டக் அவுட் ஆவதற்கு சிங்கிள்ஸாவது எடுக்கலாமே... ராகுல் அட்வைஸ்.. மநீமவுக்கு காங். செல்லாதது ஏன்?
சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சி அழைப்பு விடுத்த போதிலும் காங்கிரஸ் அந்த கூட்டணிக்கு செல்லாதது ஏன்? என்ற கேள்வி எழுந்துள்ளது.
திமுக கூட்டணியில் அங்கம் வகித்து வரும் காங்கிரஸ் கட்சி 30 தொகுதிகளை கேட்டது. ஆனால் திமுகவோ 15 முதல் 20 வரைதான் தர முடியும் என்றது. பழம்பெரும் கட்சியான காங்கிரஸ் பல முறை அண்ணா அறிவாலயத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தியது.
காங்கிரஸ் கேட்ட தொகுதிகளுக்கு திமுகவும் இறங்கி வரவில்லை. திமுக கொடுக்கும் தொகுதிகளை ஏற்க காங்கிரஸும் இறங்கி வராத நிலை இருந்தது. இந்த சூழலில் காங்கிரஸ் கட்சி என்ன செய்யும் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.

காங்கிரஸ்
அப்போது மக்கள் நீதி மய்யத்தில் இணைந்த பழ கருப்பையா, 10 15 சீட்டுக்கெல்லாம் போராடுவது காங்கிரஸ் கட்சிக்கு அழகல்ல. எல்லாத்தையும் தூக்கி போட்டுட்டு மக்கள் நீதி மய்யம் கூட்டணிக்கு வாங்க என பகிரங்கமாகவே அழைப்பு விடுத்தார். இதனால் திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் வெளியேறும் என்றே எதிர்பார்க்கப்பட்டது.

நேரடி அழைப்பு
அது போல் மக்கள் நீதி மய்ய நிர்வாகி குமரவேலும் காங்கிரஸ் கட்சி எங்கள் கூட்டணிக்கு வந்தால் நல்லது என்று அழைப்பு விடுத்தார். ஆனால் இவற்றையெல்லாம் காதில் போட்டுக் கொள்ளாத காங்கிரஸ் கட்சி நேற்றைய தினம் திமுகவுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் சுமூகம் எட்டப்பட்டு 25 தொகுதிகளையும் கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதியையும் பெற்றது.

காங்கிரஸுக்கு கொடுத்த தொகுதிகள்
மக்கள் நீதி மய்யம் கட்சியுடன் கூட்டணிக்கு சென்றிருந்தால் நிச்சயம் அவர்கள் திமுகவிடம் கேட்ட தொகுதிகளைக் காட்டிலும் அதிகமான தொகுதிகளே கிடைத்திருக்கும். ஆனால் அவர்கள் செல்லாதது ஏன் என்பது குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன. காங்கிரஸ் கட்சிக்கு கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 52.76 சதவீதம் பெற்றது. அந்த தேர்தலில் 9 தொகுதிகளில் போட்டியிட்டு 8 தொகுதிகளில் காங்கிரஸ் வென்றது.

41 இடங்களில் 8 தொகுதிகளில் போட்டி
கடந்த 2016ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் 41 இடங்களில் காங்கிரஸ் கட்சி போட்டியிட்டது. 8 தொகுதிகளில் மட்டுமே வென்றது. அப்போது காங்கிரஸ் கட்சியின் வாக்கு சதவீதம் 6.47 சதவீதம் ஆகும். சட்டசபைத் தேர்தலாக இருந்தாலும் சரி, நாடாளுமன்றத் தேர்தலாக இருந்தாலும் தமிழகத்திலிருந்து காங்கிரஸ் சார்பில் மக்கள் பிரதிநிதிகள் வென்று சட்டசபைக்கும் நாடாளுமன்றத்திற்கும் சென்று வந்தனர்.

சரிவை சந்திக்க
ஒரு வேளை மக்கள் நீதி மய்யம் கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு வெற்றி கிடைக்காவிட்டால் தமிழகத்தில் காங்கிரஸ் பெற்ற வாக்கு சதவீதம் குறையத் தொடங்கும். இதை ராகுல் காந்தி விரும்பவில்லை. மேலும் மற்ற மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி தேய்ந்து வரும் நிலையில் தமிழகத்திலும் அக்கட்சி சரிவை சந்திக்க சோனியாவும் விரும்பவில்லை.

ராகுலுக்கு மனமில்லை
குறிப்பாக சொல்ல போனால் திமுக கூட்டணியை விட்டு செல்ல ராகுல் காந்திக்கு மனமில்லை. எனவேதான் கேட்டது கிடைக்காவிட்டால் பாஜகவைவிட அதிக தொகுதிகளையாவது கேட்டு பெறுங்கள் என டெல்லி காங்கிரஸ் தமிழக காங்கிரஸுக்கு அறிவுறுத்தியதாக சொல்லப்படுகிறது. இதனால்தான் மக்கள் நீதி மய்யம் கட்சி நேரடியாக அழைத்தும் காங்கிரஸ் அக்கூட்டணிக்கு செல்லவில்லை என கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications