ஸ்டாலினை சந்தித்த பழைய பாஜக தலை.. பகிரப்பட்ட முக்கிய "மெசேஜ்".. அப்பாயிண்ட்மெண்ட் கேட்ட அடுத்த தலை
சென்னை: முரசொலி செல்வம் மறைவைத் தொடர்ந்து முதல்வர் ஸ்டாலினிடம் துக்கம் விசாரிப்பதற்காக சென்னைக்கு வந்திருந்தார் மகாராஸ்ட்ரா மாநில கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன். முரசொலி செல்வம் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்க பல தலைவர்கள் வந்திருந்தனர்.
இவரும் சட்டமன்ற பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனும் நல்ல நண்பர்கள். நயினாரை அழைத்துக் கொண்டு முதல்வர் ஸ்டாலினை சந்தித்து துயரம் பகிர்ந்தார் ராதாகிருஷ்ணன்.

முரசொலி செல்வத்தின் படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். செல்வத்தின் மறைவுக்காக முதல்வருக்கு ஆறுதல் சொன்னார்கள். அப்போது, திமுக அரசு நடைமுறைப்படுத்தி வரும் மக்கள் நலத் திட்டங்கள் பற்றி சிலாகித்துப் பேசியிருக்கிறார் ராதாகிருஷ்ணன். மேலும், ஜார்கண்ட் மாநிலத்தில் கவர்னராக இருந்தபோது தமிழகத்தில் நடக்கும் நல்லத்திட்டங்கள் பலவற்றை அந்த மாநில அரசிடம் சுட்டிக்காட்டி மகிழ்ந்திருக்கிறேன் என்று சொல்லி யிருக்கிறார் ராதாகிருஷ்ணன்.
தமிழக பாஜகவின் முன்னாள் தலைவரான ராதாகிருஷ்ணன் கடந்த 2023-ல் ஜார்கண்ட் கவர்னராக நியமிக்கப்பட்டார்; பிறகு, தெலுங்கா மற்றும் புதுச்சேரியின் கவர்னர் பொறுப்பு கூடுதலாக கொடுக்கப்பட்டது. மூன்று மாநில அரசின் நிர்வாகத்தை திறம்பட கவனித்ததால், கடந்த ஜூலையில், பெரிய மாநிலங்களில் ஒன்றான மகாராஸ்ட்ராவின் கவர்னராக இடமாற்றம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சந்திப்பின்போது, நயினார் தொடர்பான சில விசயங்களும் பகிரப்பட்டிருக்கிறது என்று சொல்கின்றனர்.

நயினாரின் தேர்தல் வெற்றிக்காக 3 கோடி கடத்தப்பட்டதான வழக்கு சி.பி.சி.ஐ.டி. விசாரணையில் இருந்து வருகிறது என்பது கவனிக்கத்தக்கது என்றும் பாஜக தரப்பில் இப்போது பேசப்பட்டு வருகிறது. இந்த நிலையில், முதல்வரை தனிப்பட்ட முறையில் சந்திக்க நயினார் அப்பாயிண்ட்மெண்ட் கேட்டிருப்பதாகவும் செய்திகள் கிடைக்கின்றன.
இரங்கல்: முன்னதாக முரசொலி செல்வத்தின் இறப்பு குறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட போஸ்டில், சிறுவயது முதலே எனக்கு அண்ணனாக - வழிகாட்டியாக, இயக்கப் பணிகளில் ஆலோசனைகள் வழங்கி, நெருக்கடி நேரங்களில் தெளிவான தீர்வுகளை முன்வைத்து, கழகத்துடனான என் வளர்ச்சியில் தோளோடு தோள் நின்றவர், என் பேரன்பிற்குரிய அண்ணன் முரசொலி செல்வம்.
தலைவர் கலைஞர் நம்மை விட்டுப் பிரிந்த பிறகு, நான் சாய்வதற்குக் கிடைத்த அந்தக் கடைசித் தோளை - கொள்கைத் தூணை இன்று இழந்து நிற்கிறேன்., என்று கலக்கத்துடன் குறிப்பிட்டு இருந்தார். இந்த நிலையில்தான் அவரின் உடலை பார்த்த ஸ்டாலின் கதறி கண்ணீர்விட்டார்.
முன்னதாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், எங்கே போனீங்க... செல்வம் மாமா! என்று வெளியிட்ட இரங்கலில், திராவிட இயக்கத்தின் மூத்த முன்னோடி, நம் 'முரசொலி' செல்வம் மாமா மறைந்தார் என்ற செய்தி காலையிலேயே இடியாக இறங்கியது. இன்னமும் அந்த அதிர்ச்சியிலிருந்து மீள முடியாமல் தவிக்கின்றேன். வழக்கம் போல, முரசொலியில் கட்டுரை எழுதுவதற்காக குறிப்புகளைச் சேகரித்து வைத்துவிட்டு, உறங்கச் சென்றவரை இயற்கை எடுத்துக் கொண்டிருக்கிறது.
கலைஞர் அவர்களின் கொள்கை வார்ப்பு. கழகத் தலைவர் - மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுடைய வழிகாட்டி. செல்வி அத்தையின் பாசத்துக்குரிய கணவர். எங்களுக்கெல்லாம் கொள்கை உணர்வூட்டிய பண்பாளர். 'முரசொலி' செல்வம் மாமாவின் மரணம், கலைஞர் குடும்பத்துக்கு மட்டுமல்ல, திராவிட முன்னேற்றக் கழகத்துக்கே பேரிழப்பு. இந்த ஆற்ற முடியாத துயரில், தவிக்கும் கோடிக்கணக்கானத் தொண்டர்களில் ஒருவனாக உறைந்து நிற்கிறேன் என்று கூறி இருந்தார்.












Click it and Unblock the Notifications