ஸ்டாலினுக்கு அப்போலாவில் சிகிச்சை ஏன்? அரசு மருத்துவமனைக்கு போகாத காரணம் இதுதான்! மா.சு விளக்கம்
சென்னை: முதல்வர் ஸ்டாலின் அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றது ஏன் என்ற தமிழிசையின் கேள்விக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சரின் மனைவி மற்றும் பிரதமரின் சகோதரர் கூட தமிழ்நாட்டின் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றதாகக் கூறிய அவர், உயர் பொறுப்புகளில் இருப்பவர்கள் அரசு மருத்துவமனைக்குச் சென்றால், அங்குப் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் என்றும் விளக்கம் கொடுத்துள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் ஜூலை 21ஆம் தேதி நடைப்பயிற்சியின் போது ஏற்பட்ட தலைச்சுற்றல் காரணமாக அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதன்பின் மருத்துவமனையில் இருந்தே அரசுப் பணிகளில் ஈடுபட்டு வந்த முதல்வர் ஸ்டாலின், உங்களுடன் ஸ்டாலின் திட்டப் பணிகளையும் ஆய்வு செய்தார். அதேபோல் ஓரணியில் தமிழ்நாடு குறித்தும் திமுக நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.

இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் முழுமையாகக் குணமடைந்த நிலையில், அவர் அப்போலோ மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். 7 நாட்களுக்குப் பின் வீடு திரும்பிய அவரை திமுக தொண்டர்கள் சாலையோரம் நின்று வரவேற்றனர். 3 நாட்களுக்குப் பின் முதல்வர் ஸ்டாலின் வழக்கமான பணிகளை மேற்கொள்ளலாம் என்று அப்போலோ மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதைத் தமிழக பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை செளந்தரராஜன் விமர்சித்திருந்தார். தமிழ்நாட்டில் முதலமைச்சர் ஸ்டாலின் உட்பட நம்பிக்கையுடன் சென்று சிகிச்சை பெறும் அளவிற்கு அரசு மருத்துவமனைகள் இல்லையே என்பதுதான் எனது ஆதங்கம் என்று கூறி இருக்கிறார்.
அதுமட்டுமல்லாமல், கோடீஸ்வரர்களுக்கு கிடைக்கும் சிகிச்சை சாமானியனுக்கும் கிடைக்க வேண்டும். எல்லோர் உடல் நிலையும் ஒன்றுதான் எல்லோரின் இதயமும் தன் குடும்பத்திற்காகத் தான் அடித்துக் கொண்டிருக்கிறது. ஆனால் ஏழையின் இதயத்திற்குக் கிடைக்க வேண்டிய பாதுகாப்பு அரசாங்க மருத்துவமனையில் கிடைக்கவில்லையே என்பதுதான் எனது வேதனை.
அதை மேம்படுத்த வேண்டும் என்பதற்காகவே முதல்வரும் செல்லும் அளவிற்கு அரசாங்க மருத்துவமனைகள் இருக்க வேண்டும். அப்போலோ தரத்திற்கு அரசாங்க மருத்துவமனைகளும் இருக்க வேண்டும் என்று கூறி இருந்தார். இந்த நிலையில் தமிழிசை செளந்தரராஜனின் கேள்விக்கு, அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில் அளித்துள்ளார்.
இதுதொடர்பாக மா.சுப்பிரமணியன் பேசுகையில், தமிழிசை செளந்தரராஜன் இரு மாநிலங்களில் ஆளுநராக இருந்தவர். தமிழிசைக்கு அரசு மருத்துவமனை எப்படி செயல்படும் என்று நன்றாகவே தெரியும். அண்மையில் பாதுகாப்புத் துறை அமைச்சரின் மனைவி கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தான் சிகிச்சை பெற்றார். பிரதமரின் சகோதரர் கூட தனியார் மருத்துவமனையில் தமிழகத்தில் சிகிச்சை பெற்றார்.
உயர் பொறுப்புகளில் இருப்பவர்கள் அரசு மருத்துவமனைக்குச் சென்றால், அங்கு பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும். அதனால்தான் முதல்வர் தனியார் மருத்துவமனைக்குச் சென்றார். அரசு மருத்துவமனைகளின் தரம் மிகச்சிறப்பாக இருக்கிறது. அரசு மருத்துவ சேவை, தனியார் மருத்துவ சேவை எனப் பிரித்து பார்க்கக் கூடாது. அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications