ராகுல் காந்தியை முதலமைச்சர் விஜய் சந்திக்காதது ஏன்? பிரவீன் சக்கரவர்த்தி கொடுத்த விளக்கம்!
சென்னை: முதலமைச்சர் விஜய் 2 நாட்கள் பயணமாக டெல்லி சென்றிருந்தார். அங்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த சந்திப்பு நடக்கவில்லை. இந்நிலையில் இதற்கான காரணம் குறித்து காங்கிரஸ் நிர்வாகி பிரவீன் சக்கரவர்த்தி விளக்கம் கொடுத்திருக்கிறார்.
முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்ட பின்னர் விஜய், 2 நாட்கள் பயணமாக புதன்கிழமை டெல்லி சென்றிருந்தார். அங்கு குடியரசுத் தலைவர், பிரதமர், உள்துறை அமைச்சர், நிதியமைச்சர் மற்றும் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ஆகியோரை சந்திப்பதுதான் திட்டம்.

பிரதமர் உடனான சந்திப்பு
திட்டமிட்டபடி பிரதமர் நரேந்திர மோடியை விஜய் சந்தித்திருந்தார். ஆனால் இந்த சந்திப்பு விவாதங்களை கிளப்பியிருந்தது. இதற்கு முன்னர் தமிழ்நாட்டின் முதலமைச்சர்கள் எல்லாம் பிரதமரை சந்தித்தபோது குறைந்தது 30 நிமிடங்களாவது பேசியிருந்தனர். ஆனால், விஜய் வெறும் 10 நிமிடங்கள் மட்டுமே பிரதமரை சந்தித்து பேசியிருந்தார். இவ்வளவு குறைவான நேரத்தில் பிரதமரிடம் தமிழ்நாட்டின் கோரிக்கைகளை எப்படி எடுத்து சொல்லியிருப்பார் என்று? பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பியிருந்தனர்.
இது ஒருபுறம் எனில், மறுபுறம் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க நேரம் கேட்டிருந்தும், நேரம் கிடைக்காததால் அமித்ஷாவை சந்திக்கவில்லை. அதேநேரம் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து தமிழகத்தின் கோரிக்கைகளை வைத்திருந்தார் விஜய்.
விஜய் பேனர்
சரி ஆளும் கட்சி தரப்பில் எல்லா சந்திப்பும் முடிந்துவிட்டது, இதனையடுத்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி உள்ளிட்டோரை சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதற்காக சோனியா காந்தியின் வீட்டின் முன்பு ராகுல் காந்தியும்-விஜய்யும் உள்ள பேனர் வைக்கப்பட்டிருந்தது.
ராகுல் காந்தியை சந்திக்காத விஜய்
ஆனால், விஜய்யின் வண்டி இந்த பக்கம் திரும்பாமல் நேராக விமான நிலையம் நோக்கி சென்றது. விஜய் வேறு யாரையும் சந்திக்காமல் நேராக சென்னை வந்து சேர்ந்தார். தமிழகத்தில் 60 ஆண்டுகளுக்கு பிறகு காங்கிரஸ் அமைச்சரவையில் இடம் பெற்றிருக்கிறது. இதற்கு காரணம் விஜய்தான். ஆனால், அவர் ராகுல் காந்தியை சந்திக்காமல் சென்றது அரசியல் களத்தில் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது.
காரணம் இதுதான்
இந்நிலையில் இதற்கான காரணம் குறித்து காங்கிரஸ் நிர்வாகி பிரவீன் சக்கரவர்த்தி விளக்கம் கொடுத்திருக்கிறார். செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது, "டெல்லி சென்ற முதலமைச்சர் விஜய், ராகுல் காந்தியை சந்திப்பதாக திட்டம் இல்லை. அப்படியான சந்திப்பு குறித்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் நாங்கள் கொடுக்கவில்லை. அப்புறம் ஏன் இவ்வளவு விவாதங்கள் என்று தெரியவில்லை.
நேற்று ராகுல் காந்திக்கு நேரம் இல்லை. அவர் வேறு வேலைகளில் இருந்ததால் விஜய்க்கு நேரம் ஒதுக்க முடியவில்லை. எனவேதான் இந்த சந்திப்பு நடக்கவில்லை. அடுத்தமுறை விஜய் டெல்லிக்கு வரும்போது இருவரும் சந்திப்பார்கள்" என்று கூறியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications