டெல்லியில் 3 கார்களில் மாறி சென்று அமித் ஷாவை சந்தித்தது ஏன்? எடப்பாடி பழனிசாமி
கள்ளக்குறிச்சி: டெல்லி சென்ற போது உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்க 3 கார்களில் மாறி மாறி சென்றது ஏன் என்ற அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் கொடுத்துள்ளார். 3 கார்களில் மாறி சென்றதில் என்ன தவறு உள்ளது என்று கேள்வி எழுப்பிய எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாட்டின் நலனுக்காகவே அமித் ஷாவை சந்தித்ததாக கூறி இருக்கிறார்.
கடந்த மாதம் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திடீரென டெல்லி சென்று உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தார். டெல்லியில் கட்டப்பட்டுள்ள அதிமுக அலுவலகத்தை பார்க்க சென்றதாக கூறிய எடப்பாடி பழனிசாமி, இரவு நேரத்தில் 3 கார்கள் மாறி மாறி சென்று உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தார்.

3 கார்கள் மாறிய எடப்பாடி பழனிசாமி
டெல்லியில் 3 கார்கள் மாறி உள்துறை அமைச்சர் அமித் ஷாவை எடப்பாடி பழனிசாமி சந்தித்தது ஏன் என்று மக்களிடையே கேள்வி எழுந்தது. இதன்பின் சென்னை வந்த உள்துறை அமைச்சர் அமித் ஷா, அதிமுக - பாஜக கூட்டணியை உறுதி செய்தார். அதிமுக தலைமையில் கூட்டணி என்ற அறிவித்த போதும் கூட, எடப்பாடி பழனிசாமி அந்த செய்தியாளர் சந்திப்பில் எந்த வார்த்தையையும் பேசவில்லை.
திமுக vs அதிமுக
இதனிடையே முதல்வர் மு.க.ஸ்டாலின் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க டெல்லி சென்ற போது, அதிமுக தரப்பில் அமலாக்கத்துறை ரெய்டுக்கு பயந்து டெல்லி செல்வதாக விமர்சிக்கப்பட்டது. இதற்கு திமுக தரப்பில், நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பது தொடர்பாக முறையாக அறிவிப்பை வெளியிட்டுள்ளோம். எடப்பாடி பழனிசாமியை போல் சொந்தக் கட்சியினருக்கே தெரியாமல் 3 கார்கள் மாறி அமித் ஷாவை சந்திக்கவில்லை என்று பதிலடி கொடுக்கப்பட்டது.
எடப்பாடி பழனிசாமி பேட்டி
இந்த நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தில் அதிமுக பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நம்பி பிரயோஜனமில்லை. தமிழ்நாட்டு மக்களுக்கு வர வேண்டிய நிதியை விடுவிக்க வேண்டும் என்று டெல்லி சென்று மனுவாக அளித்தேன். இதன்பின் உடனடியாக சுமார் ரூ.3 ஆயிரம் கோடியை மத்திய அரசு விடுவித்தது.
அமித் ஷாவை சந்தித்தது ஏன்?
உன்னால் பெற முடிந்ததா? முதலமைச்சர் என்று தப்பட்டம் அடித்து கொள்ளும் மு.க.ஸ்டாலினால் பெற முடிந்ததா? சென்னை மெட்ரோ ரயில் அதிமுக ஆட்சியில் அடிக்கல் நாட்டப்பட்டது. அதற்கான நிதியையும் மத்திய அரசு விடுவித்தது. அதிமுக மக்களின் பிரச்சனைகளை பட்டியலிட்டு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் மனுவாக அளித்து, நிதியை விடுவிக்க செய்துள்ளோம்.
3 கார்கள் மாறியது ஏன்?
அதனை விட்டுவிட்டு எடப்பாடி பழனிசாமி 3 கார்களில் சென்றார் என்று சொல்கிறார்கள்.. நான் நடந்துகூட போவேன்.. உங்களை மாதிரி கோடிக் கோடியாக கொள்ளையடித்தா வைத்திருக்கிறேன்.. டெல்லி விமான நிலையத்தில் இறங்கிய பின் தம்பிதுரை காரில் சென்றேன். அவர் என்னை இறக்கிவிட்டுவிட்டு சென்றார். பின் அங்கிருந்து வேறு காரில் ஹோட்டலுக்கு சென்றேன். ஒரு நண்பரை பார்ப்பதற்காக..
நண்பரின் கார்
அதன்பின் நண்பர் ஒருவரின் கார் மூலமாக அமித் ஷாவை சந்திக்க சென்றேன்.. இதில் என்ன கண்டுபிடித்தீர்கள்.. அவர் என்ன பாகிஸ்தானில் உள்ள அமைச்சரா? இந்தியாவின் உள்துறை அமைச்சர் தானே.. திமுகவுக்கு பதிலாக நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக வென்றிருந்தால், அங்கேயே குரல் கொடுத்திருப்போம் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications