சென்னையில் பல ரிசார்ட்கள் இருக்க அதிமுக எம்எல்ஏக்கள் புதுச்சேரி போனது ஏன்? எடப்பாடி பிளான் பின்னணி
சென்னை: தமிழத்தில் ஆட்சியை பிடிக்க தேவையான மெஜாரிட்டி இன்றி தவெகவின் விஜய் தவித்து வருகிறார். இதற்கிடையே தவெகவினர் குதிரை பேரத்தில் ஈடுபடலாம் என்ற அச்சத்தில் அதிமுக தனது எம்எல்ஏக்களை புதுச்சேரி ரெசார்ட்டில் தங்க வைத்துள்ளது. கடந்த 2017 ல் அதிமுக எம்எல்ஏக்கள் கூவத்தூர் ரெசார்ட்டில் பாதுகாக்கப்பட்ட நிலையில் தற்போது புதுச்சேரியில் உள்ளனர். சென்னை உள்பட தமிழகத்தில் பல ரெசார்ட் இருக்க எடப்பாடி பழனிச்சாமி தனது எம்எல்ஏக்களை ஏன் புதுச்சேரி கொண்டு சென்றது? என்பது பற்றிய பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.
தமிழகத்தில் கடந்த 60 ஆண்டுகளாக மாறி மாறி ஆட்சியை பிடித்து வந்த திமுக -அதிமுக தற்போது பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இருகட்சிகளையும் வீழ்த்தி விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் முதல் தேர்தலிலேயே 108 தொகுதிகளை வென்று தனிப்பெரும் கட்சியாக மாறி உள்ளது. ஆனால் தவெகவிற்கு மெஜாரிட்டி கிடைக்கவில்லை.

இந்நிலையில் தான் எப்படியாவது மெஜாரிட்டிககு தேவையான 118 எம்எல்ஏக்களின் ஆதரவை பெறும் முயற்சியில் விஜய் இறங்கி உள்ளார். காங்கிரஸ் கட்சியின் 5 எம்எல்ஏக்களின் ஆதரவை பெற்றுள்ள விஜய், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விசிக உள்ளிட்ட 3 கட்சிகளை சேர்ந்த 6 எம்எல்ஏக்களின் ஆதரவை பெறும் முயற்சியில் தீவிரம் காட்டி வருகிறார்.
புதுச்சேரி ரெசார்ட்டில் அதிமுக எம்எல்ஏக்கள்
இதனால் விஜய் முதல்வராக பதவியேற்பது தள்ளி போய் உள்ளது. மெஜாரிட்டிக்கான நம்பரை காட்டினால் தான் ஆட்சி அமைக்க அழைப்பேன் என்று ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் உறுதியாக சொல்லிவிடடார். இது விஜய்க்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. இதற்கிடையே தான் அதிமுகவின் எம்எல்ஏக்கள் புதுச்சேரி ரெசார்ட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். நேற்று எடப்பாடி பழனிச்சாமி அவர்களை சந்தித்து ஆலோசனை நடத்தி சென்னை திரும்பினர்.
இந்நிலையில் தான் பலருக்கும் ஒரு சந்தேகம் வருகிறது. அதாவது சென்னை உள்பட தமிழ்நாட்டில் பல இடங்களில் ரெசார்ட்டுகள் உள்ளன. ஏன் கடநத 2017 ல் அதிமுகவில் ஏற்பட்ட குழப்பத்தின்போது எம்எல்ஏக்கள் கூவத்தூரில் உள்ள ரெசார்ட்டில் தானே தங்க வைக்கப்பட்டனர்? ஆனால் இப்போது எடப்பாடி பழனிச்சாமி ஏன் தமிழகத்தை தாண்டி புதுச்சேரி ரெசார்ட்டில் எம்எல்ஏக்களை தங்கவைத்துள்ளார்? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதன் பின்னணியில் முக்கிய விஷயம் உள்ளது.
2017 ல் கூவத்தூர் ஏன்?
இதற்கு முன்பு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவை தொடர்ந்து 2017 ல் அதிமுகவில் முதல்வர் பதவியை ஓ பன்னீர் செல்வம் ராஜினாமா செய்தார். அடுத்த முதல்வர் யார்? என்ற கேள்வி எழுந்தது. அந்த சமயத்தில் சசிகலா ஆதரவில் எடப்பாடி பழனிச்சாமி முதல்வரானார். இந்த பிரச்சனையின்போது சசிகலா ஏற்பாட்டில் அதிமுக எம்எல்ஏக்கள் சென்னை அருகே கூவத்தூரில் உள்ள ரெசார்ட்டில் தங்க வைக்கப்பட்டனர். 120க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் அங்கு அழைத்து செல்லப்பட்டனர்.
ஆனால் தற்போதும் கூவத்தூர் உள்பட தமிழகத்தின் பல இடங்களில் சொகுசு வசதிகளுடன் ரெசார்ட்டுகள் உள்ளன. ஆனால் எடப்பாடி பழனிச்சாமி தனது எம்எல்ஏக்களை புதுச்சேரி ரெசார்ட்டுக்கு அனுப்பி இருப்பது ஏன்? என்பது பற்றிய முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளன.
அதாவது ரெசார்ட்டில் எம்எல்ஏக்கள் பாதுகாக்கப்படுவதே குதிரை பேரத்தை தடுப்பதற்காக தான். கடந்த 2017 ல் அதிமுக தான் தமிழகத்தில் மெஜாரிட்டியுடன் இருந்தது. மேலும் அப்போது அந்த கட்சியில் உள்கட்சி பிரச்சனை தான் நிலவியது. ஜெயலலிதா மறைவால் சசிகலாவின் கை ஓங்கி இருந்தது. இதனால் சசிகலாவை தாண்டி போலீஸ் அதிகாரிகள், எம்எல்ஏக்கள் யாரும் எதுவும் செய்ய முடியாது. ஏனென்றால் அரசே அவர்களின் கையில் தான் இருந்தது. இதனால் அப்போது சென்னை கூவத்தூரில் தங்க வைக்கப்பட்டனர்.
இப்போது புதுச்சேரி ஏன்?
ஆனால் இப்போது தமிழகத்தில் நிலைமை வேறாக உள்ளது. தனி மெஜாரிட்டி கிடைக்காவிட்டாலும் கூட 108 தொகுதிகளில் வென்று தனி பெரும் கட்சியாக தவெக உருவாகி உள்ளது. இதனால் விஜய் தான் அடுத்த முதல்வராக அதிக வாய்ப்புள்ளது. இதனால் அதிமுகவின் எம்எல்ஏக்களை சென்னை உள்பட பிற ரெசார்ட்டுகளில் தங்க வைக்கும்போது அது தவெகவிற்கு சாதகமாக மாறலாம். அவர்கள் அதிகார பலத்தை பயன்படுத்த
வாய்ப்புள்ளது. குறிப்பாக அதிமுகவின் எம்எல்ஏக்களை தங்களின் ஆதரவுக்கு இழுத்து செல்லலாம். அதிமுகவில் செயல்பட்டு வந்த செங்கோட்டையன், குப கிருஷ்ணன், ஜேசிடி பிரபாகர் உள்பட பலர் தவெகவில் உள்ளனர்.
இதனால் அதிமுகவின் எம்எல்ஏக்களை பாதுகாக்க எடப்பாடி பழனிச்சாமி புதுச்சேரிக்கு அழைத்து சென்றுள்ளார். அதுமட்டுமின்றி அங்கு அதிமுகவின் கூட்டணி தான் ஆட்சியை பிடிக்க உள்ளது. அங்கு ரங்கசாமியின் என்ஆர் காங்கிரஸ் + பாஜக + அதிமுக + லட்சிய ஜனநாயக கட்சி (எல்ஜேகே) கூட்டணி அமைத்து போட்டியிட்டது. மொத்தம் 30 தொகுதிகள் உள்ளன. இதனால் மெஜாரிட்டிக்கு 16 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். இதில் என்ஆர் காங்கிரஸ் 12, பாஜக 4, அதிமுக 1, எல்ஜேகே 1 என்று மொத்தம் 18 தொகுதிகளில் வென்றுள்ளது. இந்த கூட்டணி ஆட்சியமைப்பது உறுதியாகி உள்ள நிலையில் போலீஸ் பாதுகாப்பு உள்பட அனைத்தும் எளிமையாக கிடைக்கும் என்பதால் எடப்பாடி பழனிச்சாமி புதுச்சேரி ரெசார்ட்டில் எம்எல்ஏக்களை தங்க வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications