யார் அந்த ரேவதி.. சென்னை தி நகர் பிரபல நகைக்கடையில்.. வேலைக்கு சேர்ந்த 10 நாளிலேயே ஆடிப்போன ஓனர்
சென்னை: சென்னை தியாகராயநகரில் உள்ள டாக்டர் நாயர் சாலையில் இயங்கி வரும் பிரபல நகைக்கடையில், வேலைக்கு சேர்ந்த வெறும் 10 நாட்களில் சுமார் 12 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகளை திருடிய பெண் ஊழியரை போலீசார் தேடி வருகிறார்கள். தீபாவளி பண்டிகையை ஒட்டி கடையில் விற்பனை அதிகமாக இருக்கும் என்பதால், வேலைக்கு சேர்க்கப்பட்டுள்ளார் அந்த பெண்.. அந்த பெண் நகைகளை திருடிவிட்டு அதற்கு பதில் கவரிங் நகைகளை வைத்து ஏமாற்றி உள்ளார்.
தங்கம் விலை என்பது 2006ம் ஆண்டு வாக்கில் ஒரு பவுன் வெறும் 6500 என்கிற அளவில் தான் இருந்தது. அதன்பின்னர் 2012ம் ஆண்டு வாக்கில் 10 ஆயிரம் என்கிற அளவில் உயர்ந்தது. 2016ம் ஆண்டு வாக்கில் 20 ஆயிரம் என்கிற அளவிலும், 2020ம் ஆண்டு வாக்கில் 35000 என்கிற அளவில் உயர்ந்தது. இந்த ஆண்டு தொடக்கத்தில் 50 ஆயிரம் என்கிற நிலையையும், இப்போது 58 ஆயிரம் என்கிற அளவிற்கு உயர்ந்துவிட்டது.

தங்கத்தை வாங்க வேண்டும் என்றால், செய்கூலி, சேதாரம், ஜிஎஸ்டி என தொகைகளை சேர்த்து பார்த்தால்,ஒரு பவுன் நகைக்கு கிட்டத்தட்ட கூடுதலாக கால் பவுன் தங்கத்திற்கான பணத்தை கூடுதலாக அளிக்க வேண்டியுள்ளது. அதாவது ஒரு பவுன் தங்கம் 58000 ரூபாய் என்றால், கிட்டத்தட்ட 65000 முதல் 68000 ரூபாய் என்கிற அளவில் இருக்கிறது. இதனால் தங்க நகைகளை திருடுவதற்கான முயற்சிகள் முன்பை விட இப்போது அதிகமாக நடக்கின்றன. பூட்டியிருக்கும் வீடுகளில் தங்கம் திருடுவது மட்டுமின்றி, நகைக்கடைகளிலேயே திருடுவதும் அதிகமாக உள்ளது. சென்னை தியாகராய நகரில் பிரபல நகைக்கடையில் வேலை செய்த பெண் தங்கநகை திருடியுள்ளார். அவர் எப்படி செய்தார் என்பதை பார்ப்போம்.
சென்னை தியாகராயநகரில் உள்ள டாக்டர் நாயர் சாலையில் பிரபல நகைக்கடை இயங்கி வருகிறது. தீபாவளி பண்டிகையையொட்டி நகை விற்பனை அதிகம் இருக்கும் என்பதால் இந்த கடையில் புதிதாக சில ஊழியர்களை பணிக்கு சேர்ந்திருக்கிறார்கள். அதன்படி கடந்த மாதம் 22-ந்தேதி அன்று ரேவதி என்ற பெண் வேலைக்கு சேர்ந்திருக்கிறார். அவர் கடந்த 3-ந்தேதி முதல் திடீரென்று வேலைக்கு வராமல் இருந்திருக்கிறார்.
இதனால் சந்தேகமடைந்த கடையின் உரிமையாளர் சுரேஷ் ஜெயின், கடையில் ரேவதிக்கு ஒதுக்கப்பட்ட பகுதியில் உள்ள நகைகளை தணிக்கை செய்த போது, ரூ.12 லட்சம் மதிப்பிலான தங்கம் மற்றும் வைர நகைகளுக்கு பதில் கவரிங் நகைகள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து கடையில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்த போது, பெண் ஊழியர் ரேவதி உண்மையான நகைகளை திருடி விட்டு கவரிங் நகைகளை வைக்கும் காட்சிகள் பதிவாகி இருந்தது.
இதையடுத்து திருட்டு சம்பவம் குறித்து கண்காணிப்பு கேமரா ஆதாரத்துடன் பாண்டி பஜார் காவல் நிலையத்தில், நகைக்கடையின் உரிமையாளர் சுரேஷ் ஜெயின் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். இதில் அந்த பெண், போலியான முகவரியை கொடுத்து பணியில் சேர்ந்திருப்பது தெரிய வந்துள்ளது. தலைமறைவாக உள்ள அவரை பாண்டி பஜார் போலீசார் தேடி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications