அடுத்த பிரதமராக யார் வேண்டும்? தமிழகத்தில் மோடிக்கு விழுந்த அடி! ராகுலுக்கு பெரிய ஆதரவு -பரபர சர்வே
சென்னை: இந்தியாவின் அடுத்த பிரதமராக யார் வேண்டும்? என்பது தொடர்பாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஜூன் மாதம் நடத்தப்பட்ட கருத்து கணிப்பின் முடிவுகள் வெளியாகி உள்ளன. இதில் ராகுல் காந்திக்கு ஆதரவு குவிந்துள்ள நிலையில் பிரதமர் மோடி கடும் பின்னடைவை சந்தித்துள்ளார். அதன் விபரம் வருமாறு:
2024ல் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதில் வெற்றி பெற்று ஹாட்ரிக் சாதனை படைக்க பாஜக முயன்று வருகிறது. ஆனால் பாஜகவை வீழ்த்த காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. இதற்காக 24 எதிர்க்கட்சிகள் தற்போது ஓரணியில் திரண்டுள்ளன.

நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சி தலைவர்களின் முதல் ஆலோசனை கூட்டம் கடந்த மாதம் 23ம் தேதி பாட்னாவில் நடந்தது. இதில் 18 கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர். இதையடுத்து 2வது கட்ட ஆலோசனை கூட்டம் நேற்று பெங்களூரில் தொடங்கியது.
பெங்களூரில் இன்று 2வது நாளாக எதிர்க்கட்சி தலைவர்கள் ஆலோசனை நடத்த உள்ளனர். இந்த கூட்டத்துக்கு காங்கிரஸ் கட்சி தலைமையேற்றுள்ளது. சோனியா தலைமையில் மொத்தம் 24 கட்சி தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். தமிழக முதல்வர் ஸ்டாலின், பீகார் முதல்வர் நிதிஷ் குமார், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள், சமாஜ்வாதியின் அகிலேஷ் யாதவ் உள்பட ஏராளமான தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.
இது ஒருபுறம் இருக்க பாஜகவும் நாடாளுமன்ற தேர்தல் பணியை துவக்கி உள்ளது. டெல்லியில் இன்று பாஜக தனது கூட்டணியில் உள்ள கட்சி தலைவர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளது. இதில் மொத்தம் 38 கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். தமிழகத்தில் இருந்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, தமாகா தலைவர் ஜிகே வாசன், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி உள்ளிட்டவர்கள் பங்கேற்க உள்ளனர்.
இதனால் இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் ஜூரம் தற்போதே தொடங்கி உள்ளது. இதற்கிடையே தான் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக கருத்து கணிப்புகளும் தொடங்கி உள்ளன. வரும் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற வேண்டும். யார் பிரதமராக வர வேண்டும் என்பது தொடர்பான கேள்விகளுடன் கருத்து கணிப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் தந்தி டிவி மாதந்தோறும் கருத்து கணிப்பு ஒன்றை நடத்தி வருகிறது. அந்த வகையில் ஜூன் மாதம் நடத்தப்பட்ட கருத்து கணிப்பின் முடிவு தற்போது வெளியாகி உள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரியில் மொத்தம் 40 நாடாளுமன்ற தொகுதிகளில் வசிக்கும் 2,500 வாக்காளர்களிடம் இந்த கருத்து கணிப்புகள் நடத்தப்பட்டன. மே மாதம் முதல் கருத்து கணிப்பு வெளியான நிலையில் தற்போது 2வது கருத்து கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளது.
இந்த கருத்து கணிப்பில் இந்தியாவில் யார் அடுத்த பிரதமராக வர வேண்டும்? என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. இந்த கேள்விக்கு பிரதமர் மோடியை விட ராகுல் காந்திக்கு தான் மக்கள் அதிக ஆதரவு தெரிவித்துள்ளனர். அதன்படி ராகுல் காந்தி தான் அடுத்த பிரதமராக வர வேண்டும் என 70 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
பிரதமர் மோடிக்கு 29 சதவீதம் பேர் மட்டும் ஆதரவு தெரிவித்துள்ளனர். மற்றவர்கள் என 1 சதவீதம் பேர் கூறியுள்ளனர். இதன்மூலம் பிரதமர் மோடியை விட ராகுலுக்கு 41 சதவீதம் பேர் அதிகமாக ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்த ஜூன் மாத கருத்து கணிப்பின் படி பார்த்தால் தமிழ்நாடு, புதுச்சேரியில் மொத்தமுள்ள 40 நாடாளுமன்ற தொகுதிகளில் வாக்காளர்கள் பிரதமர் மோடியை விட ராகுல் காந்தியை தான் பிரதமராக்க விரும்புவது தெரியவருகிறது. இது காங்கிரஸ் கட்சியினருக்கு உற்சாகத்தை கொடுப்பதோடு, பாஜகவினருக்கு அதிர்ச்சி வைத்தியம் வழங்கி உள்ளது.
இருப்பினும் கூட முந்தைய கருத்து கணிப்புடன் ஒப்பிட்டு பார்த்தால் பாஜகவுக்கு ஆறுதலான விஷயம் உள்ளது. அதாவது கடந்த மே மாதமும் தந்தி டிவி சார்பில், ‛‛இந்தியாவின் அடுத்த பிரதமராக யார் வர வேண்டும் என விரும்புகிறீர்கள்'' என்ற கேள்வி 2,500 பேரிடம் கேட்கப்பட்டது. அப்போது ராகுல் காந்திக்கு 71 சதவீதம் பேரும், பிரதமர் மோடிக்கு 27 சதவீதம் பேரும், மற்றவர்கள் என 2 சதவீதம் பேரும் தெரிவித்து இருந்தனர்.
அதன்படி ஜூன் மாத கருத்து கணிப்பை மே மாதத்துடன் ஒப்பிட்டு பார்த்தால் ராகுல் காந்தி பிரதமராக வேண்டும் என கூறியவர்களின் எண்ணிக்கை 71 சதவீதத்தில் இருந்து 1 சதவீதம் குறைந்து 70 ஆக குறைந்துள்ளது. மாறாக பிரதமர் மோடிக்கான ஆதரவு என்பது 27 சதவீதத்தில் இருந்து 29 என 2 சதவீதம் வரை அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications