டைம் நெருங்கிடுச்சு.. "அவங்க" 2 பேரும் பிரிய போறாங்களா.. ஒரே தொகுதிக்கு 4 பேரா.. ஈர்க்கும் கொங்கு
ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட இப்போதே கட்சிகள் ஆர்வம் காட்டி வருகிறார்களாம்
சென்னை: விரைவில் இடைத்தேர்தல் வர உள்ள நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி மிகுந்த கவனத்தை பெற்று வருகிறது.. இதையடுத்து அரசியல் களம் சூடாகி உள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்த திருமகன் ஈவெரா திடீர் மரணம் அடைந்ததால், அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.. மேலும், அங்கு இடைத்தேர்தல் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது..
வழக்கமாக, ஒரு தொகுதி காலியானால் 6 மாத காலத்துக்குள் இடைத்தேர்தல் நடத்தவேண்டும் என்பது விதி.. எனவே, வருகிற மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் இந்த தொகுதிக்கான இடைத்தேர்தல் நடத்தப்படலாம் என்று தெரிகிறது.

ஸ்டார் தொகுதி
ஆனால், அதற்குள் இப்போதே அந்த தொகுதியை 4 கட்சிகள் குறி வைத்துள்ளன.. ஆட்சிக்கு வந்த ஒன்றரை வருடங்களில் நடக்க போகும் முதல் இடைத்தேர்தல் என்பதால், திமுக இதில் முக்கியத்துவம் தந்து பார்க்கிறது.. ஆங்காங்கே திமுக அரசு மீது அதிருப்திகளும் புகார்களும் கிளம்பி உள்ளதால், இந்த தொகுதியில் வெற்றி பெற்று, நன்மதிப்பை மக்களிடம் பெற்றுவிட வேண்டும் என்று முனைப்பு காட்ட உள்ளதாம்.. ஆனால், காங்கிரஸோ இதில் முந்திக்கொண்டுள்ளது. இந்த தொகுதியில் வேறு ஒரு பிரபலமான வேட்பாளரை தேர்வு செய்து நிறுத்த வேண்டும் என்று முடிவெடுத்துள்ளதாம்..

உட்பூசல்கள்
இதற்காகவே சில காங்கிரஸ் தலைகள், காய்களையும் நகர்த்தி வருவதாகவும் தெரிகிறது.. அதேபோல அதிமுகவை பொறுத்தவரை, அடுத்தடுத்த தொடர் தேர்தல் தோல்விகளில் சிக்கி உள்ளது.. கட்சிக்குள் உட்பூசல்கள் வெடித்து கிளம்பிய நிலையில், தொண்டர்களிடமும் ஒருவித சோர்வும், கலக்கமும் சூழ்ந்துள்ளது.. அதுவும் இல்லாமல், பிரதான எதிர்க்கட்சி என்பதால், இந்த தேர்தலிலாவது, எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்று முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இன்னும் சொல்லப்போனால், இந்த தொகுதி அதிமுகவின் கோட்டையும்கூட..

யுவராஜா
கடந்த தேர்தலில் கூட்டணியில் தமாகா யுவராஜா இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.. இருந்தாலும், அதிமுகவும் அதன் கூட்டணிகளும்தான் இங்கு பெரும்பாலும் வெற்றி பெற்றுள்ளன.. எனவே, இந்த முறை அதிமுக நேரடியாக போட்டியிடும் என்கிறார்கள்.. அதிலும், எடப்பாடி பழனிசாமியின் கொங்கு கோட்டை என்பதால், தன்னுடைய செல்வாக்கை காட்ட முக்கிய வேட்பாளரை நிறுத்தலாம் என்று தெரிகிறது. இந்த லிஸ்ட்டில் பாஜகவும் சேர்ந்து கொண்டுள்ளது.. அதிமுகவுடன் கூட்டணி இல்லாவிட்டாலும் தனித்து போட்டியிடவும் நாம் தயாராக வேண்டும் என்று பலமுறை சொல்லி வருகிறார் மாநில தலைவர் அண்ணாமலை..

சவால்கள்
தாங்கள்தான் உண்மையான எதிர்க்கட்சி என்றும் சொல்லி வருகிறார்.. திமுக தனித்து போட்டியிட தயாரா? என்றும் செக் வைத்து வருகிறார்.. மற்றொருபக்கம் அதிமுகவுடனும் இணக்கமான போக்கு இல்லாமல் உள்ளது.. அந்தவகையில், இந்த இடைத்தேர்தலில் பாஜக தனித்து களமிறங்கும் என்கிறார்கள்.. அந்தவகையில், அதிமுக, திமுக, காங்கிரஸ், பாஜக என இந்த 4 கட்சிகளுக்குமே, வரப்போகும் இடைத்தேர்தல் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.. எம்பி தேர்தலுக்கான முன்னோட்டடமாகவும் இந்த தேர்தல் கருதப்படுகிறது.

நான்முனை போட்டி
ஆக, அதிமுக கூட்டணியில் பாஜக, திமுக கூட்டணியில் காங்கிரஸ் போன்றவை தனித்து களமிறங்குவார்களா? அல்லது கூட்டணிக்கு தொகுதி விட்டுத்தரப்படுமா? என்று தெரியவில்லை.. முக்கியமாக, பாஜகவுக்கு அதிமுக விட்டுத்தந்தால், அது கூட்டணியை பெரிதாக பாதிக்காது என்றும் சொல்கிறார்கள்.. அந்தவகையில், கொங்கு மண்டலம் தங்கள் கோட்டை என்று அதிமுக சொல்லி வந்த நிலையில், அந்த கோட்டையை திமுக கைப்பற்றிவிட்டதாக சொல்லி வரும் நிலையில், கொங்கு மண் தங்களுக்குதான் என்று பாஜகவும் சொல்லி வரும் நிலையில், யாருக்குதான் ஈரோடு கிழக்கு தொகுதி கிடைக்க போகிறது என்றும் தெரியவில்லை.. பார்ப்போம்..!!!












Click it and Unblock the Notifications