ஆளுநர் மாளிகைக்குச் சென்ற அமைச்சர் பொன்முடி.. திடீர் விசிட்டுக்கு பின்னணி என்ன? காரணமே வேற!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு அமைச்சர் பொன்முடி சென்றுள்ளார். ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில், ஆளுநர் மாளிகைக்குச் சென்றுள்ளார் அமைச்சர் பொன்முடி. பொன்முடி ஆளுநர் மாளிகைக்குச் சென்றதற்கான காரணம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

சென்னை கிண்டியில் அமைந்துள்ள ஆளுநர் மாளிகை வாயிலில் நேற்று பிற்பகல் நேரத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் நடந்தது. இதையடுத்து, பெட்ரொல் குண்டு வீசியதாக சென்னை தேனாம்பேட்டையைச் சேர்ந்த ரௌடி கருக்கா வினோத் உடனடியாக கைது செய்யப்பட்டார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆளுநர் மாளிகை மீதான இந்த தாக்குதல் முயற்சிக்கு அரசியல் தலைவர்கள் பலரும் கடும் கண்டனங்களைத் தெரிவித்தனர்.

Why did minister ponmudi visit raj bhavan today

இந்தச் சம்பவம் தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கம் அளித்த சென்னை தெற்கு கூடுதல் காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா, "சர்தார் படேல் சாலையில் ஒருவர், ராஜ்பவன் நுழைவு வாயில் பகுதியை குறிவைத்து, பெட்ரோல் நிரப்பிய பாட்டிலை வீசுவதற்கு முயற்சித்தார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர் அந்த நபரை பார்த்துவிட்டதால், அந்த நபர் எதிர் திசையில் உள்ள ஹைவே ரிசர்ச் சென்டர் என்ற பகுதியில் இருந்து அந்த பாட்டிலை வீச முயற்சித்தார். அப்போது பிரதான நுழைவு வாயில் பகுதியிலும், வெளியிலும் இருந்த காவலர்கள் அந்த நபரை சுற்றி வளைத்தனர்.

அந்த நபரை போலீசார் பிடித்தபோதும், அவர் ஒரு பெட்ரோல் நிரப்பப்பட்ட பாட்டிலை வீசினார். அதிலிருந்து எந்தவிதமான தீயும் வரவில்லை. அந்த பகுதியில் பேரிகார்டு அருகே அப்படியே உடைந்து கிடந்தது. அவரை பிடித்தபோது, மேலும் 4 பாட்டில்கள் அவரிடம் இருந்தன. அவற்றை போலீசார் பறிமுதல் செய்துவிட்டனர். இதில் யாரும் பாதிக்கப்படவில்லை. எந்தவிதமான சேதமும் ஏற்படவில்லை." எனத் தெரிவித்தார்.

ஆனால், ஆளுநர் மாளிகையின் அதிகாரப்பூர்வ எக்ஸ் (ட்விட்டர்) சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்ட பதிவில், "ஆளுநர் மாளிகை மீது இன்று பிற்பகலில் தாக்குதல் நடத்தப்பட்டது. வெடிகுண்டுகளை ஏந்திய விஷமிகள் பிரதான வாயில் வழியாக உள்ளே நுழைய முயன்றனர். எனினும் உஷாராக இருந்த காவலர்கள் தடுத்ததால், இரண்டு பெட்ரோல் குண்டுகளை ராஜ் பவனுக்குள் வீசி விட்டு தாக்குதல் நடத்தியவர்கள் தப்பினர்" என்று தெரிவிக்கப்பட்டது.

மேலும், பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் தொடர்பாக ஆளுநர் மாளிகை சார்பில் சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்திலும், டிஜிபி அலுவலகத்திலும் புகார் அளிக்கப்பட்டது. அதில், "சில விஷமிகள், பெட்ரோல் குண்டுகளுடன் ஆளுநர் மாளிகையின் பிரதான நுழைவாயில் 1 வழியாக ராஜ் பவனுக்குள் நுழைய முயன்றனர். பாதுகாப்பு காவலர்கள் அவர்களைத் தடுத்தனர். அப்போது ஒரு பெட்ரோல் குண்டை பிரதான நுழைவாயில் பகுதியில் வீசியுள்ளனர். அந்த குண்டு பெரிய சத்தத்துடன் வெடித்தது. இதையடுத்து காவலர்கள் அந்த நபர்களை பிடிக்க முயன்ற நிலையில், மீண்டும் மற்றொரு பெட்ரோல் குண்டு வெடித்தது. இதில் ஆளுநர் மாளிகை பிரதான நுழைவாயில் பகுதி கடுமையாக சேதமடைந்துள்ளது." எனத் தெரிவிக்கப்பட்டது.

காவல்துறை அளித்த விளக்கத்திற்கும், ஆளுநர் மாளிகையின் பதிவு, புகார் இடையேயும் ஏகப்பட்ட முரண்பாடுகள் இருந்தன. அதோடு, ஆளுநர் மாளிகை காவல்துறை மீது குற்றம்சாட்டியும் எக்ஸ் தளத்தில் பதிவு வெளியிட்டது. இது தொடர்பாக ஆளுநர் மாளிகை வெளியிட்ட பதிவில், "ராஜ்பவனில் நடந்த தாக்குதல் குறித்த புகாரை காவல் துறை பதிவு செய்யவில்லை. இந்த சம்பவம் குறித்து தாமாக முன்வந்து பதிவு செய்யப்பட்ட புகார், ஆளுநர் மாளிகை முன்பு நடந்த தாக்குதலை சாதாரணமான நாசகார செயலாக நீர்த்துப்போகச் செய்துவிட்டது. இந்த வழக்கில், அவசரகதியில் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, நள்ளிரவில் மாஜிஸ்திரேட்டை எழுப்பி குற்றம்சாட்டப்பட்டவர் சிறையில் அடைக்கப்பட்டுவிட்டதால், இந்த தாக்குதலின் பின்னணியில் இருப்பவர்களை அம்பலப்படுத்த வேண்டிய விரிவான விசாரணை தவிர்க்கப்பட்டுள்ளது. நியாயமான விசாரணை தொடங்குவதற்கு முன்பாகவே இந்த விசாரணை கொல்லப்பட்டுள்ளது" என்று அதில் பதிவிட்டது.

இவ்வாறான சூழலில், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இன்று காலை ஆளுநர் மாளிகைக்குச் சென்றுள்ளார். ஏற்கனவே, பல்கலைக்கழக விவகாரங்களில் உயர்கல்வித்துறை அமைச்சருக்கும், ஆளுநர் மாளிகைக்கும் இடையே கருத்து மோதல்கள் நிலவியுள்ளன. இந்நிலையில், அசாதாரண சூழலில் அமைச்சர் பொன்முடி ஆளுநர் மாளிகைக்குச் சென்றது பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆனால், அமைச்சர் பொன்முடி இன்று ஆளுநர் மாளிகைக்குச் சென்றதற்கான காரணமே வேறு என்கிறார்கள். குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பெங்களூரில் இருந்து விமானம் மூலம் நேற்று மாலை சென்னை வந்தடைந்தார். விமான நிலையத்தில் அவரை ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் வரவேற்றனர். அங்கிருந்து கிண்டி ஆளுநர் மாளிகைக்கு காரில் சென்ற ஜனாதிபதி திரௌபதி முர்மு, அங்கு தங்கியுள்ளார்.

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை இன்று காலை முக்கிய பிரமுகர்கள் சந்தித்துப் பேசியுள்ளனர். தொடர்ந்து 11 மணியளவில் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் 8-வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கும் குடியரசுத் தலைவர் முர்மு, மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி உரையாற்றுகிறார். இந்நிகழ்வில் உயர்கல்வித்துறை அமைச்சர் உள்ளிட்டோரும் பங்கேற்கின்றனர். இதையொட்டியே, அமைச்சர் பொன்முடி ஆளுநர் மாளிகைக்குச் சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+