சென்னையை விட்டுவிட்டு புதுவையிலிருந்து கேட்டரிங் சர்வீஸை விஜய் புக் செய்தது ஏன்? சுவாரஸ்ய பின்னணி!
சென்னை: தமிழ்நாட்டில் சமையல் கலைஞர்கள் கொட்டிக் கிடக்க விருது வழங்கும் விழாவிற்கு புதுவையிலிருந்து சமையல் கலைஞரை நடிகரும் தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய் தேர்வு செய்தது எப்படி?
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கியுள்ளார். அவர் கடந்த ஆண்டு 10, 12 ஆம் வகுப்புகளில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு ஊக்கத் தொகையை வழங்கியதுடன் சான்றிதழையும் வழங்கி அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

அது போல் இந்த ஆண்டும் நடிகர் விஜய் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களில் மாவட்ட அளவில் மாநில அளவில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். அது போல் அவர்களுடன் புகைப்படமும் எடுத்துக் கொண்டார்.
கடந்த முறையும் சரி இந்த முறையும் சரி, விஜய், மாணவர்களுக்கும் அவருடைய பெற்றோர்களுக்கும் மதிய உணவை அளித்தார். அது போல் மற்ற மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வர போக்குவரத்தையும் நிர்வாகிகள் மூலம் ஏற்பாடு செய்திருந்தார்.
இந்த விழா இரு கட்டங்களாக நடந்து முடிந்தது. நேற்று நடந்த விழாவில் 800 பேருக்கு விருந்து படைக்கப்பட்டது. அதில் மலாய் சாண்ட்விச், ஆக்ரா பான் ஸ்வீட், அவியல், வெங்காய மணிலா பக்கோடா, வெற்றிலை பாயாசம், இஞ்சி துவையல் உள்ளிட்ட வெவ்வேறு விதமான உணவுகளை தயார் செய்திருந்தனர்.
அந்த சமையல் குறித்த தகவல்கள் கிடைத்துள்ளன. இதுகுறித்து புதுவையை சேர்ந்த கேட்டரிங் உரிமையாளர் ரவி கூறுகையில் நாங்கள் 45 ஆண்டுகளாக சமையல் துறையில் இருந்து வருகிறோம். புதுவையில் புஸ்ஸி ஆனந்த் வீட்டு திருமணத்தில் நாங்கள் சமைத்தோம்.
அப்போது அந்த நிகழ்வில் விஜய் கலந்து கொண்டு சாப்பிட்டார். அவர் எங்களது சமையல் குறித்து கேட்டறிந்துள்ளார். பின்னர் எங்களுக்கு இந்த ஆர்டரை வழங்கினார். என்னுடன் சமையலுக்கு 50 பேர் உள்ளார்கள். உணவு பரிமாற 250 பேர் உள்ளனர். மொத்தமாக இந்த நிகழ்வுக்கு 4000 பேருக்கு சமைத்தோம். இனி வரும் காலங்களிலும் விஜய் எங்களுக்கே கேட்டரிங் ஆர்டர் கொடுப்பார் என நினைக்கிறோம் என்றார்.
சொல்ல போனால் விஜய் இந்த மாணவர்களுக்கு விருது வழங்கும் தேதியை வேறு தேதிக்கு வைத்திருந்தாராம். ஆனால் அந்த தேதியில் இந்த சமையல் குழுவினர் வேறு ஒரு இடத்தில் ஆர்டரை பெற்றதால் சமையல் கலைஞர்களுக்கு ஆர்டர் இல்லாத நாளில் நிகழ்ச்சியை விஜய் மாற்றியமைத்துள்ளாராம். இதை ரவிதான் ஒரு பேட்டியில் கூறியிருந்தார். அப்படியென்றால் ரவியின் கைமணம் எப்படியிருந்திருக்கும் பாருங்கள்.












Click it and Unblock the Notifications