ஐஏஎஸ் அதிகாரி மனைவியுடன் காதல்.. பருத்தி வீரன் ஸ்டைல் ரவுடி ஐகோர்ட்டு மகாராஜா பற்றிய திடுக் தகவல்
சென்னை: சென்னையில் நேற்று போலீசாரை தாக்கிவிட்டு தப்பி ஓட முயன்ற போது, துப்பாக்கியால் சுட்டு பிடிக்கப்பட்ட ஐகோர்ட் மகாராஜா பற்றிய பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன. நகைக்கடை அதிபரை கொல்ல சதித்திட்டம் தீட்டிய தூத்துக்குடி ரவுடியான ஐகோர்ட் மகாராஜா மீது போலீஸ் துப்பாக்கிச்சூடு நடத்தி நேற்று பிடித்தனர்.
சென்னை விருகம்பாக்கத்தை சேர்ந்த பிரபல நகைக்கடை அதிபரை கடத்திச்சென்று கொலை செய்ய சதித்திட்டம் தீட்டிய வழக்கில் தேடப்பட்டு வந்த தூத்துக்குடி ரவுடி ஐகோர்ட் மகாராஜாவை போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தி மடக்கிப்பிடித்தனர். பிரபல ரவுடியாக வலம் வந்த ஐகோர்ட் மகாராஜா குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது. ஐஏஎஸ் அதிகாரி ஒருவரின் மனைவியுடன் காதல் வலையில் வீழ்ந்த ஐகோர்ட்டு மகாராஜா, அவருக்காக குழந்தை கடத்தலில் ஈடுபட்டுள்ளார்.

பருத்தி வீரன் படம் பாணியில்
அப்போது அவர் மதுரையில் போலீஸ் வழக்கில் சிக்கினார். அந்த வழக்கில் ஐஏஎஸ் அதிகாரியின் மனைவியும் மாட்டினார். தன் மீது கைது நடவடிக்கை பாயுமே என்ற அச்சத்தில் குஜராத்தில் வைத்து அவரும் தற்கொலை செய்து உயிரை மாய்த்துக்கொண்டார். தூத்துக்குடியில் சின்ன ரவுடியாக இருந்த ஐகோர்ட் மகாராஜா, பருத்திவீரன் படத்தில் கார்த்தி ஆசைப்படுவாரே.. பெரிய ஜெயிலை பார்க்கனும்.. டிவி காரங்களுக்கு டாடா காட்டிட்டே போகனும்னு அதேபோல ஆசைப்பட்டு சென்னையில் நகை கடை அதிபரை கடத்தி பெரிய ரவுடியாக திட்டமிட்டாராம்..
அவரது திட்டத்தை எல்லாம் போலீசார் அதிரடியாக முறியடித்து இருக்கிறார்கள். ரவுடி ஐகோர்ட் மகாராஜா பற்றி போலீசார் கூறிய பரபரப்பு தகவல் வருமாறு:- "ரவுடி ஐகோர்ட்டு மகாராஜாவின் சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம் மாப்பிளையூரணி ஆகும். இவரது தந்தை தூத்துக்குடியில் அரிசி கடை வைத்துள்ளார். இவருக்கு உடன்பிறந்த சகோதரிகள் 3 பேர் உள்ளனர். வீட்டில் ஒரே பையனான மகாராஜா, தூத்துக்குடியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 10 ஆம் வகுப்பு வரை படித்து இருக்கிறார்.
காதலியை கழுத்தை அறுத்து கொன்றார்
தனது காதலியான நாசரேத் பகுதியை சேர்ந்த முத்துமாரி என்பவரை கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்துள்ளார். இவர் மீது 9 வழக்குகள் உள்ளன. காதலியை கொலை செய்த வழக்கில் கைதாகி தூத்துக்குடி பேராவூரணி சிறையில் இருந்துள்ளார். அப்போது, சிறையில் அழகு ராமர் என்பவருடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. அழகு ராமர் ஜாமினில் செல்லும் போது தன்னையும் சிறையில் இருந்து எப்படியாவது வெளியே கொண்டுவர ஏற்பாடு செய்ய வேண்டும் என்று ஐகோர்ட்டு மகாராஜா கேட்டுக்கொண்டுள்ளார்.
இதையடுத்து, ஐகோர்ட் மகாராஜாவை தூத்துக்குடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திவிட்டு 2 போலீசார் பேருந்தில் அழைத்து சென்றுள்ளனர். அப்போது போலீசார் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. காவலுக்கு வந்திருந்த 2 போலீசாரின் கண்களில் மிளகாய் பொடியை தூவி தாக்கி தள்ளிவிட்டுவிட்டு ஐகோர்ட்டு மகாராஜாவை அழகு ராமர், தப்பி ஓட வைத்தார். இந்த சம்பவத்துக்கு ஐகோர்ட்டு மகாராஜாவின் மனைவி பிரியதர்ஷினியும் துணையாக இருந்துள்ளார்.
மதுரை ஐஏஎஸ் அதிகாரி மனைவி
இதற்கு இடையே, மதுரையில் வசித்த ஐஏஎஸ் அதிகாரி ஒருவரின் மனைவி சூர்யா என்பவருக்கும் ரவுடி ஐகோர்ட் மகாராஜாவுக்கும் பழக்கம் ஏற்பட்டு இருக்கிறது. மதுரையை சேர்ந்த பெண் ஒருவருடன் சூர்யாவுக்கு பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சினை இருந்துள்ளது. இந்த பிரச்சினை தொடர்பாக பெண்ணின் மகனை பள்ளிக்கு செல்லும் போது ஐகோர்ட் மகாராஜா கடத்தி 1.5 கோடி பணம் கேட்டு மிரட்டினார். இது தொடர்பான ஆடியோ கூட சமூக வலைத்தளங்களில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
இந்த கடத்தல் சம்பவம் தொடர்பாக மதுரை போலீசார் ஐகோர்ட் மகாராஜா மீதும், ஐஏஎஸ் அதிகாரி மனைவி சூர்யா மீதும் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் கைது செய்யப்படக் கூடும் என அஞ்சிய சூர்யா, தனது சொந்த ஊரான ராஜஸ்தான் சென்று தற்கொலை செய்தார். இந்த தகவல்கள் போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்து இருக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications