக்கு வந்தவர் கண்ணப்பன். சிவகங்கை மாவட்ட அதிமுகவில் முக்கியப் புள்ளியாக வலம்வந்தார். எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பிறகு அதிமுக ஜெயலலிதா அணி - ஜானகி அணி என இரண்டாகப் பிரிந்திருந்த போது, ஜெயலலிதா பக்கம் நின்றவர் சிவகங்கை மாவட்ட அதிமுக செயலாளராக இருந்த கண்ணப்பன். அப்போது நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் சேவல் சின்னத்தில் போட்டியிட்டார். ஜெயலலிதாவின் குட்புக்கில் இடம்பிடித்த ராஜகண்ணப்பனுக்கு, 1991ல் மீண்டும் சீட் வழங்கப்பட்டது.

அதிமுக ஆட்சியைப் பிடித்தபோது அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. பொதுப்பணித்துறை, மின்சாரத்துறை, நெடுஞ்சாலைத்துறை ஆகிய மூன்று முக்கியத் துறைகளை கண்ணப்பனுக்கு ஒதுக்கினார் ஜெயலலிதா. முதல் முறை கேபினட்டில் நுழைந்தவருக்கு முப்பெரும் துறைகள் வழங்கப்பட்டது, அரசியல் வட்டாரத்தில் புருவங்களை உயரச் செய்தது. தென் மாவட்டங்களில் அசைக்க முடியாத நபராக உருவெடுத்தார் கண்ணப்பன். முப்பெரும் துறைகளை நிர்வகித்த அவர், எந்த துறை பற்றி கேட்டாலும், விரல் முனையில் தகவல்களை வைத்திருப்பவர் என்பதால் 'கம்பியூட்டர் கண்ணப்பன்' என்று அழைத்தார் ஜெயலலிதா.
பின்னர், 1996 தேர்தலில் அதிமுக ஆட்சியை இழந்தது. அப்போது, முக்கிய தலைவர்களை அழைத்து தோல்விக்கான காரணம் குறித்து கேட்டார் ஜெயலலிதா. அப்போது, ஆட்சி சரியில்லை, சசிகலாவின் பேச்சை கேட்டு நடப்பதாக சொல்கிறார்கள். மக்கள் கோபத்தால் தோற்றோம், என பட்டவர்த்தனமாக போட்டு உடைத்தாராம் கண்ணப்பன். இதனால் அதிர்ந்து போனார் ஜெயலலிதா. அப்போது முதலே ஜெ. கண்ணப்பன் இடையே உரசல் அதிகரித்தது. எனினும், சிவகங்கை, ராமநாதபுரம் மற்றும், தென் மாவட்டங்களில் கண்ணப்பனுக்கு இருந்த வலுவான யாதவ சமுதாய பின்புலம் காரணமாக அவரை கழற்றி விடாமல் வைத்திருந்தார் ஜெயலலிதா.
எனினும், மோதல் போக்குகள் தொடர்ந்த நிலையில், 2,000ஆம் ஆண்டில் அதிமுகலில் இருந்து வெளியேறி கண்ணப்பன், 'மக்கள் தமிழ்த் தேசம்' என்ற கட்சியைத் தொடங்கினார். அப்போது சுமார் 25 லட்சம் பேரை திரட்டி மிகப்பெரிய அளவில் மாநாட்டை நடத்திக் காட்டினார். கண்ணப்பனின் மாநாட்டுக்கு கூடிய கூட்டத்தைக் கண்டு, இரு பெரும் திராவிடக் கட்சிகளும் மிரண்டன. இதையடுத்து, 2001ஆம் ஆண்டில் ராஜகண்ணப்பனை, கூட்டணியில் சேர்த்துக் கொண்டார் கருணாநிதி. 2004ல் உள்ளாட்சி தேர்தலில் மக்கள் தமிழ் தேசம் கட்சி பல இடங்களில் வென்றது.

2006-ல் தனது மக்கள் தமிழ் தேசம் கட்சியைக் கலைத்துவிட்டு, திமுகவில் இணைந்து தேர்தலைச் சந்தித்து சிவகங்கை மாவட்டம் இளையான்குடி தொகுதி எம்.எல்.ஏ ஆனார் ராஜகண்ணப்பன். தனக்கு நிச்சயம் அமைச்சர் பதவி கிடைக்கும் என அவர் எதிர்பார்த்த நிலையில், அவருக்கு பதிலாக திருப்பத்தூர் எம்.எல்.ஏ கே.ஆர்.பெரியகருப்பனுக்கு அமைச்சர் பதவியை வழங்கினார் கருணாநிதி. அவரும் ராஜகண்ணப்பன் சார்ந்த சமூகம் என்பதால், அச்சமூக மக்கள் மத்தியில் அதிருப்தி ஏற்படாமல் சமாளித்தார் கருணாநிதி.
எனினும், அமைச்சர் பதவி கிடைக்காததால் அதிருப்தியில் இருந்த ராஜகண்ணப்பனை அழைத்துப் பேசிய ஜெயலலிதா, உரிய மரியாதை கிடைக்கும், அதிமுகவில் இணைந்து விடுங்கள் என சொல்ல, 2009-ல் தி.மு.கவை விட்டு வெளியேறினார். தனது எம்.எல்.ஏ பதவியையும் ராஜினாமா செய்தார். மீண்டும் அதிமுகவில் இணைந்து, 2009 நாடாளுமன்றத் தேர்தலில் அப்போதைய மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தை எதிர்த்துப் போட்டியிட்டார்.
அந்த தேர்தலில் வாக்கு எண்ணிக்கையில் குளறுபடிகள் நடைபெற்றதாக சர்ச்சைகள் எழுந்தன. நள்ளிரவில், அமைச்சர் ப.சிதம்பரம் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். பின்னர், 2011 சட்டசபை தேர்தலில், திருப்பத்தூர் தொகுதியில் கே.ஆர்.பெரியகருப்பனை எதிர்த்துப் போட்டியிட்டு சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியுற்றார். தொடர்ந்து, 2014ஆம் ஆண்டில் தென் மாவட்ட தேர்தல் பொறுப்பாளர் ஆக்கினார். அதில் பெரும் வெற்றியைத் தொடர்ந்து, 2016ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தேர்தல் பொறுப்பாளராக பதவி வழங்கினார் ஜெயலலிதா.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, பாஜக உடனான அதிமுக கூட்டணியை விமர்சித்து கட்சியை விட்டு வெளியேறி, திமுகவில் இணைந்தார். 2020ஆம் ஆண்டு பிப்ரவரியில் மதுரையில் மிகப்பெரிய அளவில் கூட்டத்தைக் கூட்டி, தனது ஆதரவாளர்களுடன், திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார் ராஜகண்ணப்பன். 2021 தேர்தலில், முதுகுளத்தூர் தொகுதியில் சீட் பெற்று, வென்றார். அதோடு, போக்குவரத்துத் துறை அமைச்சர் பொறுப்பையும் பெற்றார்.

சுமார் 30 ஆண்டுக்கு பிறகு மீண்டும் அமைச்சர் ஆனார் ராஜகண்ணப்பன். பின்னர், போக்குவரத்து துறையில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன. மேலும், அரசு அதிகாரி ஒருவரை சாதி ரீதியாக திட்டியதாக சர்ச்சை எழுந்ததைத் தொடர்ந்து, அவரது இலாகாவை மாற்றினார் முதல்வர் ஸ்டாலின். போக்குவரத்துத்துறையை பறித்துக்கொண்டு, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அவருக்கு வழங்கப்பட்டது. இந்நிலையில், இன்று ராஜகண்ணப்பனுக்கு உயர்கல்வித்துறையை கூடுதலாக வழங்கியுள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின். இதன் மூலம், 2 முக்கிய துறைகள் ராஜகண்ணப்பன் வசம் உள்ளது.
கடந்த 2006 - 2011 ஆம் ஆண்டு திமுக ஆட்சி காலத்தில் உயர்கல்வித் துறை அமைச்சராக பதவி வகித்த போது, வருமானத்துக்கு அதிகமாக ஒரு கோடியே 75 லட்சம் ரூபாய் அளவுக்கு சொத்துக்கள் சேர்த்ததாக, அமைச்சர் பொன்முடி மற்றும் அவருடைய மனைவி விசாலாட்சி ஆகியோருக்கு எதிராக 2011ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கில் 2016ஆம் ஆண்டு பொன்முடி உள்ளிட்டோரை விழுப்புரம் நீதிமன்றம் விடுதலை செய்த நிலையில், லஞ்ச ஒழிப்புத்துறை மேல்முறையீடு செய்தது. இந்நிலையில், இந்த வழக்கில் இன்று தீர்ப்பு மற்றும் தண்டனை விவரங்கள் அறிவிக்கப்பட்டது.
அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. மேலும் 50 லட்சம் ரூபாய் அபராதமும் அறிவிக்கப்பட்டது. 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டதால் அமைச்சர் மற்றும் எம்எல்ஏ பதவியை பொன்முடி இழந்தார். இதனையடுத்து அடுத்ததாக யாரை உயர்கல்வித்துறை அமைச்சராக நியமிக்கப்படுவார் என்ற கேள்வி எழுந்த நிலையில், அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு உயர்கல்வித்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு கூடுதலாக உயர்கல்வித்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications
