"மிஸ்டர் கிளீன்".. இவர்தான் தமிழ்நாட்டின் அடுத்த தலைமை செயலாளர்.. "டிக்" அடிப்பாரா முதல்வர் ஸ்டாலின்
சென்னை: தமிழகத்தின் தலைமைச் செயலாளர் யார் என்பது குறித்து மீண்டும் பல்வேறு யூகங்கள் வலுப்பெற்றுள்ளன.. அந்தவகையில் ஒருசில பெயர்கள் மீண்டும் அடிபட துவங்கி உள்ளது, மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாடு தலைமை செயலாளராக பணியாற்றி வரும் இறையன்புவின் பணிக்காலம் அடுத்த மாதத்துடன் முடிவடைகிறது.. இதனால், அடுத்த தலைமை செயலாளர் யார்? என்ற எதிர்பார்ப்பு ஒருபக்கம் இருந்தாலும், இறையன்புவுக்கே வேறு ஏதேனும் பொறுப்பு வழங்கப்படுமா? என்பது குறித்துதான் ஆவல்கள் எழுந்துள்ளன.

ஆணையர்: இதற்கு சில காரணமும் சொல்லப்படுகிறது.. இறையன்புவை இன்னும் சிலகாலம் தங்களுடன் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் நினைப்பதாக தெரிகிறது.. வழக்கமாக, ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரிகள் சில முக்கிய பொறுப்புகளில் நியமிக்கப்படுவார்கள்.. அந்தவகையில், இறையன்புவை தலைமை தகவல் ஆணையராக நியமிக்கவும் ஸ்டாலின் யோசித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகின.. காரணம், தலைமைச் செயலாளருக்கு இணையானது, தலைமை தகவல் ஆணையர் பதவியாகும்.
பணியிடங்கள்: அதாவது, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில்கள் வழங்குவது, அனைத்து துறை சார்ந்த தரவுகளை கணினிமயப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பணிகளை இந்த ஆணையம் மேற்கொண்டு வருகிறது.. அதற்கேற்றவாறு, தமிழ்நாட்டில் மாநில தகவல் ஆணையத்தில் பணியிடங்களும் நிரப்பப்படாமல் உள்ளது. அதனால், புதியவர்களை தேடும் பணி ஓய்வுபெற்ற நீதிபதி அக்பர் அலி தலைமையில் நடைபெற்றது.. அந்த குழு பரிந்துரைத்த லிஸ்ட்டில்தான் இறையன்புவின் பெயர் இடம்பெற்றதாக சொன்னார்கள்.
எனவே, இறையன்புவின் பதவி குறித்து திட்டவட்டமான முடிவை அரசு அறிவிக்காமல் உள்ளதென்றாலும், அவரை மேலும் சில வருடங்களுடன் தங்களுடன் வைத்துக் கொள்ள முதல்வர் தரப்பு விரும்புவதாகவே கூறப்பட்டு வருகிறது. அதேசமயம், இறையன்பு பதவிக்காலம் அடுத்த மாதத்துடன் நிறைவடையும் நிலையில், அடுத்த பதவிக்கான ரேஸில் ஒருசில ஐஏஎஸ் அதிகாரிகள் பெயர்கள் அடிபட்டு கொண்டேயிருக்கின்றன..
நீளும் லிஸ்ட்: குறிப்பாக, முருகானந்தம், சிவதாஸ் மீனா, கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்யா மிஸ்ரா, விக்ரம் கபூர், கார்த்திகேயன், ஹன்ஸ்ராஜ் வர்மா போன்றோரின் பெயர்கள் உள்ளன. இவர்களில் சிவதாஸ் மீனாவின் பெயர்தான் வலுவாக கேட்க முடிவதாக கோட்டை வட்டாரங்கள் கூறுகின்றன.
ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த சிவதாஸ் மீனா, ஜெய்ப்பூரில் மாளவியா பிராந்திய பொறியியல் கல்லூரியில் சிவில் என்ஜினியரிங் படித்தவர்.. ஜப்பானில் சர்வதேச ஆய்வுகளில் முதுகலைப் பட்டம் பெற்றவர்.. 30 வருடங்கள் ஐஏஎஸ் பணியில் அனுபவம் மிக்கவர்.. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 4 செயல்களில் ஒருவரும்கூட.. முதல்வராக எடப்பாடி பொறுப்பேற்றதுமே, சிவதாஸ் மீனா மத்திய அரசு பணிக்கு மாற்றப்பட்டார்.
ராஜஸ்தான்: ஆனால், திமுக அரசு அமைந்ததும், நகராட்சி நிர்வாகத்துறை செயலாளராக இவர் நியமிக்கப்பட்டார். இதுவரை தன் பணியினை சிறப்பாக செய்து வருவதால், முதல்வரின் நன்மதிப்பையும் பெற்று வருகிறார்.. இதற்கு இன்னொரு காரணம், அரசு ஊழியர்களிடம் கண்டிப்பு காட்டுபவர் சிவதாஸ் குப்தா.. ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் என்றாலும் தமிழக கேடரில் இருக்கும் அதிகாரிகளில் மிகவும் சீனியர் என்பது மிகவும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. நெருக்கடியான சூழலில் திறமையாக செயல்படக் கூடியவர் என்ற நற்பெயரும் இவருக்கு உள்ளது..
அதைவிட முக்கியம் கறை படியாத கையை கொண்டு வர விரும்புவார். அதற்கு சிவதாஸ் மீனா ஐஏஎஸ் சரியான ஆளாக இருப்பார் என கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன... இப்படியான யூகங்கள் ஒருபக்கம் வலம்வந்தாலும், திமுக அரசு மிக கவனத்துடன் ஒவ்வொரு விஷயத்தையும் கையாள பார்க்கிறது.. காரணம், 3வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது திமுக அரசு.. நேற்றைய அமைச்சரவை மாற்றம் குறித்த சலசலப்பும், விமர்சனங்களும் இணையத்தில் றெக்கை கட்டி பறந்து கொண்டிருக்கின்றன..
காய் நகர்த்தல்: குறிப்பாக எதிர்க்கட்சியினர், பிடிஆர் பதவி மாற்றத்தை தங்கள் வெற்றியாக கொண்டாடி வரும்நிலையில், திமுக அரசு அடுத்தடுத்த காய்களை சரியாக நகர்த்த துவங்கி உள்ளது.. அந்தவகையில், ஆட்சியை சரியான பாதையில் கொண்டு செல்ல அதிகாரிகளின் உதவி அவசியம் என்பதை மேலிடம் நன்கு புரிந்து வைத்துள்ளதால், அதற்கேற்பவே புதிய தலைமை செயலாளர் தேர்வு இருக்கும் என்றும், முதல்வர் ஸ்டாலின், இது தொடர்பாக நன்கு ஆலோசித்தே முடிவெடுப்பார் என்றும் அரசியல் விமர்சகர்கள் கருத்து சொல்கிறார்கள்.

இதெல்லாம் ஒருபக்கம் இருந்தாலும், முதல்வர் ஸ்டாலின் தனிச்செயலராக மூத்த ஐஏஎஸ் அதிகாரி ராஜேஷ் லக்கானி நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நேற்று அமைச்சரவை மாற்றம் நிகழ்ந்துள்ள நிலையில், ஐ.ஏ.எஸ், - ஐ.பி.எஸ்., அதிகாரிகள் மாற்றம் குறித்த நீண்ட பட்டியலும் தயாராகி வருவதாக தெரிகிறது..
கசியும் தகவல்கள்: அந்தவகையில், நிதித்துறை அமைச்சராக தங்கம் தென்னரசு பொறுப்பேற்றுள்ளதால், அவருக்கான செயலர் பதவிக்கு உதயசந்திரன் நியமிக்கப்படுகிறார் என்ற உறுதிப்படுத்தப்படாத தகவலும் வெளியாகி உள்ளது கூடுதல் பரபரப்பை கிளப்பி கொண்டிருக்கிறது. அதேபோல, முதல்வர் ஸ்டாலின் தனிச்செயலராக மூத்த ஐ.ஏ. எஸ்., அதிகாரி ராஜேஷ் லக்கானி நியமிக்கப்பட உள்ளதாகவும் சொல்கிறார்கள்.
கடந்த சில மாதங்களாகவே, பெரிய அளவில் அதிகாரிகள் மாற்றத்தை முதல்வர் செய்யப்போவதாகவும், அந்தவகையில், ராஜேஷ் லக்கானியை தலைமை செயலகத்தில் முக்கிய பொறுப்புக்கு அழைத்துக்கொள்ள திட்டமிட்டிருப்பதாகவும் செய்திகள் வெளியாகி வந்தவண்ணம் இருந்தன.. ஆனால், அதுகுறித்த அறிவிப்பு எதுவுமே வராமல் இருந்தநிலையில், இப்போது மீண்டும் ராஜேஷ் லக்கானி பெயர் அடிபடத்துவங்கி உள்ளது, கோட்டையில் பரபரப்பை கிளப்பி உள்ளது.












Click it and Unblock the Notifications