7.16க்கு பிசிசிஐ போட்ட ட்விட்.. முற்றும் கங்குலி vs கோலி மோதல்.. யார் சொல்வது பொய்? நடந்தது என்ன?
சென்னை: இந்திய அணியின் டெஸ்ட் கேப்டன் கோலிக்கும் பிசிசிஐ தலைவர் கங்குலிக்கும் இடையிலான கருத்து வேறுபாடு கொஞ்சம் கொஞ்சமாக வெளியே தெரிய தொடங்கி உள்ளது. இரண்டு பேரும் மாறி மாறி கேப்டன்சி மாற்றம் குறித்து பேசுவது பெரிய சர்ச்சையாகி உள்ளது. இந்தியாவின் ஒருநாள் மற்றும் டி 20 கேப்டன்சி மாற்றத்திற்கு பின் என்னதான் நடந்தது? இவர்கள் இடையிலான மோதலுக்கு என்ன காரணம் என்று இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
Recommended Video
இந்திய ஒருநாள் மற்றும் டி 20 அணியின் கேப்டனாக இருந்த கோலி டி 20 உலகக் கோப்பை தொடரில் ஆடும் முன்பே தனது டி 20 கேப்டன்சி ராஜினாமா குறித்து அறிவித்துவிட்டார். நான் இனி கேப்டனாக இருக்க போவது இல்லை. டி 20 கேப்டனாக இதுவே எனது கடைசி தொடர் என்று கோலி குறிப்பிட்டு இருந்தார்.
தனது பேட்டிங் மீது கவனம் செலுத்த வேண்டும் என்பதால் டி 20 கேப்டன்சியில் இருந்து பதவி விலகுவதாக கோலி அறிவித்தார். ஆனால் ஒருநாள் மற்றும் டெஸ்ட் கேப்டன்சியில் நீடிப்பேன் என்று கோலி குறிப்பிட்டு இருந்தார்.

கேப்டன் பதவி ராஜினாமா
இந்த நிலையில்தான் டி 20 அணி கேப்டன் பதவியில் இருந்து கோலி ராஜினாமா செய்த நிலையில் இன்னொரு பக்கம் ஒருநாள் அணியின் கேப்டன்சியில் இருந்தும் அவர் நீக்கப்படுவாரா என்ற கேள்விகள் நிலவி வந்தது. இரண்டு வைட் பால் போட்டிக்கு இரண்டு கேப்டன்கள் ஏன் என்ற கேள்வி நிலவியது. இதனால் பிசிசிஐ கோலியை ஒருநாள் கேப்டன் பதவியில் இருந்து நீக்கும் என்றே எதிர்பார்க்கப்பட்டது.

இந்திய அணி அறிவிப்பு கோலி நீக்கம்
அதன்படி கடந்த டிசம்பர் 8ம் தேதி தென்னாபிரிக்கா செல்லும் இந்திய டெஸ்ட் அணி அறிவிக்கப்பட்டது. அதில், ரோஹித் சர்மா இந்திய டெஸ்ட் அணியின் துணை கேப்டனாக அறிவிக்கப்பட்டார். 7.15க்கு பிசிசிஐ இந்த ட்விட்டை செய்தது. பின்னர் 7.16 மணிக்கு இந்திய அணியின் ஒருநாள் கேப்டனாக ரோஹித் செயல்படுவார் என்று பிசிசிஐ அறிவித்தது. அதோடு கோலிக்கு நன்றி சொல்லி சில நிமிடங்களில் அடுத்த ட்விட் செய்யப்பட்டது.

கங்குலி விளக்கம்
இந்த நிலையில் கோலி கேப்டன்சி நீக்கம் குறித்து கங்குலி அளித்த பேட்டியில், இந்திய அணியில் நிறைய லீடர்கள் இருப்பதால் சிக்கல் வருகிறது. ஒரு நல்ல அணிக்கு நிறைய லீடர்கள் தேவை கிடையாது. நான் தனிப்பட்ட முறையில் விராட் கோலியிடம் டி 20 கேப்டன்சியில் இருந்து பதவி விலக வேண்டாம் என்று கூறினேன். ஆனால் அவர் தனது பணிச்சுமை காரணமாக ராஜினாமா செய்தார்.

முடிவு
அவர் ஒரு சிறந்த தலைவராக இருந்தார். அவருடைய கிரிக்கெட் மிகவும் ஆக்ரோஷமானது. இந்திய அணியை நீண்ட காலத்திற்கு அவர் வழி நடத்தினார். நானும் இந்திய அணியை நீண்ட காலத்திற்கு வழி நடத்தி இருக்கிறேன். பிசிசிஐக்கு ஒரு வைட் பால் கேப்டன்தான் தேவை. அதனால்தான் இந்த முடிவு எடுக்கப்பட்டது. எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்று தெரியாது. ஆனால் இந்திய அணி சிறப்பானது. இது பல சாதனைகளை படைக்க போகிறது.

ரோஹித் பாராட்டு
இந்த நிலையில் ரோஹித் சர்மாவை பாராட்டி பிசிசிஐ ட்விட் செய்தது. அதோடு ரோஹித் சர்மாவின் வீடியோவை அவர் கேப்டனாக ஆன பின் பிசிசிஐ வெளியிட்டது. கங்குலி, டிராவிட் ஆகியோருடன் பணியாற்றுவது மகிழ்ச்சி என்று ரோஹித் குறிப்பிட்டார்.

ரோஹித் கோலி மோதல் செய்தி
இந்த மோதலை தொடர்ந்து ஒருபக்கம் கோலி தென்னாபிரிக்க ஒருநாள் தொடரில் ஆட மாட்டார் என்று செய்திகள் வந்தன. இன்னொரு பக்கம் ரோஹித் தென்னாபிரிக்க டெஸ்ட் தொடரில் ஆட மாட்டார் என்று செய்திகள் வந்தன. ஆனால் இதை கோலி மறுத்தார். அதேபோல் ரோஹித் காயம் காரணமாகவே ஆடவில்லை என்று பிசிசிஐ அறிவித்தது. இருப்பினும் இருவருக்கும் ஈகோ மோதல் என்று செய்திகள் வந்தன.

ஆனால் உண்மை என்ன?
ஆனால் இதன்பின் செய்தியாளர்களை சந்தித்த கோலி, தான் ஒருநாள் அணியில் தொடர்ந்து ஆடுவேன். தென்னாபிரிக்க தொடரில் ஆடுவேன் என்று கூறி வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். ஆனால் அதே சமயம் தான் டி 20 கேப்டன்சியில் இருந்து விலகிய போது என்னிடம் யாரும் விலக வேண்டாம் என்று கூறவில்லை. அதை பிசிசிஐ மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்டது என்று கோலி கூறினார். கங்குலி கூறிய கருத்துக்கு அப்படியே நேர் எதிராக கோலி இப்படி கூறினார்.

கோலி விளக்கம்
அதோடு, தென்னாபிரிக்க டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி பற்றி என்னிடம் தேர்வுக்குழு போனில் பேசியது. பேசி முடிக்கும் போது நான் ஒருநாள் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டுவிட்டதாக கூறினார்கள். நான் ஓகே பைன் என்று கூறினேன். செப்டம்பர் 16ல் நான் டி 20 கேப்டன்சியில் இருந்து ராஜினாமா செய்த போது ஒருநாள் அணியை 2023வரை வழிநடத்துவேன் என்று கூறினேன்.

பிசிசிஐ தரப்பு தகவல்
அதை பிசிசிஐ வரவேற்று இருந்தது. அதே சமயம் என்னை ஒருநாள் கேப்டன்சியில் இருந்து நீக்க வேண்டும் என்றால் நீக்கலாம் என்றும் கூறினேன். இப்போது அந்த மாற்றம் நடந்துள்ளது. இந்த ஒருநாள் கேப்டன்சி நீக்கம் பற்றி இதற்கு முன் என்னிடம் எதுவும் சொல்லவில்லை, நீக்கம் பற்றி என்னிடம் எதுவும் பேசவில்லை என்று கோலி கூறியுள்ளார். இந்த நிலையில் பிசிசிஐ அதிகாரி கொடுத்த தகவலில் ஒருநாள் கேப்டன்சி நீக்கம் பற்றி கோலியிடம் முன்பே சொல்லிவிட்டோம்.

முன்பே சொல்லிவிட்டோம்
அவர் டி 20 கேப்டன்சியில் இருந்து விலகிய போதே அதை தடுக்க முயன்றோம். முடியவில்லை. அதன்பின் இரண்டு வைட் பால் கேப்டன்கள் இருக்க முடியாது என்பதால் இப்போது இந்த முடிவை எடுத்து இருக்கிறோம். அவர் டி 20 கேப்டன்சியில் இருந்து விலகிய போதே ஒருநாள் கேப்டன்சி குறித்தும் பேசிவிட்டோம் என்று குறிப்பிட்டுள்ளார். இதில் கங்குலி சொல்வது உண்மையா.. கோலி சொல்வது உண்மையா என்ற கேள்வி எழுந்துள்ளது.இதை கங்குலி, பிசிசிஐ, கோலி பொதுவில் விவாதம் செய்வதால் இவர்களுக்கு இடையிலான மோதல் பட்டவர்த்தனமாக வெளியே தெரிய தொடங்கி உள்ளது.












Click it and Unblock the Notifications