‛SIR’ வேண்டவே வேண்டாம்.. திமுக உள்பட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது ஏன்? எளிதாக விளக்கும் 7 பாயிண்ட்
சென்னை: தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் தான் SIR எனும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் இன்று முதல் தொடங்கி உள்ளது. அடுத்த மாதம் 4ம் தேதி வரை இந்த திருத்த நடவடிக்கை நடைபெற உள்ளது. வீடுகளுக்கு வரும் வாக்குச்சாவடி முகவர்களிடம் உரிய ஆவணங்களை சமர்பித்து பொதுமக்கள் தங்களின் இந்திய குடியுரிமையை நிரூபித்து வாக்காளர் பட்டியலில் பெயரை தக்க வைத்து கொள்ள வேண்டும். இந்த நடவடிக்கையை திமுக உள்பட பல எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்து வரும் நிலையில் அதன் பின்னணியில் எதிர்க்கட்சிகள் கூறும் 7 காரணங்கள் பற்றிய விவரம் வெளியாகி உள்ளது.
தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த சட்டசபை தேர்தலையொட்டி தமிழ்நாடு மட்டுமின்றி அந்தமான் நிக்கோபார் தீவுகள், கோவா, புதுச்சேரி, சத்தீஸ்கர், குஜராத், கேரளா, மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், ராஜஸ்தான், மேற்கு வங்காளம், லட்சத்தீவு உள்ளிட்ட மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் SIR (Special Intensive Revision) நடவடிக்கையை இந்திய தேர்தல் ஆணையம் தொடங்கி உள்ளது.

இந்த 12 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் இன்று முதல் டிசம்பர் 4ம் தேதி வரை ‛சார்' எனும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் நடைபெற உள்ளது. SIR என்பது வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த நடவடிக்கையாகும். இந்த நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. பீகாரில் நடந்த வாக்காளர் பட்டியல் தீவிர சிறப்பு திருத்த நடவடிக்கைகளால், 47 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் தமிழ்நாட்டில் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
தமிழ்நாடு முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இதில் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என்றும் கூட்டத்தின் போது முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டமாக தெரிவித்திருந்தார். அதன்படி சிறப்பு திருத்த நடவடிக்கைக்கு எதிராக திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.
இதற்கிடையே தான் இன்று தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் தொடங்கி உள்ளது. இந்நிலையில் தான் SIR நடவடிக்கை வேண்டாம் என்று எதிர்க்கட்சிகள் சொல்வதன் பின்னணியில் உள்ள 7 முக்கிய காரணங்கள் வருமாறு:
1. பல லட்சம் வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கும் வகையில் சிறப்பு வாக்காளர் திருத்த நடவடிக்கையை தேர்தல் ஆணையம் மேற்கொள்வதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன. குறிப்பாக பாஜகவுக்கு பலனளிக்கும் வகையில் ஏழைகள், ஓரங்கப்பட்டப்பட்ட மக்கள், சிறுபான்மையினர்களின் பெயர்கள் நீக்கம் செய்ய உள்ளதாக எதிர்க்கட்சியினர் கூறி வருகின்றனர். உண்மையில் இந்த நடவடிக்கையை மேற்கொண்டு இறந்தவர்கள், புலம்பெயர்ந்தவர்கள், 2 வாக்குரிமை வைத்திருப்பவர்கள் உள்பட பல்வேறு வகைகளில் பீகாரில் 47 லட்சம் பேரின் பெயர்கள் நீக்கப்பட்டது.
2. சிறப்பு வாக்காளர் சட்ட திருத்தத்தின்போது சில பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளுடன் தங்களின் குடியுரிமையை நிரூபிக்கும் வகையில் சான்றிதழ்களை சமர்ப்பிக்க வேண்டும். குறைந்த காலக்கெடுவுக்குள் இதனை செய்ய அதிகாரிகள் நிர்பந்தம் செய்வார்கள். இது பொதுமக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும். குறிப்பாக புலம்பெயர் தொழிலாளர்கள் பெரியளவில் பாதிக்கப்படுவார்கள்.
3. திமுக தரப்பில் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தத்தை வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள்(Booth Level Officers) வீடு வீடாக சென்று ஆவணங்களை சரிபார்த்து பெயர் சேர்ப்பு, நீக்க நடவடிக்கையை எடுக்க அனுமதிக்கிறது. ஆனால் அது தேர்தல் ஆணைய அதிகாரத்துக்குள் வராது. அதற்கு சட்டம், விதியில் இடமில்லை என்று உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
4 .உத்தர பிரதேசம் போன்ற மாநிலங்களில் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தத்துக்கான அதிகாரிகள் ஜாதி மற்றும் மதத்தின் அடிப்படையில் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இது ஒரு தலைபட்சமானது. இது வெளிப்படைத்தன்மை மற்றும் நியாயமான நடவடிக்கையை கேள்விக்குறியாக்கி உள்ளதுது. அதேபோல் சமீபத்தில் தான் ஐஏஎஸ் அதிகாரிகள் பணி இடமாற்றம் செய்யப்பட்டனர். இந்த பணி இடமாறுதல் மற்றும் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தத்துக்கான அறிவிப்பு வெளியான தேதி உள்ளிட்டவை சந்தேகத்தை எழுப்புகிறது.
5. வாக்காளர் பட்டியில் சிறப்பு திருத்தம் நடத்துவதற்கான நேரம் பிரச்சனைக்குரியதாக உள்ளது. தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பாக நடத்துவதை ஏற்க முடியாது. மேலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு நிறுத்தத்துக்கான காலஅவகாசம் ஒரு மாதம் என்று தான் வழங்கப்படுகிறது. நியாயமான முறையில் வாக்காளர் பட்டியல் திருத்தம் மேற்கொள்ள இந்த காலஅளவு மிகவும் குறைவாக உள்ளது. இதனால் திறம்பட பணியை மேற்கொள்ள முடியாது.
6. ரேஷன் காடுகள் மற்றும் வாக்காளர் அடையாள அட்டைகள் போன்ற பொதுவான ஆவணங்களால் குறிப்பிடப்படவில்லை. ஆதார் வெறும் அடையாள ஆவணம் தான் என்றும், குடியுரிமையை நிரூபிக்கும் ஆவணம் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பல மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்று எதிர்க்கட்சியினர் கூறி வருகின்றனர்.
7. தேர்தல் ஆணையம் பாஜகவின் கைப்பாவையாக செயல்படுகிறது. பாஜகவுக்கு ஆதரவாக சிறுபான்மையினர் மற்றும் ஏழை மக்களின் ஓட்டுரிமையை பறிப்பதற்காக திட்டமிட்டு SIR நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் பாஜக தேர்தலில் வெற்றி பெற முயற்சிக்கிறது
இந்த 7 விஷயங்களை முன்வைத்து தான் திமுக உள்பட பல எதிர்க்கட்சிகள் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த நடவடிக்கையை கடுமையாக எதிர்த்து வருகின்றன. மேலும் அதற்கு எதிராக தீர்மானங்கள் நிறைவேற்றி, நீதிமன்றங்களில் மனுக்கள் செய்து தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றன.












Click it and Unblock the Notifications