ஆன்லைன் ரம்மி தடைக்கு ஒப்புதல்.. ஆளுநர் அடிபணிந்த ரகசியம் என்ன தெரியுமா?
சென்னை: புயலுக்குப் பின் அமைதி என்பது பழைய பழமொழி. ஆளுநருக்கு எதிரான தீர்மானத்திற்குப் பின் ஆன்லைன் ரம்மி தடைச் சட்டத்திற்கு அனுமதி என்பதே புதுமொழி.
அந்த அளவுக்கு நேற்று சட்டசபையே அனல் பறந்து அமைதியாகி இருக்கிறது. ஆளுநருக்கு எதிராக முதல்வர் ஸ்டாலின் கொண்டுவந்த தனிநபர் தீர்மானம் தலைப்புச் செய்தியாகி இருக்கிறது.
பலரும் ஆளுநரை முதல்வர் ஸ்டாலின் அடிபணிய வைத்துவிட்டார் என்கிறார்கள்? ஆளுநர் அடிபணிந்தாரா? அது பற்றி சில தலைவர்களின் கருத்தைக் கேட்டோம்.
முதலில் நம் லைனுக்கு வந்தவர் பீட்டர் அல்போன்ஸ் அவர் என்ன சொல்கிறார்? "இந்த அரிதினும் அரிதானது. ஆளுநர் மீது ஒட்டுமொத்த சட்டப்பேரவை கொண்டுவந்துள்ள நம்பிக்கை இல்லாத தீர்மானமாகத்தான் இதை நான் பார்க்கிறேன். சட்டப்பேரவை உறுப்பினர்கள் அனைவரும் கூடி இப்படி ஒரு தீர்மானத்தை நிறைவேற்றிய பிறகு அவர் பதவியில் தொடரலாமா? என்பதே பெரிய கேள்வியாக மாறியிருக்கிறது.

ஆளுநர் மாளிகைக்கும் எப்படி தொடர்பு? : இதுவே 15 ஆண்டுகளுக்கு முன்னாள் இப்படி நடந்திருந்தால் ஆளுநர் உடனே தன் பதவியிலிருந்து ராஜிநாமா செய்திருப்பார். அப்படிப் பட்ட ஆளுநர்கள்தான் அந்தக் காலத்திலிருந்தார்கள். ஆங்காங்கே சில தவறுகள் அன்றைக்கு நடந்திருக்கலாம். அதை நாம் பிரதானப் படுத்த முடியாது.
ஆனால், ஒரு மாநிலத்தின் நலனுக்கு எதிராகச் செயல்படுவதையே தன்னுடைய அன்றாட நடவடிக்கையாகக் கொண்டுள்ள ஆளுநராக இவர் இருக்கிறார். ஆனால், முதல்வர் ஸ்டாலின், இந்த விவகாரத்தில் மிகப் பொறுமையாக நடந்து கொண்டு வந்திருக்கிறார்.
பல நாள் மிகமிக சுமுகமாக நடந்து கொண்டு வந்துள்ளார். கடைசியில் இப்போது முதல்வர் ஸ்டாலின் எடுத்துள்ள நிலைப்பாடு கூட, மற்ற மாநில முதல்வர்களோடு ஒப்பிட்டுப் பார்க்கின்ற போது மிகக் குறைந்த அளவிலான நடவடிக்கையைத்தான் ஆளுநர் விஷயத்தில் எடுத்திருக்கிறார்.
சென்ற முறை தாங்கள் எழுதி அனுப்பிய உரைக்கு எதிராக சில விஷயங்களை ஆளுநர் சேர்த்துப் படித்தபோது, வரைவில் இடம்பெறாத ஆளுநரின் புதிய கருத்துகள் அவை குறிப்பில் இடம்பெறாது என்று உடனடியாக அறிவித்தார். அதைத் தேசிய அளவில் உள்ள ஊடகங்கள் ஆதரித்தன. அதைப்போன்ற ஒரு சாமர்த்தியமான ஒரு நடவடிக்கையை முதல்வர் இந்த ஆன்லைன் விவகாரத்திலும் கடைப்பிடித்திருக்கிறார்.

ஆளுநரைப் போய் ஏன் சந்திக்கிறார்கள்? : சட்டசபையில் ஆளுநரின் நடவடிக்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட இந்தத் தீர்மானம், அரசியல் சாசன சட்டம் உள்ளவரை, மத்திய மாநில உறவுகள் பற்றிப் பேசப்படும் வரை வரலாற்றில் நீங்காமல் இருக்கும்.
சிலரைப் பற்றி சட்டமன்றத்தில் விவாதிக்கக் கூடாது என்று சட்ட விதிகளே உள்ளன. உதாரணமாக, உயர்நீதிமன்ற நீதிபதிகள், பப்ளிக் சர்வீஸ் கமிஷன், மாநில ஆளுநர்கள், வேறு நாடுகளில் உள்ள நம் நாட்டுத் தூதர்கள், குடியரசுத் தலைவர் என யாரையும் சட்டமன்றத்தில் விவாதிக்கக் கூடாது.
ஆனால், இன்றைக்கு அந்த விதிகள் திருத்தப்பட்டு, ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. ஆளுநர் ordinance என்பதை ஏற்றுக் கொள்கிறார். ordinance என்பதும் act என்பதும் ஏறக்குறைய ஒன்றுதான்.
இதில் என்ன என்ன வாசகங்கள், கருத்துகள் இருக்கின்றனவோ அதேதான் ஆன்லைன் தடை அவசரச் சட்டத்திலும் இருந்தது. அவசரச் சட்டத்தை ஏற்றுக் கொண்டு ஒப்புதல் அளித்த ஆளுநர், அதைச் சட்டமாக கொண்டுவருவதற்கு ஏன் ஒப்புதல் அளிக்க மறுக்கிறார் என்று கேள்வி எழுமா இல்லையா?
இதில் நாம் கவனிக்கத்தக்கது என்னவென்றால், ஆன்லைன் ரம்மியை நடத்துபவர்கள் ஆளுநர் மாளிகைக்குச் சென்று ஆளுநரையே சந்தித்தார்கள் என்பது நாம் இதுவரை கேள்விப்படாத செய்தி?
ஆன்லைன் நடத்துபவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தின் பிரதிநிதிகளை விட்டுவிட்டு, ஆளுநரைப் போய் சந்திக்கிறார்கள்? அது ஏன்? அவர்களுக்கும் ஆளுநர் மாளிகைக்கும் எப்படி தொடர்பு?
ஒரு சட்டத்தை இரண்டாவது முறையாகச் சட்டமன்றம் நிறைவேற்றி அனுப்பிய பிறகு அதை மறுப்பதற்கான அதிகாரம் என்பது கிடையாது. சட்டமன்றம் நிறைவேற்றி அனுப்பும் சட்டத்தை அவர் மதிக்காமல் இருக்கலாம்? ஆனால் அதைக் காலில் போட்டு மிதிப்பது என்ன நியாயம்?

முதல்வர் ஸ்டாலின் சும்மா இருப்பாரா? : ஆளுநர் மாளிகையில் ஐஏஎஸ் மாணவர்களுக்குக் கருத்தரங்கு நடத்துகிறார். அப்போது அவர், 'மாநில அரசுக்கும் மத்திய அரசுக்கும் மோதல் போக்கு உருவானால், நீங்கள் மத்திய அரசு பக்கம் நிற்கவேண்டும்' என்கிறார். அவர் என்ன சொல்லி இருக்கவேண்டும். அப்படி ஒரு பிரச்சினை வந்தால், அரசியலமைப்புச் சட்டத்தின் பக்கம் நீங்கள் நிற்கவேண்டும் என்று அல்லவா சொல்ல வேண்டும்?
இப்படி ஒரு ஆளுநர் பேசினால், ஏழரைக் கோடி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சரவை சும்மா இருக்குமா? முதல்வர் சும்மா இருப்பாரா? " என ஆவேசமாகக் கேள்வி எழுப்புகிறார்
திமுக வழக்கறிஞர் அ.சரவணன், "இந்தியா அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படையில்தான் இயங்கிக் கொண்டிருக்கிறது. இதில் மாநில அரசு பெரியதா? ஒன்றிய அரசு பெரியதா? எனக் கேட்டால், அரசியலமைப்புச் சட்டம்தான் பெரியது. ஆனால், அந்த அரசியலமைப்புச் சட்டத்தைத் தொடர்ந்து அவமதிப்பதைப் போல தொடர்ந்து பேசிக் கொண்டும் செயல்பட்டுக் கொண்டும் இருக்கிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி.
ஆளுநருக்குத் தமிழ் தெரியுமா எனத் தெரியவில்லை. அவருக்கு அமைச்சர் துரைமுருகன் பேசியதை அப்படியே மொழிபெயர்த்து அதே முகபாவனைகளுடன் யாராவது பேசி காட்டினால், அடுத்த நொடியே ஆளுநர் ராஜிநாமா செய்துவிட்டுச் சென்றுவிடுவார். அந்தளவுக்குச் சட்ட வகுப்பு எடுக்கும் அளவுக்குப் பேசி உள்ளார் துரைமுருகன்" என்கிறார்
இதைத்தான் எதிர்பார்த்தேன் நான்: மூத்த பத்திரிகையாளர் இந்து ராம், "ஆளுநருக்கு எதிரான நிறைவேற்றத் தீர்மானம் தமிழ்நாடு அமைச்சரவையைப் பொறுத்தவரை ஒரு முக்கியமான முன்னேற்றம். இதைத்தான் நான் எதிர்பார்த்திருந்தேன். தொடர்ந்து பல தவறான தகவல்களை ஆளுநர் முன்வைத்து வருகிறார்.
ஒரு மசோதாவை நான் அனுப்பாமல் அப்படியே வைத்திருந்தால், அதை நிராகரித்துவிட்டேன் என்றுதான் அர்த்தம் எனக் கூறியிருக்கிறார். ஆகவே அவருக்கு அரசியலமைப்புச் சட்டம் புரிந்திருப்பதாகத் தெரியவில்லை. அப்படி அவர் புரிந்து வைத்திருந்தால், அதை அவர் மீறுகிறார் என்றே சொல்லவேண்டும்.
இந்தத் தீர்மானத்தைக் கொண்டுவந்து முதல்வர் ஸ்டாலின் நிறைவேற்றியது மிகமிகச் சரி" என்கிறார்

ஆளுநர் அடிபணிந்த ரகசியம் என்ன?: கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன், "ஒருவழியாக ஆளுநர் ஆன்லைன் ரம்மி தடைச் சட்டத்திற்கு அனுமதி கொடுத்திருக்கிறார். 'தாமதம் என்றால் நிராகரித்ததாகப் பொருள்' என்று அர்த்தம் கற்பித்த ஆளுநர்தான் ஒப்புதல் கொடுத்திருக்கிறார். இந்த ஒப்புதல் கிடைப்பதற்குள் 43 உயிர்களை நாம் இழந்திருக்கிறோம். இழந்த இந்த உயிர்களுக்கு யார் பொறுப்பு? ஆளுநர் தாமதமாக ஒப்புதல் அளித்தாலும் ஒப்புதல் ஒப்புதல்தான்.
முதல்வர் ஸ்டாலின் வலுவான ஒரு தீர்மானத்தைக் கொண்டுவந்த பிறகே இந்த ஒப்புதலை அளித்துள்ளார். இதன் மூலம் எந்த மசோதாவையும் நாங்கள் கொண்டுவந்து நிறைவேற்றாமல் விடமாட்டோம் என்பதை நேரடியாக ஆளுநருக்கு உணர்த்தியுள்ளார். அதன் விளைவாகத்தான் ஆளுநர் இந்த ஒப்புதல் அளித்துள்ளார்.
நாங்கள் ஆளுநரைக் கேட்டுக் கொள்வது, உங்களிடம் கிடப்பில் கிடக்கும் மசோதாக்களை இனியும் தாமதப்படுத்தாமல் உடனே ஒப்புதல் அளித்து அனுப்பவேண்டும் என்பதைத்தான். அது நடக்கும் என்று நம்புவோம்" என்கிறார்

ஆளுநருக்கு அந்த அருகதையில்லை?: சி.பி.எம். கே. பாலகிருஷ்ணன், "ஆளுநர் ஆர்.என். ரவி ஒவ்வொரு நாளும் சர்ச்சையைக் கிளப்புகின்றவராக இருக்கிறார். விஞ்ஞானத்திற்கு எதிராக, அறிவியலுக்கு எதிராக அவர் பேசி வருகிறார். மதச்சார்பின்மையைக் கடைப்பிடிக்கின்ற ஒரு நாடு உலகிலேயே இல்லை என்று ஒரு அபாண்டமான குற்றச்சாட்டைக் கூறுகிறார். உலகில் உள்ள 80% நாடுகள் மதச்சார்பின்மையைத்தான் கடைப்பிடிக்கின்றன. ஆனால், உண்மைக்கு மாறாக ஆளுநர் சொல்கிறார்.
அதேபோல இந்தியா என்ற ஒரு நாட்டை அரசர்களோ, மற்றவர்களோ உருவாக்கவில்லை. ரிஷிகளும் முனிவர்களும்தான் இந்தியத் தேசத்தை உருவாக்கினார்கள் என்கிறார். தமிழ்நாடு என்று சொல்ல மாட்டேன் என்கிறார். அழைப்பிதழைத் தமிழ்நாடு என்று போட மறுப்பது, அரசு அச்சடித்துக் கொடுத்துள்ள உரையில் பாதியை விட்டுவிட்டுப் படிப்பது, வேறு சில திருத்தங்களைச் செய்து படிப்பது எனச் சட்டம் வகுத்துள்ள விதிகளை எல்லாம் மீறி நடந்து கொண்டுவருகிறார்.
ஏதோ ஒரு போட்டி அரசியல்வாதி போல் நடந்து கொள்கிறார். தமிழ்நாடு அரசங்கத்தை முடக்கவே அவர் திட்டமிட்டு வருகிறார். இந்தச் சர்ச்சை 7 மாதங்களாக நீடித்துக் கொண்டுள்ளது. நேற்று அனுமதி தந்ததற்குப் பதிலாக, இந்த மசோதா அனுப்பப் பட்ட ஜனவரி மாதமே வழங்கி இருந்தால் 40 உயிர்களுக்கு மேல் காப்பாற்றி இருக்கலாம். அதற்கான அவசியமே ஏற்பட்டு இருக்காது" என்கிறார்












Click it and Unblock the Notifications