எடப்பாடி பழனிசாமியா இப்படி?.. இதென்ன லிஸ்ட்லயே இல்லியே.. திமுக வெற்றிக்கு மறைமுக உதவி?
எடப்பாடி பழனிசாமி திடீரென அனைத்து கட்சி கூட்டத்தை புறக்கணிக்க காரணம் என்ன
சென்னை: விஜயபாஸ்கருக்கு இருக்கும் தைரியம், எடப்பாடிக்கு எப்படி இல்லாமல் போனது, ஓபிஎஸ் அவ்வளவு சொல்லியும் எடப்பாடி பிடிவாதம் பிடிக்க என்ன காரணம்? என்பன போன்ற பல கேள்விகள்தான் அதிமுக கூடாரத்துக்கு ஓடிக் கொண்டிருக்கிறது.
நீட் தேர்வு விலக்கு மசோதாவை கவர்னர் திருப்பியனுப்பியதை அடுத்து அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி விவாதித்தார் முதல்வர் ஸ்டாலின்.
இந்த கூட்டத்தை பாஜக புறக்கணித்தது.. பாஜக புறக்கணிக்கும் என்பது அனைவருக்குமே தெரிந்த விஷயம்தான்.. இதில் ஆச்சரியமோ, அதிருப்தியோ, எதுவுமே இல்லை..

எடப்பாடி பழனிசாமி
ஆனால், நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு வேண்டும் என்பதே அதிமுகவின் நிலைப்பாடு என்று ஓபிஎஸ்ஸூம், எடப்பாடியும் இத்தனை வருஷமாக திரும்ப திரும்ப சொல்லி கொண்டே இருந்துவிட்டு, திடீரென கூட்டத்தை புறக்கணித்ததுதான் தமிழகத்துக்கே அதிர்ச்சியை தந்தது.. கிட்டத்தட்ட 5 மாதங்கள் கழித்து ஆளுநர் திருப்பி அனுப்பிய பிறகு நடக்கும் அனைத்துக் கட்சி கூட்டத்தில், முதலில் பங்கேற்றிருக்க வேண்டியதே அதிமுகதான்.. நாங்கள்தான் மிகப்பெரிய பொறுப்பான எதிர்க்கட்சி என்று சொல்லிக் கொண்டிருக்கும் அதிமுக, இந்த கூட்டத்தை புறக்கணிக்க என்ன காரணம் என்பதே அனைவர் மனதிலும் எழுந்தது.

விஜயபாஸ்கர்
கடந்த மாதம் நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் இந்த முறையும் கலந்து கொள்வதற்காக முன்தினமே சென்னைக்கும் வந்துவிட்டாராம்.. அப்படி இருந்தும் கடைசி நேரத்தில், அதிமுக முடிவெடுக்க காரணம், ஓபிஎஸ்தான் என்று பலரும் அசைபோட தொடங்கிவிட்டனர்.. ஒருவேளை பாஜக மேலிடத்தில் இருந்து அழுத்தம் எதேனும் வந்திருக்குமோ, அதனால்தான் ஓபிஎஸ் இப்படி செய்கிறாரோ என்ற விமர்சனங்களும் எழுந்தன.

எடப்பாடி பிடிவாதம்
ஆனால், நடந்த விஷயமே வேறயாம்.. கூட்டத்தில் ஓபிஎஸ்ஸே கலந்து கொள்வதாக இருந்திருக்கிறது. இறுதியில் இப்படி ஒரு குண்டை தூக்கி போட்டதே எடப்பாடிதானாம்.. ஓபிஎஸ்ஸை தொடர்புகொண்ட எடப்பாடி, "பாஜக புறக்கணிக்கிறது. நாமும் புறக்கணிப்போம். நீட் விசயத்தில் பாஜகவோடு ஒத்து போவோம். அதுதான் நமக்கு நல்லது" என சொல்லியுள்ளார்.

மோசடி
ஆனால் இதனை ஏற்க மறுத்த ஓபிஎஸ், "நீட் விசயத்தில் தமிழக அரசு எடுக்கும் முடிவுகளுக்கு ஒத்துழைப்போம் என ஏற்கனவே நாம் சொல்லியுள்ள நிலையில், இந்த கூட்டத்தை நாம் புறக்கணித்தால் அதிமுகவுக்குத்தான் கெட்டப் பெயர் வரும். நீட் விசயத்தில் திமுக நம்பிக்கை மோசடி செய்து விட்டது என மாணவ சமூகம் திமுக மீது கோபமாகவும் அதிருப்தியாகவும் இருக்கும் சூழலில் கூட்டத்தை நாம் புறக்கணித்தால் அது திமுகவுக்கு சாதகமாகிவிடும். கூட்டத்தில் கலந்து கொண்டு நீட் விசயத்தில் திமுக செய்யும் அரசியலை பதிவு செய்வோம். தவிர, பாஜகவின் முடிவுக்கேற்ப நாம் ஏன் முடிவு செய்ய வேண்டும்?' என கறாராக பேசினார்.

திமுகவுக்கு பிளஸ்
ஆனால், என்ன சொல்லியும் எடப்பாடி ஏற்கவில்லையாம்.. கூட்டத்தை புறக்கணிப்போம் என அழுத்தமாக வலியுறுத்தியதால் கடைசியில் ஒப்புக்கொண்டுவிட்டாராம் ஓபிஎஸ் என்று அதிமுக தலைமைக்கழக வட்டாரங்கள் கூறுகின்றன.. எப்படியோ, அனைத்துக் கட்சி கூட்டம் புறக்கணிப்பு என்ற முடிவை அதிமுக எடுத்தது, திமுகவுக்கான சாதகமான சூழலையே ஏற்படுத்தி தந்து கொண்டிருக்கிறது என்பதே உண்மை..!












Click it and Unblock the Notifications