டிவியை உடைச்சேனா? ரிமோட் இன்னும் என் கையில் தான் இருக்கு.. விமர்சனங்களுக்கு கமல்ஹாசன் ‘நறுக்’ பதில்!
சென்னை: 2019 லோக்சபா தேர்தலின்போது திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல்வாதிகள் டிவியில் பேசும்போது ரிமோட்டை விட்டு எறிந்து உடைப்பது போல மநீம தலைவர் கமல்ஹாசன் பிரச்சார வீடியோ வெளியிட்டார். இந்நிலையில் அது குறித்த விமர்சனங்களுக்கு கமல்ஹாசன் தற்போது பதில் அளித்துள்ளார்.
நடிகர் கமல்ஹாசன் கடந்த 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி 21-ல் மக்கள் நீதி மய்யம் கட்சியை தொடங்கினார். ஆரம்பம் முதலே அதிமுக, திமுகவுக்கு மாற்று என்ற கோஷத்துடன் மக்கள் நீதி மய்யம் அரசியல் களத்தை சந்தித்தது. கட்சி தொடங்கிய ஓராண்டிலே மக்களவைத் தேர்தலை சந்தித்தது. 2019 ஆம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி தனித்து போட்டியிட்டது.

மக்கள் நீதி மய்யம் பிரச்சார வீடியோ: மக்களவை தேர்தலின் போது திமுக தலைவர் ஸ்டாலின், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பாஜக தேசிய பொதுச்செயலாளர் எச்.ராஜா ஆகியோர் பேசும் வார்த்தைகளை கமல்ஹாசன் டிவியில் பார்ப்பதை போலவும், இதனால் கோபமடைந்து ரிமோட்டை விட்டு எறிந்து டிவியை உடைப்பது போலவும், மக்கள் நீதி மய்யம் ஒரு தேர்தல் விளம்பரத்தை கடந்த தேர்தலின்போது வெளியிட்டது.
டிவியை உடைத்த கமல்: டிவியை ரிமோட்டால் எறிந்து உடைக்கும் கமல்ஹாசன் தொடர்ந்து பேசுகையில், "முடிவு பண்ணிட்டீங்களா? யாருக்கு ஓட்டு போடப் போறீங்க? குடும்ப அரசியல் என்ற பெயரில் நாட்டையே குழிதோண்டி புதைச்சாங்களே அவங்களுக்கா? இல்ல நம்ப உரிமைக்காக போராடும்போது நம்பள அடிச்சி துரத்தினார்களே அவங்களுக்கா? நலத்திட்டம் என்ற பெயரில் நிலத்தையே நாசம் செய்து விவசாயிகளை அம்மணமாக்கி நாட்டை தலைகுனிய வைத்தார்களே அவங்களுக்கா? இல்ல கார்ப்பரேட் கைக்கூலியாக மாறி பணத்திற்காக நம்ப மக்களையே சுட்டுக் கொலை செய்தார்களே அவர்களுக்கா? யாருக்கு ஓட்டு போடப் போறீங்க?
நீ என்னடா சொல்றது. எங்களுக்கு தெரியும். எங்க அப்பா, அம்மா யாருக்கு ஓட்டு போட சொல்றாங்களோ அவங்களுக்குதான் ஓட்டு போடுவோம் அப்படின்னு நீங்க சொல்றது கேட்கிறது. சரிதான், அம்மா அப்பா சொல்றபடி கேட்கணும். ஆனால் எந்த அம்மா அப்பா சொல்றத கேட்கணும்னு நான் சொல்றேன்.
கமல் விளம்பரம்: மொத்த அரசாங்கமும் சேர்ந்து நீட் தேர்வு என்ற பெயரில் ஒரு பொண்ண கொலை செய்தார்களே அந்தப் பெண்னோட அப்பா அம்மாகிட்ட கேளுங்க. அவங்க சொல்வாங்க யாருக்கு போடக்கூடாது என்று. நாட்டை ஆள தகுதியே இல்லாத இந்த நாட்டில் அதை தட்டி கேட்கிற ஒருத்தனா உங்களில் ஒருத்தனா கேட்கிறேன். யாருக்கு ஓட்டு போடப் போறீங்க?" எனப் பேசி இருந்தார்.
இந்த விளம்பரம் அப்போது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அந்த தேர்தலில் மநீம தோல்வி அடைந்தாலும் நான்கு தொகுதிகளில் 1 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற்று புதிய அத்தியாயத்தை தொடங்கியது. மக்கள் நீதி மய்யம் தொடங்கப்பட்ட 14 மாதங்களிலேயே தேர்தலை சந்தித்து கணிசமாக வாக்கு வங்கியை நிரூபித்து குறிப்பிடத்தக்க கட்சியாக உருவெடுத்தது.
திமுக கூட்டணியில் மநீம: தொடர்ந்து, 2021 சட்டமன்றத் தேர்தலை சந்தித்தது மக்கள் நீதி மய்யம். இந்த முறை சமத்துவ மக்கள் கட்சி, இந்திய ஜனநாயக கட்சிகளுடன் கூட்டணி அமைத்து 154 தொகுதிகளில் போட்டியிட்டது மநீம. கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்ட நடிகர் கமல்ஹாசன் சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் பாஜகவின் வானதி சீனிவாசனிடம் தோல்வி அடைந்தார். திமுக, அதிமுகவிற்கு மாற்றாக அரசியலில் களம் காண முயன்ற கமல்ஹாசன் தொடர்ந்து இரண்டு தேர்தல்களில் தோல்வியை தழுவியதால், அக்கட்சியின் முன்னணி நிர்வாகிகள் பலரும் வெவ்வேறு கட்சிகளுக்கு தாவினார்கள்.
இந்த சூழலில் கூட்டணி அரசியல் என்ற பாதைக்கு திரும்பியுள்ளார் கமல்ஹாசன். வரும் மக்களவைத் தேர்தலில் திமுக உடன் மக்கள் நீதி மய்யம் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. தொடர்ந்து, திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலினை சந்தித்து திமுக கூட்டணியில் இணைந்தார் நடிகர் கமல்ஹாசன். மக்கள் நீதி மய்யத்திற்கு ஒரு ராஜ்யசபா தொகுதியை திமுக வழங்கியுள்ளது.
ராஜ்யசபா சீட்: இந்த முறை மக்களவைத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடவில்லை. எனினும், திமுக கூட்டணிக்கு ஆதரவாக கமல்ஹாசன் பிரச்சாரம் செய்யவிருக்கிறார். ஸ்டாலின் பேசும் டிவியை ரிமோட்டை விட்டு எறிந்த கமல்ஹாசன் தற்போது திமுக கூட்டணியில் இணைந்துள்ளது குறித்து நெட்டிசன்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், சென்னையில் மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகளுடன் தேர்தல் பிரச்சார வழிகாட்டுதல் தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் மநீம தலைவர் கமல்ஹாசன் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், ரிமோட்டை வைத்து டிவியை உடைத்தவர் இப்போது திமுகவுடன் சேர்ந்திருப்பதாக விமர்சிப்பது பற்றி பேசினார்.
டிவியை உடைத்தது ஏன்?: கமல்ஹாசன் பேசுகையில், "சந்தர்ப்பம் என்பது ஒன்று. வாதம் என்பது ஒன்று இருக்கலாம். நம் வாதத்தை சந்தர்ப்பத்திற்கு ஏற்றவாறு எல்லாம் மாற்ற முடியாது. அப்படி என்றால் டிவியை ரிமோட் எடுத்து அடித்து உடைத்தீர்களே.. அந்த ஆள் தானே திமுக கூட்டணிக்கு செல்வது என விமர்சித்தார்கள். ஐயா, ரிமோட் இன்னும் என் கையில் தான் இருக்கிறது. டி.வியும் அங்கேயே தான் இருக்கிறது. ஏனென்றால் நம்ம வீட்டு ரிமோட், நம்ம வீட்டு டி.வி.
ஆனால், அந்த டி.விக்கான மின்சாரத்தையும், ரிமோட்டுக்கான பேட்டரியையும் உருவப்போகும் ஒரு சக்தி ஒன்றியத்தில் உருவாகிக் கொண்டிருக்கிறது. ரிமோட்டை இனிமேல் நான் எறிந்தால் என்ன? வைத்திருந்தால் என்ன? அந்த மாதிரி செய்கைகளுக்கு இனி அர்த்தமே இல்லாமல் போய்விடும். எனவே இப்போதைக்கு முக்கியம் எதுவென்று பார்க்க வேண்டும். தன்மானத்தை விட்டு தலைவணங்க மாட்டேன்." என்றார்.
-
5 பவுன் தங்கம்.. ஒரு லட்சம் ரொக்கம்! பரிசு மழை அறிவித்த ஓபிஎஸ்.. போடி தொகுதி திமுகவினர் உற்சாகம் -
தவெகவில் சீட் கிடைக்காத விரக்தி.. திமுகவில் இணைந்தார் அஜிதா! பின்னணியில் அனிதா! -
கோவையின் அஸ்திவாரத்திலேயே கை வைத்த செந்தில் பாலாஜி.. மொத்தமாக மாறும் களம் -
“இனி அறுவடை தான்.. தோழமைக் கட்சியினருடன் இணைந்து வேலை செய்யுங்க”.. ஸ்டாலின் கொடுத்த மெசேஜ்! -
தேர்தல் நேரத்தில் கல்லா கட்டும் 'குட்டி குட்டி' நிறுவனங்கள்.. சத்தமே இல்லாமல் நடக்கும் மெகா பிஸ்னஸ்! -
திடீரென மயங்கிய முதியவர்.. யோசிக்காமல் அவிநாசி இளம் திமுக பெண் வேட்பாளர் செய்த செயல்.. நெகிழ்ச்சி -
EVM இயந்திரத்தில்.. வேட்பாளர்களின் பெயர் வரிசை தீர்மானிக்கப்படுவது எப்படி? சுவாரசிய தகவல்! -
மீண்டும் டிஆர்பி ராஜா அமைச்சர்..? கோரஸாக வந்த குரல்.. பிரச்சாரத்திலேயே உறுதி கொடுத்த உதயநிதி! -
ராகுல் காந்தி தமிழகத்திற்கு வர மறுத்துவிட்டாரா? பிரச்சாரம் தாமதமாவது ஏன்? - கிரிஷ் சோடங்கர் விளக்கம் -
திமுகவை தொட முடியுமா என்ன? விஜய்க்கு சிலுவை ஆசீர்வாதம்! அப்போ சிறுபான்மையினர் ஓட்டு யாருக்கு -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
ரூ.8 ஆயிரத்துக்கான கூப்பன் என அறிவித்தது இதற்காகத்தான்.. கனிமொழி பிரசாரம்!












Click it and Unblock the Notifications