அதிமுகவை ஓவர்டேக் செய்கிறதா பாஜக?.. அண்ணாமலை இப்படி சொல்லிட்டாரே.. பரபரக்கும் விவாதம்!
சென்னை: அதிமுகவை பின்னுக்கு தள்ளி பாஜக முன்னேறுவதாக மக்கள் கருதுகிறார்கள் என பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இனியாவது அதிமுக விழித்துக் கொள்ளுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
வாஜ்பாய் பிரதமராக இருந்த போது பாஜகவுடன் கூட்டணி வைத்து ஒரு ஆண்டுக்குள் அதை முறித்துக் கொண்டதோடு சரி. அதன் பிறகு ஜெயலலிதா உயிருடன் இருந்த வரை பாஜகவுடன் கூட்டணி வைக்கவே இல்லை. அவரது காலத்திற்கு பிறகு அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக உள்ள ஓபிஎஸ்ஸும் இணை ஒருங்கிணைப்பாளராக உள்ள ஈபிஎஸ்ஸும் இணைந்து பாஜகவுடன் இணக்கமாகவே செயல்பட்டு வந்தனர்.
இந்த நிலையில் கடந்த 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின் போது பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்தது. இது எதிர்க்கட்சியினரின் விமர்சனத்திற்குள்ளானது. பின்னர் 2021 சட்டசபை தேர்தலிலும் அதிமுகவுடன் பாஜக கூட்டணி வைத்தது. அதில் அதிமுக ஆட்சியை இழந்தது. நீட் தேர்வு, 8 வழிச்சாலை, ஹைட்ரோகார்பன் திட்டம், பெட்ரோல் டீசல் விலை உயர்வு, மீனவர்கள் பிரச்சினையில் மத்திய பாஜக அரசு மீதும் அதனுடன் கூட்டணி வைத்துள்ள அதிமுக மீது தமிழக மக்கள் கடுங்கோபத்தில் இருக்கிறார்கள்.

நாடாளுமன்றத் தேர்தல்
இதன் வெளிப்பாட்டின் காரணமாகத்தான் நாடாளுமன்றத் தேர்தலில் இரு கட்சிகளும் கடும் தோல்வியை சந்தித்தன. இந்த நிலையில் அதிமுக ஆட்சியை இழந்ததற்கு பாஜகவுடனான கூட்டணிதான் காரணம் என முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் வெளிப்படையாக விமர்சனம் செய்திருந்தார். இதற்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்திருந்தது.

கொங்கு மண்டலம்
எனினும் அதிமுகவுக்கு இருக்கும் கொங்கு மண்டல செல்வாக்கை வைத்து அவர்களுடன் பயணித்து 4 எம்எல்ஏக்களை பெற்றது பாஜக. உள்ளாட்சி தேர்தலிலும் அதிமுக, பாஜகவுக்கு அடிதான் விழுந்தது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பாஜக தலைவர்கள் அதிமுகவை விமர்சித்து பேசி வருகிறார்கள். அந்த வகையில் ஸ்ரீரங்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக தலைவர் அண்ணாமலையோ, அதிமுக ஆட்சியில் 100 நாள் வேலை திட்டத்தில் ரூ 246 கோடி ஊழல் நடந்துள்ளதாக பகீர் குற்றச்சாட்டை முன் வைத்திருந்தார்.

குற்றச்சாட்டு
கூட்டணி கட்சி என்றும் பாராமல் பாஜக தலைவர் இத்தகைய குற்றச்சாட்டை முன் வைத்தது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டன. அதாவது அதிமுகவில் தலைவர்களுக்கிடையே ஒற்றுமை இல்லாமல் இருப்பது, சசிகலா அதிமுகவை கைப்பற்றினால் அக்கட்சிக்கு இருக்கும் கொஞ்ச நஞ்ச மதிப்பும் போய்விடும் என பாஜக கருதுகிறது. மேலும் சசிகலா ஊழல் குற்றச்சாட்டில் சிறை தண்டனை அனுபவித்ததால் அவர் தலைமையிலான அதிமுகவுடன் பயணிக்க பாஜக விரும்பவில்லை என கூறப்படுகிறது.
Recommended Video

வலிமை
புதுவையில் வலிமையாக இருந்த காங்கிரஸ் கட்சியை ஓரங்கட்டிவிட்டு என் ஆர் காங்கிரஸுடன் இணைந்து பாஜக கூட்டணி ஆட்சியை பிடித்தது. அது போல் தமிழகத்திலும் 50 ஆண்டுகளாக அதிமுக வெர்சஸ் திமுக என இருந்ததை பாஜக வெர்சஸ் திமுக என மாற்றும் அசைன்மென்ட் பாஜக தலைவர் அண்ணாமலைக்கு கொடுக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. இதை கருத்தில் கொண்டு அதிமுகவுடன் கூட்டணியை முறித்து கொள்ள இது போன்ற குற்றச்சாட்டுகளை பாஜக முன் வைத்து வருவதாகவும் சொல்லப்படுகிறது.

அண்ணாமலை
இந்த நிலையில் பாஜக தலைவர் அண்ணாமலை "எதிர்க்கட்சியாக இருக்கும் அதிமுகவை பின்னுக்கு தள்ளி பாஜக முன்னேறுகிறது என்பது மக்களுடைய கருத்து. எம்எல்ஏக்கள், முன்னாள் அமைச்சர்கள் எல்லோரும் சேர்ந்து எங்களுடைய பணியை செய்கிறோம் என அவர் தெரிவித்துள்ளார். இதன் மூலம் தனக்கு கொடுக்கப்பட்ட அசைன்மென்ட்டை தனது வாயாலேயே பாஜக தலைவர் அண்ணாமலை வெளிப்படுத்திவிட்டதாகவே அரசியல் நிபுணர்கள் கூறுகிறார்கள். எனவே அதிமுகவும் பாஜகவும் இனி வரும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல், 2024 நாடாளுமன்றத் தேர்தல், 2026 சட்டசபை தேர்தல்களில் கூட்டணி வைக்காது என்றே கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications