ஸ்டாலினின் சாய்ஸ்.. ப்ரொமோஷன் பெற்ற ஐஏஎஸ் அதிகாரி! யாருக்கும் கிடைக்காத மரியாதை! யார் இந்த உமாநாத்?
சென்னை: தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினின் முதன்மை தனி செயலாளராக உமாநாத் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். கோவை மாவட்ட ஆட்சியராகப் பணியாற்றிய போது, உமாநாத் ஐஏஎஸ் செய்த நற்காரியத்தால், கிராம மக்கள், “கலெக்டர் உமாநாத் காலனி” என்றே தங்கள் பகுதிக்கு பெயர் வைத்தது அவ்வளவு எளிதாக அரசு அதிகாரிகளுக்கு கிடைத்திராத மரியாதை.
கடந்த சில நாட்களாக தமிழக அரசில் அதிரடி மாற்றங்கள் நடைபெற்று வருகின்றன. தமிழக அரசின் தலைமைச் செயலர் உள்பட உயர் ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றப்பட்டு வருகின்றனர். தமிழக அரசின் தலைமைச் செயலராக இருந்த சிவ்தாஸ் மீனா ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார். அதைத்தொடர்ந்து, முதல்வரின் தனி செயலராக இருந்த முருகானந்தம் ஐஏஎஸ் தலைமைச் செயலராக நியமிக்கப்பட்டார்.

உமாநாத் ஐஏஎஸ்: மேலும், முதலமைச்சர் ஸ்டாலினின் இணை செயலாளராக லட்சுமிபதி ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், இன்று முதலமைச்சரின் முதன்மை தனிச் செயலாளராக உமாநாத் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். 2வது தனிச் செயலாளராக சண்முகம் ஐஏஎஸ், 3வது தனிச் செயலாளராக அனு ஜார்ஜ் ஐஏஎஸ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
முதலமைச்சரின் முதல் தனிச் செயலாளராக இருந்த முருகானந்தம் ஐஏஎஸ், தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளராக பொறுப்பேற்ற நிலையில், இந்த மாற்றம் நடைபெற்றுள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலினின் தனிச் செயலாளர்களில் ஒருவராக இருந்த மூத்த ஐஏஎஸ் அதிகாரி உமாநாத், தற்போது முதன்மை தனிச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
யார் இந்த உமாநாத்?: 2001 ஆம் ஆண்டு சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சியடைந்தவர் விருதுநகர் மாவட்டம் சாத்தூரைச் சேர்ந்த உமாநாத். அடிப்படையில் மருத்துவரான இவர், பின்னர் யுபிஎஸ்சி தேர்வெழுதி ஐ.ஏ.எஸ் அதிகாரியானார். 2010-ம் ஆண்டு கோவை மாவட்ட ஆட்சியராக பணியாற்றினார் உமாநாத். அப்போது ஏராளமான நலத்திட்டங்கள் சீரமைப்புப் பணிகளை மேற்கொண்டதால் கோவை மக்களிடம் நல்ல பெயரை எடுத்தார்.

கருணாநிதி தலைமையிலான முந்தைய திமுக ஆட்சியில் 2010 ஆம் ஆண்டு கோவையில் செம்மொழி மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி பாராட்டைப் பெற்றார் உமாநாத். கடந்த அதிமுக ஆட்சியில் தமிழ்நாடு மருந்துப் பொருட்கள் கழக இயக்குநராக பதவி வகித்த உமாநாத் கொரோனா சிகிச்சைக்கான மருந்துகளை முன்கூட்டியே கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுத்தார். தமிழ்நாட்டில் மருத்துவ ஆக்ஸிஜன் கையிருப்பை உயர்த்த நடவடிக்கை எடுத்தார்.
நன்றிக்கடன்: இதையெல்லாம் விட ஒரு முக்கியமான விஷயம் உள்ளது. 2011 காலகட்டத்தில் கோவை மாவட்ட கலெக்டராக உமாநாத் பதவி வகித்தபோது, விராலிக்காடு கிராம மக்கள் பட்டா கேட்டு மனு அளித்தனர். கருமத்தம்பட்டி அருகே விராலிக்காடு பகுதியில் வசிக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் 30 ஆண்டுகளுக்கும் மேலாக பட்டா கேட்டு போராடிக் கொண்டிருந்தனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பல முறை மனு எழுதி கொடுத்தும் அரசியல்வாதிகளிடம் கோரிக்கை வைத்தும் பலனில்லை.
கலெக்டர் உமாநாத் காலனி: கடந்த 2011 ஆம் ஆண்டு கோவை கலெக்டராக உமாநாத் ஐஏஎஸ் தான், அங்கு வசிக்கும் 80 பேருக்கு பட்டா வழங்கினார். இதனால், அப்பகுதி மக்கள், நன்றிக்கடனாக அந்த இடத்துக்கு 'கலெக்டர் உமாநாத் காலனி' என்று பெயர் சூட்டினர். அந்தப் பகுதியில் கலெக்டர் உமாநாத் காலனி என்ற பெயர்ப் பலகையை வைத்ததோடு, ஆதார் அட்டை, ரேஷன் கார்டு உட்பட அனைத்து ஆவணங்களிலும் தங்கள் தெரு பெயரை அவ்வாறு தான் பயன்படுத்தி வருகின்றனர்.
அதன்பிறகு கோவை மாவட்ட ஆட்சியர் பணியில் இருந்து மாறி உமாநாத் வெவ்வேறு பொறுப்புகளுக்கு சென்றாலும் இப்போதும் அந்தப் பகுதி “கலெக்டர் உமாநாத் காலனி” என்ற பெயரில் தான் அழைக்கப்படுகிறது. கடந்த 2021 ஆம் ஆண்டு ஸ்டாலின் முதலமைச்சரான பிறகு உமாநாத் ஐஏஎஸ், முதல்வரின் தனி செயலர்-2 ஆக நியமிக்கப்பட்டார். இந்நிலையில் தற்போது தமிழக முதல்வரின் முதன்மை தனி செயலராக நியமிக்கப்பட்டு உள்ளார்.












Click it and Unblock the Notifications