+2 ரிசல்ட் வந்ததும்.. மாணவர்களுக்கு சென்ற "அந்த" போன்.. தமிழ்நாடு அரசு எடுத்த ஆக்சன்.. என்ன நடந்தது?
சென்னை: 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியான நிலையில் நேற்று பல்வேறு 12ம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழ்நாடு சுகாதாரத்துறை சார்பாக போன் கால் சென்றுள்ளது.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 8,51,303 மாணவ, மாணவிகள் 12ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதினர். தமிழ்நாட்டில் மட்டும் 8,36,593 மாணவ, மாணவிகள் தேர்வை எழுதினர். இந்த முறை 50 ஆயிரத்திற்கும் அதிகமானோர் மொழித்தேர்வை எழுதவில்லை.
இதையடுத்து விடைத்தாள்கள் திருத்தும் மையங்களுக்கு எடுத்து செல்லப்பட்டு பாதுகாப்பாக திருத்தப்பட்டன.

பின்னர் இறுதி மதிப்பெண்கள் தேர்வுத்துறையின் இணையதளங்களில் நேற்று பதிவேற்றப்பட்டது. www.dge.tn.gov.in, www.tnresults.nic.in, www.dge.tn.nic.in ஆகிய இணைய பக்கங்கள் மூலமாக தேர்வு முடிவுகளை மாணவர்கள் அறிந்துகொள்ளலாம்.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் 12ம் வகுப்பு தேர்வில் தோல்வி அடைந்த மாணவ, மாணவியர் தற்கொலை செய்து கொள்ள கூடாது என்பதற்காக தமிழ்நாடு சுகாதாரத்துறை சார்பாக மாணவ, மாணவியர்களுக்கு போன் சென்றுள்ளது. இவர்களுக்கு தற்கொலை எண்ணத்தை தடுக்கும் விதமாக ஆலோசனை வழங்க இந்த போன் சென்றுள்ளது.
சுகாதாரத் துறை சார்பாக சுமார் 100 பேரை இதற்காக களமிறக்கி உள்ளனர். 104 (மாநில சுகாதார ஹெல்ப்லைன்), 14416 ( உங்களுடைய மனநிலை சேவை அமைப்பு - MANAS) மற்றும் 1100 (முதலமைச்சரின் செல்) சார்பாக இந்த போன் கால்கள் மாணவர்களுக்கு மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
நேற்று தேர்வில் தோல்வி அடைந்த 45 ஆயிரம் பேருக்கு முதல் கட்டமாக இந்த போன் சென்றுள்ளது.
தேர்வில் தோல்வி அடைந்தவர்களுக்கு ஆறுதல்.
அடுத்து அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்று வழிகாட்டுதல்.
அவர்களின் பெற்றோர்களுக்கு ஆலோசனைகளை வழங்கி இந்த போன் காலில் பேசி உள்ளனர்.
தமிழ்நாடு அரசின் இந்த செயல்பாடு பெற்றோர்கள் இடையே பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

12ம் வகுப்பு ரிசல்ட்: 12ம் வகுப்பு தேர்வில் மாணவ, மாணவியர் எடுத்த அதிக மதிப்பெண் உட்பட பல முக்கிய விவரங்கள் வெளியாகி வருகின்றன.
பிளஸ் 2 பொதுத்தேர்வில் 94.03 சதவிகிதம் மாணவ - மாணவியர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மொத்தம் தேர்வு எழுதியவர்களில் மாணவிகள் 96.38 சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர்.
மாணவர்கள் 91.45 சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தமிழில் எப்போதும் சதம் அடிப்பது மிக மிக கடினம். ஆனால் கடந்த சில வருடங்களாக சதம் அடிப்பவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. ஆனால் இந்த வருடம் சதம் அடிப்பவர்கள் எண்ணிக்கை வெகுவாக குறைந்து உள்ளது. வெறும் 2 பேர் மட்டுமே 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழில் சதம் அடித்துள்ளனர்.

இந்த தேர்வில் சதம் அடித்தவர்கள் எண்ணிக்கை பின்வருமாறு:
1. தமிழ் 2
2. ஆங்கிலம் 12
3. இயற்பியல் - 812
4. வேதியியல் - 3909
5உயிரியல் - 1494
6.கணிதம் - 690
7.தாவரவியல் - 340
8 விலங்கியல் - 154
9. கணினி அறிவியல்- 4618
10. வணிகவியல் - 5678
11. கணக்குப் பதிவியல் - 6573
12 பொருளியல் - 1760
13. கணினிப் பயன்பாடுகள் - 4051
14. வணிகக் கணிதம் மற்றும் புள்ளியியல் - 1334
தமிழ்நாட்டில் 326 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 100% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்த தேர்ச்சியில் 97.85% பெற்று விருதுநகர் முதலிடம் பிடித்து உள்ளது.
அரசு பள்ளிகள் தேர்ச்சியில் 96.45% பெற்று திருப்பூர் முதலிடம் பிடித்து உள்ளது. 12ம் வகுப்பு தேர்வில் மாற்றுத்திறனாளி மாணவர்கள் 89.20% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இந்த தேர்வு முடிவுகளை மாணவர்களின் செல்போன் எண்களுக்கு குறுஞ்செய்தியாக அனுப்பவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த மே-2022 பொதுத்தேர்வில் ஏதேனும் ஒரு பாடத்தில் 100 மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை : 23,957. இந்தாண்டு மார்ச் / ஏப்ரல் 2023 பொதுத்தேர்வில் ஏதேனும் ஒரு பாடத்தில் 100 மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை. 32,501 ஆக உள்ளது.
தமிழ்நாட்டில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 3,49,697 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழ்நாட்டில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 4,05,753 மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
புதுச்சேரி மற்றும் காரைக்காலில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 92.67% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.












Click it and Unblock the Notifications