"22 வயதில் ஐபிஎஸ் - பஞ்சாப்பை சேர்ந்தவர்".. தமிழகத்தின் புதிய டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் யார்? பின்னணி
சென்னை: தமிழ்நாட்டின் புதிய சட்டம் ஒழுங்கு டிஜிபியாக பஞ்சாப்பை சேர்ந்த மகேஷ் குமார் அகர்வாலை தேர்வு செய்து நியமனம் செய்துள்ளது தமிழக அரசு. இந்நிலையில் தான் மகேஷ் குமார் அகர்வால் யார். அவரது பின்னணி என்ன? என்பது பற்றிய முழுவிவரங்களை இங்கு பார்க்கலாம்.
தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு டிஜிபியாக (காவல்துறை தலைவர்)இருந்த சங்கர் ஜிவால் கடந்த 2025ம் ஆண்டு ஆகஸ்ட் 31ம் தேதி பணி ஓய்வு பெற்றார். அதன்பிறகு நிரந்தரமாக சட்டம் ஒழுங்கு டிஜிபி நியமனம் செய்யப்படவில்லை. தமிழக அரசு சார்பில் நிர்வாக பிரிவு டிஜிபி வெங்கடராமன் சட்டம் ஒழுங்கு பொறுப்பு டிஜிபியாக இருந்தார்.

அதன்பிறகு சட்டசபை தேர்தலையொட்டி தேர்தல் ஆணையம் சட்டம் - ஒழுங்கு புதிய டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோரை நியமித்தது. தேர்தல் முடிவடைந்த பிறகும் சந்தீப் ராய் ரத்தோர் டிஜிபியாக தொடர்ந்தார்.
இதற்கிடையே தான் புதிய டிஜிபி நியமனம் தொடர்பான பணிகள் விறுவிறுப்பாக நடந்தது. தமிழக டிஜிபி நியமனம் தொடர்பான கடந்த 26ம் தேதி டெல்லியில் யுபிஎஸ்சி குழு ஆலோசனை கூட்டம் நடந்தது. அப்போது தமிழ்நாட்டின் டிஜிபியாக ராஜீவ் குமார், சந்தீப் ராய் ராத்தோர், மகேஷ் குமார் அகர்வால் ஆகியோரில் ஒருவரை டிஜிபியாக்க ஒப்புதல் வழங்கியது.
இதையடுத்து தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு புதிய டிஜிபியாக மூத்த ஐபிஎஸ் அதிகாரி மகேஷ் குமார் அகர்வால் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை தமிழக அரசு இன்று வெளியிட்டது. இந்நிலையில் தான் டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் யார்? பின்னணி என்ன? என்பது பற்றி இங்கு விரிவாக பார்க்கலாம்.
மகேஷ் குமார் அகர்வால் பஞ்சாப்பை சேர்ந்தவர். இவரது தந்தை வழக்கறிஞர். இதனால் சட்டம் படித்தார். 22 வயதில் ஐபிஎஸ் தேர்வில் தேர்ச்சியடைந்தார். 1994ம் ஆண்டில் ஐபிஎஸ் பணியில் சேர்ந்தார். தமிழ் ஆங்கிலம், இந்தி, பஞ்சாபி மொழியை சரளமாக பேசக்கூடியவர். தேனி, தூத்துக்குடி எஸ்பியாக பணியாற்றியவர். சிபிசிஐடி ஐஜியாகவும், சென்னை போலீஸ் கமிஷனராகவும் பணியாற்றினார்.
சென்னையின் தெற்கு மண்டல கூடுதல் கமிஷனராக பணியாற்றினார். மதுரை மற்றும் திருநெல்வேலி போலீஸ் கமிஷனராகவும் செயல்பட்டார். மதம் சார்ந்து இந்து அமைப்பு தலைவர்களின் கொலைகளை விசாரிக்கும் சிபிசிஐடி பிரிவின் சிறப்பு புலனாய்வு குழுவினர் தலைவராக செயல்பட்டவர். இந்த வழக்குகளில் சிறப்பாக புலனாய்வு மேற்கொண்டு குற்றவாளிகள் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.
கொரோனா பரவல் காலத்தில் மகேஷ் குமார் அகர்வால் ஏடிஜிபி (Operations) பிரிவில் பணியாற்றினார். அப்போது புலம்பெயர் தொழிலாளர்களின் பிரச்சனைகளை கையாண்டு பெயர் பெற்றார். தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு மாநிலங்களிலும் புலம்பெயர் தொழிலாளர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கான உணவு, தங்குமிடம் வழங்குவதை உறுதி செய்வதில் சிறப்பாக செயல்பட்டார். அதன்பிறகு 4 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்களை பாதுகாப்பாக அவர்களின் சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைத்தார்.
இவர் மத்திய அரசு பணியில் 7 ஆண்டுகள் வரை பணியாற்றினார். சண்டிகரில் சிபிஐயில் 7 ஆண்டு வரை பணியாற்றினார். அதன்பிறகு தமிழ்நாட்டில் போதை பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு ஏடிஜிபி, தமிழக காவல்துறை ஆயுதப்படை டிஜிபியாக பணியாற்றினார்.
பிறகு மீண்டும் மத்திய பணிக்கு சென்றார்.எல்லை பாதுகாப்பு படை கூடுதல் இயக்குநராக பணியாற்றி வரும் நிலையில் டிஜிபியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் தமிழகத்தின் 34வது டிஜிபியாக பொறுப்பேற்று செயல்பட உள்ளார். முன்னதாக இவர் சிறப்பாக பணியாற்றியதற்காக தமிழ்நாடு முதல்வரின் காவல் பதக்கத்தை 2015 ஆகஸ்ட் 15 ல் பெற்றார். அதேபோல் மெச்சத்தக்க வகையில் செயல்பட்ட காவல் பதக்கத்தையும் வாங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications